உள்ளூர் செய்திகள்

பண்பாட்டின் காவலர்கள்!

சத்தியம், நேர்மை மற்றும் மனிதாபிமானம் போன்ற நல்ல குணங்களை கொண்டவர், ஜக்கு.என் கணவர் என்பதற்காக சொல்லவில்லை; அவரது நண்பர்களின் ஒருமித்த கருத்து இது! நாங்கள் வசிக்கும் மொரிஷியஸ் தீவை, அரசலாறாங்கரை கிராமத்தை போலாக்கிய பெருமை, என் கணவர் ஜக்குவையே சேரும்!'அதிகாலையில், எல்லார் வீட்டிலும் எம்.எஸ்.,சின் இனிய குரல் இழைய வேண்டும்; அதை தொடர்ந்து, காருக்குறிச்சி, நாமகிரிபேட்டை மற்றும் சின்ன மவுலானா இசை மழையில் வீடுகளில், கல்யாண கோலாகலத்தை ஏற்படுத்த வேண்டும்...' என்பது, ஜக்குவின் கட்டளை.இந்த கான வெள்ளங்களையும் மீறி, அதிகாலையில், 'ஜக்கு அண்ணா... ஜக்கு பைய்யா... ஜக்கு அங்கிள்... டேய் ஜக்கு... ஹாய் ஜக்கி... அரே ஜம்டீஷ்...' என, போன் அழைப்புகள் வந்தவாறு இருக்கும்.இங்கு வாழும் அனைத்து இந்திய குடும்பங்களும் ஒன்று கூடி, எல்லா பண்டிகைகளையும், மிக விமரிசையாக கொண்டாடுவோம். தீபாவளி, கார்த்திகை, ஐயப்ப பூஜை, பொங்கல் மற்றும் பவுர்ணமி பூஜை என்று ஒரே கோலாகலம் தான். அப்போதெல்லாம், 'நாம் இருப்பது வெளிநாடா, இந்தியாவா...' என்ற பிரமை, எல்லார் உள்ளத்திலும் எழும். இந்த பண்பாடுகளுக்கெல்லாம், விதை தூவி வளர்த்த பெருமை, ஜக்குவையே சேரும்.'இந்தியர்கள் இத்தனை ஒற்றுமையானவர்களா...' என, அந்நாட்டினர் எங்களைப் பார்த்து வியப்பர்.எங்களுடைய இந்த சந்தோஷங்களில், ஒற்றுமையில், யாருடைய கொள்ளிக்கண் பட்டதோ தெரியவில்லை, திடீரென ஒருநாள், நண்பர் கிருஷ்ணன் இறந்து போனார். அவரது மூன்று வயது மகளுக்கும், இளம் மனைவி சரளாவிற்கும் நிழல் கொடுக்க, சொந்த மண்ணில் இரு தரப்பிலும் யாரும் இல்லை.சரளா மற்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களின் வயிறு மற்றும் மனம் வாடாமல் கவனித்துக் கொண்டோம்.கிருஷ்ணன் மறைந்து, ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சரளா மெல்ல பழைய நிலைக்கு திரும்பினாள். இத்தருணத்திற்காகவே காத்திருந்ததை போல், எந்த முன்னறிவிப்புமின்றி, சரளாவின் மறுமணத்திற்கு ஏற்பாடு செய்தார், ஜக்கு.மணமகன், வேறு யாருமில்லை; ஜக்குவின், 'கசின்!' செய்தி கேட்டு வந்த நண்பர்களிடம், ஜக்கு கூறிய பதில், 'இந்த சின்ன வயசில் சரளா எதற்காக தன்னை ஒடுக்கிக் கொள்ளணும்; மனசாட்சியை தொட்டு சொல்லுங்க... சரளா இறந்து, கிருஷ்ணன் உயிரோடு இருந்தா, குழந்தையை வளர்க்கணும்ன்னு நிச்சயமாக இந்நேரம், மறுமணம் செய்திருப்பான். ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயம்ன்னு ஏன் இந்த ஓரவஞ்சனை... 'பண்பாடு, கலாசாரம்ன்னு ஏட்டில் எழுதி வைத்ததையே கிளிப்பிள்ளையைப் போல் திரும்ப திரும்ப பேசுவதில் யாருக்கு என்ன லாபம்... அவைகளை நடைமுறைகளாக்கும் போது, பகுத்தறிவு கண்ணோட்டத்துடன் செயல்படுவது தான் சரி. 