பசுமை நிறைந்த நினைவுகளே... (16)
குற்றால டூர் தொடரை, மேலும், சுவாரசியமாக்க, மதுரை தினமலர் ஊழியர்களை வைத்து போடப்பட்ட நாடகங்கள் பற்றி, இந்த வாரம் சொல்வதாக எழுதியிருந்தேன்.கடந்த,95-ம் வருட டூர், ஜூலை 18ம்தேதி துவங்கியது. இந்த டூரில் கலந்து கொள்ளும் வாசகர்கள், முதல் நாளே அதாவது, 17ம் தேதியே வந்து விட்டனர். 17ம் தேதி, இரவு விருந்து வழங்கப்பட்ட போது, 'ஆமாம்... இந்த வருஷம் லுாஸ் மோகன் என்ன வேஷத்துல வரப் போறாரு... வழக்கம் போல திருமங்கலம் தாண்டி டி.கல்லுப்பட்டி ரோட்ல எதிர்பார்க்கலாமா?' என்று கேட்டனர்.இது, முந்தைய வருட கட்டுரைகளை படித்து படித்து, மனப்பாடம் செய்ததால், ஏற்பட்ட விளைவு. எது எது, எப்போது நடக்கும் என்று, மனதிற்குள் ஒரு முன்னோட்டம் விட்டபடி வந்திருந்தனர்.'சரி... இந்த வாசகர்களுக்கு, ஒரு திருப்பம் தரவேண்டியதுதான்' என்று, அன்றிரவே முடிவு செய்து, மதுரை தினமலர் நண்பர்களை அழைத்து பேசினோம். யாராக இருந்தாலும், போலீஸ் என்றால், கொஞ்சம் பயம் இருக்கும். எனவே, அதற்கேற்ப தயாராகி விடுவது என்று முடிவெடுத்து, ஏற்பாடுகள் எல்லாம், 'மள மள'வென நடந்தன.டூரின் முதல் நாள், வாசகர்களை சுமந்தபடி, பஸ் திருமங்கலம் தாண்டி, திடீர் பிரேக் அடித்து நின்றது. 'வந்துட்டாங்கய்யா லுாஸ் மோகன் குரூப்...' என்று வாசகர்கள் சிரித்தபடி, பஸ்சின் வாசலை பார்க்க, 'திபு திபு'வென போலீசார் பஸ்சுக்குள் ஏறினர்.'தொந்தரவிற்கு மன்னிக்கவும்; பஸ்சில் போதைப்பொருள் கடத்துவதாக தகவல் வந்திருக்கு. எல்லாரும் அவுங்க அவுங்க, பெட்டிய திறந்து காட்டுங்க...' என்று மிரட்டலான தொனியில் கூறியபடி, சோதனையிடலாயினர்.சிரிச்சு, பாட்டுப்பாடி நல்ல மூடில் போய்க்கொண்டிருந்த போது, பஸ்சை ஓரங்கட்டிய போலீஸ் மீது, வாசகர்களுக்கு மகா கடுப்பு. போலி போலீஸ் டீமுக்கு தலைமை வகித்த, போட்டோகிராபர் பாலகிருஷ்ணன், வாசகர், புலவர் சிவஞானத்திடம், 'எங்கே இருந்து வர்றீங்க?' என்று கேட்டார். அவர், 'மேலூரில் இருந்து' என்று பதில் சொன்னதும், 'குலுக்கல்ல மேலூருக்கு கூட விழுதா...' என்றதும், கடுப்பான சிவஞானம், 'ஏன் மேலூரை பார்த்தா உங்களுக்கு ஊராத் தெரியலையா...' என்று, 'பிலு பிலு'வென்று, பிடித்துக்கொண்டார்.'ஐயா... எங்களை இரண்டு முறை மன்னிக்கணும். முதல் மன்னிப்பு, நாங்க உங்க ஊரை குறைச்சு மதிப்பிட்டதுக்கு. இரண்டாவது, நாங்க போலீஸ் இல்ல; தினமலர் ஊழியர்கள்தான். கொஞ்சம் கலாட்டா பண்ணுவோம்ன்னு நினைச்சோம்...' என்றதும், சிவஞானம் உள்ளிட்ட எல்லா வாசகர்களும், குளிர்ந்து போய், முன்னிலும் உற்சாகமாயினர்.கடந்த, 95-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்த நாடகத்திற்கு, நல்ல வரவேற்பு இருக்கவே, 96-ம் ஆண்டும், அதே அணி, ஒரே மாதிரி சபாரி உடை அணிந்து, சி.பி.ஐ., போலீஸ் எனச்சொல்லி, பஸ்சில் ஏறி, முக்கிய ஆவணம் கடத்தப்படுவதாக சோதனையிட்டனர். சோதனையின் முடிவில், ஏற்கனவே ஒளித்து வைக்கப்பட்டிருந்த சாக்லெட் பாக்கெட்டை எடுத்து, 'ஆகா கிடைச்சுருச்சு...' என்று சொல்லி, தங்களது வேடத்தை களைத்து, உண்மையைச் சொல்லி, சாக்லெட்டை பகிர்ந்து அளித்து, வழியனுப்பி வைத்தனர்.போலீஸ், சி.பி.ஐ., இல்லாம, இன்னும் கொஞ்சம் வித்தியாசமா செய்வோம் என்று, 97-ம் ஆண்டு ரொம்பவே திட்டமிட்டோம். அந்த நேரம், ராஜபாளையத்தில் ஜாதி கலவரம் நடந்து முடிந்திருந்தது.நாம் பயணம் செய்வதற்கு, எவ்வித பாதிப்பும் இல்லை என்பதை, இருநுாறு சதவீதம் போலீஸ் மூலம் உறுதி செய்து கொண்ட பின், இந்த கலவர பிரச்னையை மையமாக வைத்து, நாடகம் போடுவது என்று தீர்மானித்தோம். பஸ்சுக்குள், 'திடீர்' என, கலவரக்காரர்கள் உருவத்தில் ஏறி, கொஞ்சம் கலாட்டா செய்வது என்பதுதான், அந்த ஆண்டு நாடகம்.இதற்காகவே, நம் நாடக குழு, முடிவெட்டாமல் தாடி வளர்த்து, தங்களது உருவத்தை, கரடு முரடாக்கி கொண்டது. மேலும், ரவுடிகள் வேஷம் தத்ரூபமாக இருப்பதற்காக, பச்சை பெல்ட், புள்ளி போட்ட லுங்கி, கலர் முண்டா பனியன், கழுத்திற்கு தாயத்து கட்டிய கயிறு என்று பொருட்களை தேடி தேடி, வாங்கி வைத்துக் கொண்டோம்.தீம் இதுதான்... மதுரையில் அறிமுக விழா நடக்கும் போது, பேராசிரியர் கண்ணன் எழுந்து, 'ராஜபாளையத்துல பழையபடி கலவரம் என்று கேள்விப்பட்டேன், அந்த வழியாத்தான் போகிறோமா...' என்று, பயந்து கொண்டே கேட்பார். இந்த கேள்வியின் நோக்கம், வாசகர்களை கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது.'நீங்க வாங்க, ஒரு பிரச்னையும் இல்லைன்னு காலையிலேகூட போலீஸ்ல சொல்லியிருக்காங்க. அதுனால, பிரச்னை ஒண்ணும் இருக்காது...' என்று, நான், மென்று முழுங்கி, தயங்கி தயங்கி பதில் தர வேண்டும். இந்த பதில், வாசகர்களிடம், இன்னும் கொஞ்சம் பயத்தை உண்டாக்கும்.திருமங்கலம் தாண்டியதும், ஆள் அரவமற்ற பகுதியில், பஸ்சை ஒரு கும்பல் நிறுத்தும். அக்கம் பக்கம் உள்ள புதர்களில் இருந்து, உருட்டு கட்டை, அருவாள், கத்தியுடன் தினமலர் டீம் பஸ்சுக்குள் புகுந்து, 'இதுக்குள்ளாறதாண்டா அவன் இருப்பான். பஸ்சுக்குள்ளேயே அவனை போடுங்கடா...'என்று கத்திக்கொண்டே உள்ளே நுழைய வேண்டும்.'நான்தான் இந்த டூர் கேப்டன். நீங்க நினைக்கிற மாதரி ஆட்கள் நாங்க இல்லை. நாங்க எல்லாம் தினமலர் குடும்பம்...' என்று, நான் அவர்களிடம் வாக்குவாதம் செய்து, அவர்களை பஸ்சுக்குள் விடாமல் வெளியே போகச் சொல்ல வேண்டும். அதன் பின், அவர்கள் போய் விடுவர். போகும் போது, 'சாரி நாங்க தினமலர் டீம். சும்மா உங்கள கொஞ்சம் பயமுறுத்துவதற்காக போட்ட நாடகம் இது...' என்று சொல்லி செல்வர்.இதுதான் அந்த ஆண்டு நாடகம். இதற்காக நிறைய ரிகர்சல் வேறு நடந்தது. ஆனால், ரிகர்சலில் நடந்தது போல, நிஜத்தில் நடக்கவில்லை. அப்படி என்னதான் நடந்தது... அடுத்த வாரம் சொல்கிறேன்.குற்றாலமும், குண்டாறு அணையும்...மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில், செங்கோட்டை அருகே, கண்ணுப்புளிமெட்டில் அமைந்துள்ளது குண்டாறு அணை. இது, 36.10 அடி உயரம் கொண்ட சிறிய அணை. பெரும்பாலும், இந்த அணையில், தண்ணீர் நிறைந்தே இருக்கும். அந்தத் தண்ணீர் வழிந்தோடுவதை பார்க்க, மிகவும் அழகாக இருக்கும். சுற்றுலா பயணிகள் நடந்து சென்று அணையின் அழகை ரசிக்க, அணைக்கு மேல் பகுதியில், பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை எழில் சார்ந்த பகுதியில், இதமான சாரலுடன், குளிர்ந்த தென்றலுடன், மனதை மயக்கும் பசுமையுடன், மலைகள் சூழ அமைந்துள்ள இந்த அணைக்கட்டு பகுதி, பார்ப்பவர் மனதை சுண்டி இழுக்கும்.இந்த அணைக்கட்டை ஒட்டியுள்ள, தனியார் எஸ்டேட்டில் விழும் அருவிகளில் குளிப்பவர்களை, அழைத்துச் செல்வதற்கென்று ஜீப் உள்ளது. அணையில், படகு சவாரி உண்டு. இதெல்லாம் சமீபகாலமாகத்தான். இப்போதுதான், இந்த அணை மக்களிடையே பிரபலம். ஆனால், 20 ஆண்டுக்கு முன்பே, இப்படி ஒரு அமைதியான, அழகான இடம் இருப்பதை கண்டுபிடித்து, வாசகர்களை இங்கே அழைத்து வந்து பல்வேறு போட்டிகளை நடத்தி, குதூகலப்படுத்தியது வாரமலர் இதழ் தான். இந்த குண்டாறு அணையின் பின்னணியில், 'குயிலி மாமி, குழந்தைக்கு ஜல தோஷம். வென்னீர் கொண்டு வா...' என்று பாடப்பட்ட பாடலை, எத்தனை ஆண்டுகளானாலும், இங்கு வந்த வாசகர்கள் மறக்க மாட்டார்கள்.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்