பசுமை நிறைந்த நினைவுகளே...(39)
தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், வீட்டைவிட்டு வரும்போது இருந்த மகிழ்ச்சியை விட, பலமடங்கு மகிழ்ச்சியுடன் வீடு போய் சேருவர். அப்படி அவர்கள், வீட்டிற்கு போய் சேர்ந்த தகவலை தெரிவித்தால்தான், டூர் நிறைவு பெற்றதாகவே அர்த்தம்.கடந்த, ௨௦௦௦மாவது ஆண்டில், தேர்வு செய்யப்பட்ட பதினைந்து வாசக குடும்பங்களில், பதினான்கு வாசக குடும்பங்கள், வீட்டிற்கு போனதும், முதல் வேலையாக, 'நலமாக வீடு வந்து சேர்ந்தோம்' என்ற, தகவலை தெரிவித்து விட்டனர்.ஆனால், ஒரு வாசகரிடம் இருந்து மட்டும் தகவல் வரவில்லை. அவர் தீனதயாளன் என்று, கடந்த வாரம் குறிப்பிட்டு இருந்தேன்.வேலூரில் இருந்து வந்திருந்த தீனதயாளன், கல்வித்துறையின் உயரதிகாரி. இவர், தன் வேலையின் தன்மை காரணமாக, இயந்திரத்தனமாக இருந்ததால், குற்றாலத்திற்கு வந்ததும், மனதிற்குள் பூட்டிவைத்திருந்த ஆசைகளை எல்லாம் மொத்தமாக அவிழ்த்து விட்டார். அருவிகளில் ஆடிப்பாடி குளித்தார், ஓடியாடி விளையாடினார், எண்ணெய் பலகாரம், எண்ணெயில்லாத பலகாரம் என்ற வித்தியாசம் இல்லாமல் உண்டதுடன், குறிப்பாக, மிளகாய் பஜ்ஜிகளை ஒரு கை பார்த்தார்.மதுரை வந்ததும், சிறிது நேரம் ஓட்டலில் தங்கி, பின், பயணத்தை தொடருவதாக நம்மிடம் சொல்லி விடைபெற்றார். ஓட்டலுக்கு போய் படுக்கையில் படுத்தபோதுதான், கண்ணாபின்னாவென்று சாப்பிட்ட மிளகாய் பஜ்ஜி, தன் வேலையை ஆரம்பித்திருக்கிறது.காலை வரை சமாளித்து பார்த்தவர், முடியாத நிலையில், மாலையில் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு போயிருக்கிறார். அங்கு, இவரை உடனடியாக, 'அட்மிட்' செய்து, குளுகோஸ் ஏற்ற ஆரம்பித்துள்ளனர்.'ஏன் இன்னும் இவரிடமிருந்து போன் வரவில்லை...' என்ற சந்தேகத்துடன் ஓட்டலில் விசாரித்த போதுதான், 'ஐயா' மருத்துவமனையில் உள்ள தகவலை தந்தனர். அடுத்த நிமிடம் அங்கு போய் பார்த்தபோது, மழையில் நனைந்த கோழிக்குஞ்சு போல, பெட்டில் சுருண்டு கிடந்தார்.நம்மைப் பார்த்ததும், ஆயிரம் வாட்ஸ் பல்பு போல, கண்கள் பிரகாசிக்க, உற்சாகமாக எழுந்து உட்கார்ந்து கொண்டார். பின், நம் கண்ணில் தெரிந்த கவலையை கவனித்தவர், 'ஒண்ணும் பயப்படாதீங்க; இதெல்லாம் இங்குள்ள பார்மலிட்டி...' என்று சொல்லி, பார்க்கப்போன என்னை ஆறுதல் படுத்தியவர், 'இரவு, பகல் பாராம அருவியிலே குளிச்சு உடம்பை, 'குளு குளு' வாக்கிட்டு, உடனே பயணம் செய்ததால், கொஞ்சம் சூடு வந்துருச்சு. குளிர்ச்சியும், சூடும் அடுத்தடுத்து ஏற்பட்டதில், வயிற்றில் கொஞ்சம் கலவரம், இப்ப மருந்து கொடுத்ததுல கலவரம் அடங்கிருச்சு. என் பேச்சுல நம்பிக்கை இல்லன்னா போய் கொத்து புரோட்டா வாங்கிட்டு வாங்க; உங்க முன்னாடியே சாப்பிட்டு காட்டுறேன்...' என்றார்.தலைமை மருத்துவரை வரவழைத்து, 'இவர், தினமலர்-வாரமலர் விருந்தினர்; கூடுதல் கவனம் செலுத்துங்கள்...' என்று வேண்டிக் கொண்டதும், 'பயப்படுவதற்கு எதுவும் இல்லை; அதிகப்படியான மசாலா பொருட்களை உண்டதால், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு, உடம்பில் நீர்ச்சத்து இல்லாமல் போய்விட்டது. மாலைக்குள் சரியாகி விடுவார்...' என்றார் டாக்டர்.அதே போல அன்று மாலையே, நார்மலாகி எழுந்து உட்கார்ந்து விட்டார். மறுநாள் முக்கிய வேலை இருப்பதால், உடனடியாக கிளம்ப வேண்டும் என்றார். டாக்டரிடம் கேட்டபோது, 'போகலாம்... ஆனால், பஸ்சில் வேண்டாம்...' என்றார்.தகவல் அந்துமணிக்கு பறந்தது. தீனதயாளன் பூரண நலம் என்பதை, நிச்சயம் செய்துகொண்ட பின், ஒரு கார் ஏற்பாடு செய்து, ஒரு உதவியாளர் துணையுடன், பின் சீட்டில், தலையணை வசதிகளுடன் பயணம் செய்து, தீனதயாளன் நலமாக ஊர் போய் சேர்ந்தார்.ஊர் போய் சேர்ந்ததும், அன்புடனும், நன்றியுடனும் அவர் முதலில் போன் செய்தது அந்துமணிக்குதான். அவரும், 'நான் வேலூர் வரும்போது, உங்களை அவசியம் சந்திக்கிறேன்...' என்றதும், 'அவசியம் வரணும்; வரும்போது மறக்காமல், குற்றாலம் மிளகாய் பஜ்ஜி வாங்கிட்டு வாங்க...' என்று சொல்ல, 'மறுபடியுமா...' என்று இவர் கேட்க, இருவரும் சிரித்த சிரிப்பில், சந்தோஷம் நிறையவே எதிரொலித்தது.குற்றாலமும், தென்காசி வளைவும்...கடந்த, 1911ல், இங்கிலாந்து நாட்டு அரசியாக எலிசபெத் ராணி பதவி ஏற்றதை கொண்டாடும் வகையில், ஆங்கிலேய அரசு, தென்காசியின் நுழைவுப் பகுதியில், ஒரு வரவேற்பு வளைவை அமைத்தது. அந்த வளைவு தான் இது.இதை இங்கிலாந்தைச் சேர்ந்த ஐந்தாம் ஜார்ஜ் மேரி என்பவர் திறந்து வைத்தார். தென்காசி நகரை ஆங்கிலேயர் ஆண்டதற்கும், நகரின் பழமைக்கும் இது சாட்சியாக உள்ளது.நகருக்குள் வரும் பயணிகளை வரவேற்கும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்த இந்த வளைவு, நூற்றாண்டை நெருங்கும் நிலையில், அதன், 99வது வயதில், கடந்த, 2010ல் ரயில்வே மேம்பாலப் பணிக்காக அகற்றப்பட்டது.'நான் நகரத்தின் அடையாளமாக்கும், குறைந்தபட்சமாக நூற்றாண்டு விழாவாவது கொண்டாடுங்கள்...' என்றெல்லாம் அடம்பிடிக்காமல், அடுத்த தலைமுறையின் நன்மைக்காக, தன்னையே பலியாக்கிக்கொண்ட தென்காசி வளைவு, இப்போது, படமாகவும், தென்காசி நகர வரலாற்று பாடமாகவும் பதிவாகியுள்ளது.— அருவி கொட்டும்.-எல்.முருகராஜ்