'இயற்கையே, காலநிலைக்கு ஏற்ப, தட்பவெட்பங்களை மாற்றிக் கொள்ளும் போது, ஆறறிவு படைத்த நாமும், காலச் சூழலுக்கு ஏற்ப நம் செயல்களை, நேர்மை, நியாயத்துடன், மாற்றி அமைச்சுக்கணும்...' என்றார்.அவர் கருத்தை ஏற்றுக் கொண்ட நண்பர்கள், சந்தோஷத்துடன், சரளாவின் திருமண பொறுப்பை பகிர்ந்து கொண்டனர். அடுத்த ஆண்டே, சரளாவின் கை வழிய வழிய இரட்டை குழந்தைகள்.இவை கூட கனவாகிப் போய்விட்ட கடந்த காலத்து ஏட்டின் ஒரு பகுதி தான்...ஒரு நாள் காலை, காபி குடித்தபடி தினசரியை புரட்டிய ஜக்குவின் கண்களில், அந்த விளம்பரம் தென்பட்டது.'தேவை ஒரு கம்பானியன்' என் ரசனைகள் வேறுபட்டவை... 'ரம்மி'யில் அதீத ஈடுபாடு உண்டு. ஆங்கிலமும், பிரஞ்சும் சரளமாக பேசத் தெரியும். கடலில் நீச்சலடிப்பதில் ஆர்வம் அதிகம். மோஸார்ட்டையும், பீத்தோவனையும் காதலிக்கும், என் ரசனைகளோடு ஒத்து போகும் ஆண் மகனின் நாடும், மதமும், நட்பிற்கு தடுப்புச் சுவராகிவிடாது. குறிப்பு: நான் மணமானவள்; ஆகையால், நாம் பழகும் முறையில், கொஞ்சம் இடைவெளி தேவை. தொடர்புக்கு என்று கம்பெனியின் தொலைபேசி எண் கொடுத்து வெளியாகியிருந்த விளம்பரத்தை கவலையுடன் பார்த்தார், ஜக்கு.மேலை நாடுகளில், இதைப் போன்ற விளம்பரங்கள் சகஜம் எனினும், ஜக்கு ஏன் இதைப் பார்த்து கவலைப்பட வேண்டும்?சட்டென்று எழுந்தவர், 'இதோ வந்துடுறேன்...' என்று சொல்லி, அவசரமாக கிளம்பினார்.இந்த விளம்பரக் கம்பெனிகள், தங்களின் விளம்பரதாரர்களின் பெயர்கள், விலாசங்கள் மற்றும் விபரங்களை மிகவும் ரகசியமாகவே வைத்திருப்பர். பதில் எழுதியவரை, தாங்களே நேரில் சந்தித்து, அவர்களைப் பற்றிய முழு விபரங்களை அறிந்த பின்னரே, விளம்பரதாரருடன் தொடர்பு கொள்ள அனுமதிப்பர். எது எப்படியோ, இந்த சம்பிரதாயங்களை எல்லாம் தகர்த்துக் கொண்டு உள்ளே நுழையும் சமத்காரம், ஜக்குவிடம் இருந்தது.அன்று மாலை, சிவா அண்ணன் பரிதாபமாக எங்கள் வீட்டிற்கு வந்தார். 'உடை, நடை மற்றும் பேச்சு என கலகலப்பின் மொத்த உருவமான சிவா அண்ணனா இவர்... என்ன ஆயிற்று... ஏன் இந்த பரிதாப கோலம்...' என, தவித்து போனேன்.அதன்பின் தான் தெரிந்தது, சிவா அண்ணணின் இந்நிலைக்கு காரணம், அவர் மனைவி தீபா என்றும், அந்த விளம்பரத்தைக் கொடுத்ததும் அவள் தான் என்றும்!எந்தவித சிக்கலுமின்றி, அவர்கள் பிரிந்து செல்ல வழி வகுத்து தந்தது, ஜக்கு தான். இப்போது, தமிழகத்தில் நல்ல மனைவியுடன், அவர்களின் இரண்டு குழந்தைகளுடன், மிக சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி வருவதை, அடிக்கடி போன் மற்றும் கடிதங்கள் மூலம் நன்றியால் நனைந்த நெஞ்சத்துடன் தெரிவிப்பார், சிவா அண்ணன்.தன் விளம்பரங்களின் மூலம் கண்டெடுத்த, 'மூன்' என்ற அமெரிக்க இளைஞனை, தன் வாழ்க்கையில் இணைத்துக் கொண்டாள், தீபா. ஆரம்ப காலத்தில், அவளுடன் ரம்மி விளையாடி, கடலில் நீச்சலடித்து, மோஸார்ட்டையும், பீத்தோவனையும் காதலித்தான், மூன்.பிரஞ்சிலும், ஆங்கிலத்திலும் இல்லாத, பொல்லாத விஷயங்களை எல்லாம் சர்ச்சை செய்து கொண்டனர். பின் மெதுவாக, தியானம், யோகா என்று தங்கள் பாதையை திருப்பிக் கொண்டனர். ஜக்குவின் ஆணைக்கு கட்டுப்பட்டு, இருவரும் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்; இப்போது, ஜக்குவின் மிக இனிய சகோதரன், 'மூன்!'இப்படித் தான், எந்த எந்த வீடுகளில் விரிசல் கண்டிருக்கிறதோ, அங்கெல்லாம் நுழைந்து, அந்த விரிசல்களை செப்பனிட்டு விடுவார், 'கொத்தனார்' ஜக்கு!மூழ்கவிருக்கும் கப்பல்களை, 'சுக்கான்' போட்டு நிறுத்திவிடும், 'சமத்கார மாலுமி!'சரளா - ஈஸ்வரன், தீபா - மூன் திருமணம் எல்லாம் முடிந்து, பழைய கலகலப்புகளும், சந்தோஷங்களும் எங்களை சூழ ஆரம்பித்தது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பஜனைகள், பூஜைகள் என்று, நகரமே களை கட்ட ஆரம்பித்தது.ஒரு நாள், காலை, நானும், ஜக்குவும் அவரின் தலைமையில் இயங்கும் பார்வையற்றோர் பள்ளி, முதியோர் மற்றும் ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லம் என்று ஒவ்வொன்றாக சென்று பார்வையிட்டோம். வரும் வழியில், என்னை வீட்டில் இறக்கி விட்டு, 'ரேகா... எனக்கு கொஞ்சம் வெளியில வேலை இருக்கு; நான் லஞ்சுக்கு வந்துடுவேன்...' என்றார்.ஆனால், லஞ்ச்க்கு அவர் வரவில்லை. கார் விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் இருந்த அவரைப் பார்த்து குமுறி அழுதேன். என்னை தன் அருகில் அமரச் சொல்லி, என் கைகளை பிடித்தவாறு, 'அழாதேடா கண்ணம்மா... உனக்கு துணையாக, இத்தனை அன்பு உள்ளங்களை விட்டுச் செல்கிறேன். இவர்களை விட்டு நீ விலகி செல்லக் கூடாது. நான் விட்டு செல்லும் பணிகளை இனி நீ தான் எடுத்துச் செய்யணும்; இவர்கள் எல்லாரும், கடைசி வரை உனக்கு துணையாக இருப்பாங்க...' என, சொல்லி, திரும்பி வர முடியாத இடத்திற்கு சென்று விட்டார்.ஜக்குவின் கட்டளைப்படி, நான் மொரிஷியசிலேயே தங்கி விட்டேன். வீடு, ஆபீஸ் மற்றும் சமூக வேலை என, என்னை மூழ்கடித்து கொண்டேன்.என் ஜக்கு மறைந்து ஓராண்டு ஓடி விட்டது. விருந்துகள், பண்டிகைகள் என்று ஒவ்வொன்றாக தலை தூக்க ஆரம்பித்தன. ஆயிற்று... இன்னும் பத்தே நாட்களில், நவராத்திரி பண்டிகை ஆரம்பித்து விடும். ஜக்கு இருந்தால், என்னமாய் அமர்க்களப்படுத்துவார். ஒன்பது நாட்களும், ஒவ்வொருவர் வீட்டில் பூஜை என்றாலும், ஒவ்வொரு ஆண்டும் சரஸ்வதி பூஜை மட்டும் எங்கள் வீட்டில் தான். அன்று, வீடே கல்யாண களை கட்டி நிற்கும்!'இன்று எல்லாரையும் கூப்பிட்டு, பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்...' என்ற ஆர்வத்தில், முதலில் சரளாவை போனில் கூப்பிட்டேன்.அவள், ''போன வாரம், தீபா வீட்டில் எல்லாரும் கூடி பேசி முடிவெடுத்துட்டாங்கக்கா... உன்கிட்ட சொல்றேன்னு சொன்னாளே... இன்னும் சொல்லலையா...'' என்றாள் விட்டேத்தியாக!அவள் சொன்ன பதிலில், உறைந்து போனேன்.'எப்படி என்னை விட்டு விட்டு இவர்கள் முடிவெடுத்தனர்... தீபாவிடமே இதை கேட்டு விடுவோம்..' என்ற எண்ணி, அவள் வீட்டிற்கு சென்றேன். வீட்டிற்குள் நுழையும் போதே ஹாலில் ஏகமாக பேச்சுக் குரல்கள்... என் பெயரும் அடிபடவே, அப்படியே நின்றேன்.''ஏண்டீ தீபா... ரேகாவை கூப்பிடாமலேயே எல்லா முடிவும் எடுத்துட்டயே... அவளுக்கு விஷயம் தெரிஞ்சா சும்மா இருப்பாளா... என்ன இருந்தாலும் இத்தனை வருஷமா, இதையெல்லாம் நல்ல முறையில், 'ஆர்கனைஸ்' செய்து, கட்டுக்கோப்பாக செயல்படுத்தியது, நம் ஜக்கு அண்ணா தானே... இப்போ அவருடைய...'' என்று கூட்டத்தில் ஒருத்தி ஆரம்பிக்க, இடை வெட்டி, ''மூளை இருக்காடி உனக்கு... ஜக்கு அண்ணா செய்தார்ன்னா அதுக்காக இப்போ ரேகாகிட்ட சுபகாரியங்களோட பொறுப்புகள கொடுக்க முடியுமா என்ன... இதிலெல்லாம் பங்கேற்கும் அருகதை அவளுக்கு இல்லன்னு கடவுளே தீர்ப்பு எழுதியதுக்கு அப்புறம் அந்த தீர்ப்பை முறித்து, அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்தால், அதன் விளைவு ரொம்ப பயங்கரமாகிடும்.''முதல் முறையாக இத்தனை பெரிய பொறுப்பை எடுத்துச் செய்யப் போறேன்; எல்லாம் நல்லபடியாக, மங்கலகரமாக முடியணுமேன்னு நானே பதற்றத்தோடு இருக்கேன். நீ என்னடான்னா ஒரு கைம்பெண்ணைத் தூக்கி, மனையில் உட்கார வைச்சு, அவளுக்கு முதல் தாம்பூலம் கொடுன்னு சொல்ற... ச்ச்சே என்ன ஜென்மம் நீ...''''தீபா என்ன பேசறே... இதென்னா முட்டாள் தனமான பேச்சு...'' கோபமாக கத்தினார், மூன்.''மூன்... வாயை மூடு; உனக்கு எங்க கல்சரை பத்தி என்ன தெரியும்...'' ஆக்ரோஷமாக கணவனை அடக்கினாள், தீபா.''ஆமா... தீபா சொல்றது தான் சரி,'' என்று ஒத்துப் பாடினாள், கூட்டத்தில் ஒருத்தி. அவள் இப்போது வாழ்வது மூன்றாவது கணவனுடன்!இதையெல்லாம் கேட்க கேட்க என் ரத்தம் கொதித்தது.இந்த தீபாவிற்கும், சரளாவிற்கும் சுபகாரியங்களில் பங்கேற்கும் அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது, என் ஜக்கு!உள்ளே நுழைந்து நியாயம் கேட்க எண்ணினேன். மறுநிமிடமே, 'வேண்டாம்... இங்கே என்ன பாண்டிய மன்னனின் அரசவையா கூடியிருக்கிறது; நான் நியாயம் கேட்கவும், எனக்கு நியாயம் கிடைக்கவும்...' என நினைத்து, மெதுவாக, வாயிலை நோக்கி புறப்பட்டேன்.என்னுள், 'இவர்கள் தாம் இந்திய கலாசார பிரதிநிதிகள்... இந்திய பண்பாட்டின் காவலர்கள்...' என்ற ஏளனம் எழுந்தது.என் அருகே, யாரோ குலுங்கி அழுவது கேட்டது.ஆம்... அது என் ஜக்கு தான்!- சாரதா விஸ்வநாதன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !