உள்ளூர் செய்திகள்

உள்ளத்தில் நல்ல உள்ளம்!

கோபத்தின் உச்சியில் இருந்தாள் கவிதா. அவளது கோபத்தை அறிந்தும் பேப்பர் படிப்பது போல், பாவனை செய்து கொண்டிருந்தான் சரவணன். எப்போது வேண்டுமானாலும், கவிதா பொங்கி எழக் கூடும் என்பதால், எப்படி அவளை சமாதானப்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தான். அதேசமயம், அவனுக்கு, தன் தம்பி செல்வத்தின் மீதும், கோபமாக வந்தது.முதலிலே இருவரும் பேசி முடிவெடுத்த பின், இப்போது வந்து,'என் மனைவி பவானிக்கு உடம்புக்கு முடியல. சமைக்கறதுக்கும், துணி துவைக்கவுமே ஆள் தேவைப்படுற நிலையில், படுத்த படுக்கையாக இருக்கும் அப்பாவை எப்படி வெச்சுக்க முடியும்...' என்று, மறுத்துவிட்டான்...'சரிடா... நான் மட்டும் எப்படிடா வெச்சுக்கிறது. உன் அண்ணியோ வேலைக்கு போறவ. முன்னமே ஆளுக்கு ஆறு மாசம்ன்னு பேசினது தான... இப்ப என் பங்கு முடிஞ்சதும், நீ, காலை வாரினா எப்படிடா,'' என்று, பாவமாக கேட்டான் சரவணன்.'ஆமாண்ணே ஒத்துக்கிட்டேன் தான். இப்ப, என் நிலைமை மாறிப் போச்சு. வேணும்ன்னா ஒண்ணு செய்யலாம். சிட்டியில நிறைய முதியோர் இல்லம், மெடிக்கல் கேர் கிடைக்கிற மாதிரி இருக்கு. பேசாம, அங்க அப்பாவை சேர்த்துடலாம். பணத்தை, நாம இரண்டு பேரும் பிரித்து கொடுத்துடலாம்...' என்று கூறினான் செல்வம்.இதைக் கேட்டதும், அதிர்ந்து போனான் சரவணன். அதற்கு பின், செல்வத்திடம் எதுவும் பேசவில்லை. இந்த விஷயம் எதுவும் தெரியாத கவிதா, 'என்னங்க, மாசம் பொறந்து பத்து நாள் ஆகுது. சொன்னபடி அப்பாவை கூட்டிக்கிட்டு போக வேண்டாமா?' என்று நச்சரிக்க ஆரம்பித்தாள். 'தெரியல கவிதா, கொஞ்சம் பொறு பாக்கலாம்; இல்லாட்டி, கேட்டுரலாம்...' என்று, சொல்லி சமாளித்தான் சரவணன். அதற்குள் பொறுக்க முடியாமல், கவிதாவே பவானியிடம் கேட்டு விட்டாள்.அவள், எல்லா விஷயத்தையும் போட்டு உடைத்து விட்டாள்.பவானியின் பதிலால், கவிதா உக்கிரமாகி, 'வரட்டும் இந்த மனுஷன்...' என்று கொந்தளித்துக் கொண்டிருந்தாள்.அதற்குள், பவானி, செல்வத்திடம் கூற, செல்வம், அண்ணனிடம் கூறி உஷார்படுத்தினான்.சரவணனின் கையிலிருந்து பேப்பரை, 'சடக்' கென்று பிடுங்கினாள் கவிதா. சரவணன் தயக்கமாக பார்க்க, ''உங்க தம்பி, புத்திய காட்டிட்டாரு பாத்தீங்களா... இளிச்சவாயன் மாதிரி, ஆறு மாசம் நாம வெச்சிருந்தோம். ரூம் நாத்தமடிச்சாலும், பரவால்லன்னு விட்டுருந்தோம். இப்ப என்னாச்சு... வாயைத் திறந்து பேசுங்க,'' என்று சரவணனின் சட்டையை பிடிக்காத குறையாக கேட்டாள். தன் அப்பா, இப்படி ஏலம் போடப்படுவதை நினைத்து, சரவணனின் மனசு வலித்தது. ஒத்துக் கொண்டது போல், கவிதா ஆறு மாதம், தன் மாமனாரை பிடித்தோ, பிடிக்காமலோ கவனித்தாள். அப்பாவின் படுக்கையை சுத்தம் செய்வது, முதுகில் புண் வராமல் இருக்க பவுடர் போடுவது, 'பெட்பேன்' வைப்பது போன்ற வேலைகளை, சரவணன் செய்தாலும், காபி, டிபன் தருவது, அறையை சுத்தம் செய்வது என்று, ஓரளவு தன் கடமையை செய்தாள் கவிதா. ஆனால், பவானியும், செல்வமும் இப்படி மறுப்பர் என்று நினைக்கவில்லை.''ச...ர...வ...ணா...'' அப்பா கூப்பிடும் குரல் கேட்டு, தன் அப்பா இருந்த அறைக்கு சென்றான் சரவணன்.தன்னை தோளில் சுமந்து, ஊர் சுற்றிய அப்பா உடல் பலம், மனபலம் குன்றி, பாதி உருவமாகி, கட்டிலில் ஏதோ ஒரு துணி மூட்டை போல படுத்திருந்தார். பற்கள் காணாமல் போயிருந்தன. கண்ணும், வாயும் திறந்த நிலையில், 'ச...ர...வ...ணா...' என்ற குரல், ஈனஸ்வரத்தில் வந்து கொண்டிருந்தது.சரவணன் அப்பா அருகில் சென்று, அவர் கைகளை பற்றி, ''அப்பா என்ன வேணும்?'' என, சத்தமாக கேட்டான். விட்டத்தை பார்த்த அப்பா, பார்வையை, கஷ்டப்பட்டு சரவணன் பக்கம் திருப்பினார். அவரால் எதுவும் பேச இயலவில்லை. பல மாதங்களாக, இதே நிலை தான். என்னவோ சொல்ல வருகிறார்; ஆனால், முடியவில்லை. சரவணன் சற்று நேரம் அமர்ந்து, பின், வெளியே வந்து விட்டான். ''என்னங்க, இப்ப என்ன செய்யப் போறீங்க?'' விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் கவிதா.ஒரு நிமிடம் எதையோ யோசித்த சரவணன், கவிதாவை உற்றுப் பார்த்தான். பின், ''கவிதா, இனி, மூடி மறைச்சு பேசி புண்ணியமில்ல. அப்பாவ வெச்சுக்க, செல்வம் விரும்பல. அவரை ஏதாவது ஒரு இல்லத்துல விடலாம்ன்னு சொல்றான். அவனும், அவன் மனைவியும் இந்த விஷயத்துல ஒரு முடிவுக்கு வந்துட்டாங்க. இப்ப, நாம தான் முடிவு செய்யணும். அதாவது, நம்ப கூடவே அப்பாவை வெச்சுக்கலாமா இல்ல, ஏதாவது, ஒரு ஹோம்ல விடலாமா, நீயே சொல்லு,'' என்று தீர்மானமாக கேட்டான்.சற்று துணுக்குற்றாள் கவிதா. 'இப்படி நேரடியா கேட்டால், எப்படி உடனே பதில் சொல்வது...' யோசித்தாள். 'பாவ, புண்ணியத்திற்கு அஞ்சி, இரக்கப்பட்டு, 'நாமளே அப்பாவை வெச்சுக்கலாம்'ன்னு சொல்லலாந்தான். நம் மீது ஒரு மதிப்பும் வரக்கூடும். ஆனால், நடைமுறையில், இந்த நோயாளி மாமனாரை பராமரிக்கிறது அவ்வளவு எளிதல்ல. பெத்த மகனே ஹோம்ல விடலாமான்னு கேட்கும் போது, நாமளும், அதை சரின்னு சொல்லிட்டு போகலாமே...' என்று நினைத்தவள், ''எனக்கு கூட, உங்க தம்பி சொல்றது, நல்ல யோசனையா தான் தோணுதுங்க. நாம அடிக்கடி போய் பார்க்க வசதியா, கிட்டயே ஏதாவது ஒரு ஹோம்ல சேக்கலாம்ங்க, இப்படி சொல்றதுனால என்னை தப்பா நினைச்சுக்காதீங்க,'' என்றாள்.'' சரி... என் மனச கல்லாக்கிட்டாவது அத செய்யறேன். ஒரு வாரம் டயம் கொடு,'' என்றான் சரவணன்.அந்தப் பிரச்னை, அப்போது ஒரு முடிவுக்கு வந்தது. ஒருநாள்...'பெருந்தேவி முதியோர் இல்லம்' என்ற பெரிய கட்டடத்தின் முன், நின்று கொண்டிருந்தான் சரவணன். 'வாசல் வரை வந்தாச்சு. இனி, உள்ளே செல்ல என்ன தயக்கம்...' என்று நினைத்து, உள்ளே சென்றான். பத்துக்கு பத்து அறைகளில், அறைக்கு இரு முதியவர்கள் வீதம், தங்க வைக்கப்பட்டிருந்தனர். ''தம்பி, நீங்க சரவணன் தானே?'' அங்கிருந்த முதியவர் ஒருவர் கேட்க, அவரை நிமிர்ந்து பார்த்தான்.''தம்பி, என்ன தெரியல... நான் தான் நமச்சிவாயம். உங்கப்பாவோட நண்பர். உங்க வீட்டுக்கு, பல தடவ வந்திருக்கேனே... ஞாபகமில்ல?''இப்போது, நினைவு வந்தது. அப்பாவின் அலுவலக நண்பர். அவருக்கு குழந்தைகள் இல்லன்னு கூட, ஒருமுறை அப்பா சொல்லியிருந்தார். 'இங்கு என்ன விஷயமாய் வந்தாய்' என்று கேட்டால், என்ன சொல்வது... பேசாமல் தெரியாது போல் காட்டிக் கொள்வோமா... ஒரு வேளை, அப்பாவை இங்கே சேர்க்கும்படி ஆகி விட்டால்!'பல குழப்பங்களுடன் தெளிவற்று, விழித்தபடி நின்றான் சரவணன், '' தம்பி, இன்னுமா உனக்கு ஞாபகம் வரலே. சரி, செல்வம் எப்படி இருக்கான். அப்பா நல்லா இருக்காரா... ம்... எனக்கு தான் யாருமில்லன்னு ஆயிடுச்சு இங்க வந்திட்டேன். ஆனா, உங்கப்பாவுக்கு என்ன... ரெண்டு சிங்கக்குட்டிங்க. ஆளுக்கு கொஞ்ச நாள் வெச்சுக்கிட்டாலும் ஆச்சு. முடிஞ்சா, அப்பாவை வந்து பாக்க சொல்றியா தம்பி,'' விடாமல் பேசிக் கொண்டே இருந்தார் நமச்சிவாயம்.''ஐயா, நான், இங்க வேற ஒரு வேலையா வந்தேன். அப்புறம் பாக்கலாம்,'' என்று, பொத்தாம் பொதுவாக சொல்லி, நழுவப் பார்த்தான் சரவணன். நமச்சிவாயம் விடவில்லை.''தம்பி, அப்பா ஒரு விஷயத்தை உன்கிட்ட சொல்லப்போறேன்னு சொல்லிக்கிட்டிருந்தாரே... சொன்னாரா?'' என்று கேட்க, சரவணன் சட்டென்று நின்று, '' நீங்க எந்த விஷயத்த பத்தி கேட்கிறீங்க?'' எனறு கேட்டான்.''அட, அதாம்பா உன்னபத்தி!''''என்னைப்பத்தியா... ஏன் எனக்கென்ன... அப்பா ஏதும் சொல்லலியே,'' என்றான் சரவணன் ''ஓஹோ... இன்னும் சொல்லல போல,'' என்று, தனக்குள் முனகிக் கொண்ட நமச்சிவாயம், ''சரி தம்பி, விடு... நான் ஏதோ உளறிட்டேன்,'' என்றார். சரவணனுக்கு இருப்பு கொள்ளவில்லை.''ஐயா... தப்பா நினைக்காதீங்க. அப்பாவுக்கு இப்ப ரொம்ப முடியல; படுத்த படுக்கையாயிட்டாரு; ஞாபகமும் ரொம்ப இல்ல; வீட்டுல வச்சு பாத்துக்க, சூழ்நிலை சரியில்ல. அதான், இந்த ஹோம் பத்தி விசாரிச்சிட்டு போலாம்ன்னு வந்தேன். ஆனா, நீங்க ஏதோ சொல்ல வந்து, தயங்கறீங்க. நான் அவரோட மூத்த மகன். என்கிட்ட சொல்லக்கூடாத விஷயமா?'' என்றான்.''என்னப்பா சொல்ற... அப்பாவை இங்க சேர்க்கப்போறியா... செல்வம் சரின்னுட்டானா... ஆச்சரியமா இருக்கே! காலம் மாறுது... ஆனா, செல்வத்த விட்டுத்தள்ளு. நீ, அவருக்கு ரொம்ப கடமைப்பட்டிருக்கப்பா... அவர் காலம் முடியும் வரை அவரை நீ, வீட்ல வச்சு பார்த்துக்கிறது தான், நல்லது. அப்புறம் உன் இஷ்டம்,'' என்றார் நமச்சிவாயம்.''ஐயா, இங்க அப்பாவை சேர்க்க, நான் முழு மனசோடவா ஒத்துப்பேன். எனக்கு சூழ்நிலை ஒத்துழைக்க வேண்டாமா... கூடப் பிறந்த தம்பியே, உதவி செய்ய மறுக்கிறான். நான் என்ன செய்யறது... அதான், வேறு வழியில்லாம இந்த யோசனைக்கு வந்தேன்,'' என்று, கம்மிய குரலில் சொன்னான் சரவணன்.''தம்பி, நீ ஆயிரம் காரணம் சொன்னாலும், உனக்கு அந்த எண்ணமே வரக் கூடாது,'' உறுதியாகச் சொன்னார் நமச்சிவாயம்.''ஏன் இவ்வளவு உறுதியா சொல்றீங்க?'' சரவணன் கேட்க, நமச்சிவாயம் அவனை உற்றுப் பார்த்து, ''தம்பி, நான் இத சொல்லித் தான் ஆகணும். நானும் சொல்லாம, உங்கப்பாவும் சொல்லலேன்னா, ஒரு உண்மை யாருக்குமே தெரியாம போயிடும். உங்கம்மா முதல் பிரசவத்தப்ப நானும், உங்கப்பா கூட, ஆஸ்பத்திரியில தான் இருந்தேன்.''நமச்சிவாயம் சொல்ல சொல்ல, சரவணனுக்கு, பாதி உயிர் போனது போல், நிலைகுலைந்து போனான். 'அப்பா, கொஞ்ச நாட்களாக ஏதோ சொல்ல வருவது போல் தவிப்பது இதுதானோ!'''என்ன விசாரிச்சீங்களா... எப்ப சேர்க்கணும்; எவ்வளவு ரூபா கட்டணும்,'' வீட்டிற்குள் நுழைந்ததுமே, கேட்டாள் கவிதா. சிவந்த கண்களுடன், அவளை முறைத்த சரவணன்.''கவிதா, இனிமே அந்த எண்ணத்த விடு. அப்பா இனி நம்ம கூட தான் இருப்பாரு. இல்ல, என் கூடத் தான் இருப்பாரு. இது உறுதி. அவர எங்கயும் விட மாட்டேன். செல்வம் மாதிரி, என்னால இருக்க முடியாது. இதுக்கு ஒத்துக்கிட்டா நீ இங்க இரு. இல்ல, உன் வீட்டுக்கு போ... என்னடா, இப்படி பேசறானேன்னு நினைக்காத. நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும், எங்கப்பாவுக்கு என்னோட கடனை அடைக்க முடியாது. செல்வத்துக்கு இல்லாத அக்கறை, எனக்கு மட்டும் ஏன்னு நினைப்பே. ஏன்னா, செல்வம் அவரோட சொந்த மகன். நான் அவரோட தத்துப்பிள்ளை. ஆமாம், இப்ப தான் உண்மை தெரிஞ்சுது. அதுவும், நம்பிக்கையான அவரோட நண்பர் மூலமா! ''முதல் பிரசவத்துல, எங்கம்மாவுக்கு குழந்தை இறந்து பிறக்க, ரொம்ப நாள் கழிச்சு, பிறந்த குழந்தையும் இப்படி ஆயிடிச்சேன்னு, எங்கப்பா தவிக்க, அப்ப, அதே ஆஸ்பத்திரியில் ஒரு ஏழை தம்பதிங்க, அதான் என்னோட அப்பா, அம்மா என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாங்க. அப்ப, டாக்டருங்க ஒத்துழைப்போட, என்னை, தன் மகனா ஏத்துக்கிட்டு, அம்மாகிட்ட என்னை சேத்துட்டாரு எங்கப்பா. இதுவரைக்கும், அந்த நண்பரை தவிர, இது யாருக்கும் தெரியாது. ஆனாலும், என்னை, எந்தக் குறையுமில்லாம, இதுநாள் வரைக்கும், படிப்பு, பண்பு, அந்தஸ்துன்னு எல்லாமும் கொடுத்திருக்காரு. அப்படி, நான் வரலேன்னா, எங்கேயோ ஒரு அனாதை விடுதியில், என் வாழ்க்கை எப்படியோ போயிருக்கும்.''செல்வம் எங்கப்பாவோட சொந்த மகன். அந்தக் கடமையில அவனை வளர்த்தாரு. ஆனா, என்னை, செல்வத்தை விட உயர்வாகவே வளர்த்தாரு. தத்துப்பிள்ளைன்னு நினைக்கவே இல்லை. அனாதையான எனக்கு, பெத்தவங்க பாசத்தை காட்டின என் அப்பாவுக்கு, என்ன கைமாறு செய்ய முடியும் கவிதா... இவ்வளவு தெரிஞ்சும், ஹோம்ல கொண்டு விட்டா, அந்த பாவம் நம்மள சும்மா விடுமா... இனி, என்னை, இந்த விஷயத்துல வற்புறுத்தாத,'' என்றான் உறுதியாக.பாசமும், கவலையும் பொங்க, கண்ணீருடன், தன் அப்பா இருக்கும் அறைக்குள் நுழைந்தான் சரவணன்.கவிதாவிற்கு புரிந்தது. பெற்ற மகனுக்கும் மேலாக வளர்த்து, ஆளாக்கிய அந்த மனிதருக்கு, சரவணன் நன்றி பாராட்டுவது நியாயமாகப்பட்டது. தானும், அதற்கு ஒத்துழைப்பதே, ஒரு மருமகளின் கடமை என்று உணர்ந்தாள்.கீதா சீனிவாசன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !