தப்பான கணக்கு!
ஆட்டோவிலிருந்து இறங்கும், 70 வயதை தாண்டிய ரகுபதியை பார்த்த வாட்ச்மேன், தயக்கத்தோடு, ''எங்க சார், வங்கிக்கு போகணுமா. 'லிப்ட்' வேலை செய்யல, பவர் கட்,'' என்றான்.மூன்றாவது மாடியில் உள்ள வங்கிக்கு மெல்ல ஏறிச் சென்றார். உட்கார இடமில்லாத கூட்டம். அனைத்து கவுன்டர்கள் முன்பும் வரிசை. ஜனங்களுக்கு ஆயிரம் சந்தேகங்கள்.மூன்றாவது கவுன்ட்டரில் இருந்த ஸ்வேதா, கண்களின் களைப்பை போக்க, கம்ப்யூட்டரை விட்டு சற்று நிமிர்ந்தபோது அவரைக் கவனித்து, ''என்ன சார் வேணும்?'' என்றாள்.''கேஒய்சி பார்ம்,'' என்றார்.உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் விண்ணப்பத்தை எடுத்துக் கொடுத்தாள்.கண்ணாடியை மாட்டி, உட்கார இடம் தேடினார். கவுன்ட்டரிலிருந்து பெயர் அழைக்கப்பட்ட ஒரு பெண்மணி எழுந்து போக, அங்கு அமர்ந்தார்.விண்ணப்பத்தைப் பிரித்து பார்த்தார். சரியாக தெரியவில்லை. போய், 'செக்' செய்து கண்ணாடி மாற்ற வேண்டும் என்று நினைத்துக் கொண்டார். எடுத்து வந்த சின்ன பையிலிருந்து பேனாவை எடுத்ததும், எங்கே வைத்து எழுத என, சுற்றிலும் பார்த்தார்.மற்றவர்கள் கிடைத்த இடத்தில் நின்றபடி எழுதிக் கொண்டிருந்தனர்.''அய்யா... ஏதோ தேடறீங்களே, உங்களுக்கு ஏதாச்சும் உதவி வேணுமா?'' அருகே பணிவான குரல்.நிமிர்ந்து பார்த்தார். உயரமாக, கோதுமை நிறத்தில், துாக்கி வாரிய கிராப், சிரித்த முகம், உயர் ரக உடை அணிந்த ஒரு இளைஞன் நின்றிருந்தான்.''இந்த விண்ணப்பத்தின் அடியில வச்சு எழுத ஏதாச்சும் கிடைக்குமான்னு பார்க்கறேன்,'' என்றார்.சில நிமிடங்களில், 'கிளிப்' போட்ட அட்டையுடன் வந்து, ''இதை அடியில வச்சு எழுதுங்க சார்,'' என்றான்.''ரொம்ப நன்றிப்பா.''விண்ணப்பத்தை அட்டையில் செருகி எழுத ஆரம்பித்தார்.இளைஞன், மீண்டும் உதவிக்கு வந்து, ''உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா, நான், 'பில் - அப்' பண்ணி தரட்டுமா,'' என்றான்.''வேண்டாம்,'' என்றார்.''நானும் இங்கே அடிக்கடி வர்றவன் தான். தனியார், ஐ.டி., நிறுவனத்தில் ப்ரோகிராமரா வேலை செய்யறேன். இப்ப பர்சனல் வேலைக்காக, 'பர்மிஷன்' போட்டு வந்தேன். முடிஞ்ச உதவியை வயசானவங்களுக்கு செய்யறேன்,'' என்றபடியே சட்டை பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினான்.சித்தார்த் என்ற பெயரைத் தொடர்ந்து, நீண்ட ஆங்கில எழுத்துக்களில் அவருக்கு, பி.இ., மட்டும் புரிந்தது.அட்டையை அவனிடம் நீட்டினார். பெயர், விலாசம், மொபைல் எண், வங்கிக்கணக்கு எண் கேட்டு, அந்த படிவத்திலிருந்த எல்லாவற்றையும் சாய்வான எழுத்தில் எழுதினான். வருமானமே இல்லாத தன் எலிமெண்டரி பள்ளி ஆசிரியர் வேலை பற்றி, ஏதோ முணுமுணுத்தார். வயதானவர்களின் வழக்கமான ஆதங்கம்.''ஐ.டி., கார்டு வச்சிருக்கீங்களா அய்யா?''பையிலிருந்து தன் ஆதார் கார்டை எடுத்து கொடுத்தார்.எல்லாவற்றையும் எழுதி முடித்ததும், அவரிடம், ''ஒரு தடவை சரி பார்த்துடறீங்களா?'' என்றான்.''நீ எழுதறப்பவே பார்த்தேன்; எல்லாம் சரியாத்தான் இருக்கும்பா.''''அய்யா, எனக்கு ஆபீசுக்கு டயமாகுது. இதே பேனாவால இந்த இடத்துல கையெழுத்துப் போட்டு, விண்ணப்பத்தை கவுன்ட்டர்ல குடுத்திடுங்க,'' என்றான்.கையெழுத்திட்ட பின், பேனாவைக் கொடுத்து நன்றி சொல்ல, சிரிப்புடன் கிளம்பினான்.அந்த விண்ணப்பத்தில், அவருடைய மொபைல் எண்ணுக்கு பதிலாக, தன் மொபைல் எண்ணையும், அவரது வங்கி விபரங்கள் அடங்கிய படிவத்தை, தன் மொபைலில் படம் பிடித்ததையும், அது போலி விசிட்டிங் கார்டு என்பதையும், அவர் அறியவில்லை.சாய்த்து எழுதி, கையெழுத்தை மாற்றியாயிற்று. அது மட்டுமல்ல, போட்டோ ஒட்ட வேண்டுமென்று வங்கியில் கேட்பர், அவருக்குத் தெரியாது. நல்லதாகப் போயிற்று, ஏதோ செய்து கொள்ளட்டும். நம் வேலையை உடனே முடிக்க வேண்டும். ஓட்டமாக படியிறங்கினான்.ரகுபதி மெதுவாக எழுந்து, ஸ்வேதாவின் கவுன்ட்டரை அணுகியபோது, அவள் இல்லை.''அவங்க சாப்பிட போயிருக்காங்க. 'கேஒய்சி'தானே, என்கிட்ட கொடுங்க. அவங்க டேபிள்ல வச்சிடறேன்,'' நடுத்தர வயதுடைய வங்கி ஊழியர் வாங்கி, அவள் டேபிள் மேல் அலட்சியமாக வைத்து விட்டு நகர்ந்தார். 'கீழே இறங்க வேண்டுமே, 'லிப்ட்' வந்திருக்குமா?' என, நினைத்தபடி, மெதுவாக வந்து சேரில் உட்கார்ந்து, எடுத்து வந்த பிஸ்கட் இரண்டை சாப்பிட்டு, தண்ணீர் குடித்தார். வாட்ச்மேனிடம் கெஞ்சி, வாசலில் ஆட்டோ பிடித்துத் தரச் சொல்லி காத்திருந்தார்.டிராபிக்கை சபித்தபடி, சித்தார்த் என்று சொல்லிக் கொண்ட ஹேக்கர், தான் தங்கியிருக்கும் மேன்ஷன் அறையை அடைய, ஒரு மணி நேரமாயிற்று. வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கதவைச் சாத்தி, அவசரமாக, 'லேப்-டாப்'பை, 'ஆன்' செய்தான்.பெரியவர் ரகுபதியின் விபரங்களை மொபைலில் இருந்து எடுத்து வைத்து, தான் வழக்கமாக, 'ஹேக்' செய்யும் மென்பொருளை, 'ஓப்பன்' செய்தான்.சில, 'க்ளிக்'குகளுக்குப் பிறகு, ரகுபதி கணக்கின், 'பர்சனல் பின் நம்பர்' கண்டுபிடித்து உள்ளே போய் பார்க்க, வங்கி கணக்கில் மூன்று லட்சம் ரூபாய் இருந்தது, ஏமாற்றம் அளித்தது.'சே... இத்தனை திட்டமிட்டும் கிழத்திடம் பணம் இவ்வளவு தானா... சரி, இதாவது இருக்கிறதே... உடனே நம் வங்கி கணக்குக்கு மாற்றி, 'சிம்'மைத் துாக்கிப் போட வேண்டியது தான்...' என நினைத்தான்.அவரது கணக்கில் இருந்து, தன் வங்கி கணக்குக்கு மாற்ற பின் எண்ணுக்கு முயற்சித்தபோது, வட்டம் சுற்றிக் கொண்டே இருந்தது. வங்கி கணக்கு எண்ணை தப்பாகக் கொடுத்து விட்டதா கிழம்.அவனது மொபைல் ஒலித்தது. எடுத்தான்.''வணக்கம் சார்... நீங்க ரகுபதியா?'' இனிமையாக குரல் கேட்டது.''யாரு, என்ன வேணும் உங்களுக்கு?''''நான் ஸ்வேதா, வங்கியிலிருந்து பேசறேன். ஒரு சின்ன பிராப்ளம்...''''என்ன பிரச்னை...'' என கேட்டவன், 'இந்த அழைப்பை ஏற்பதா வேண்டாமா? ரகுபதி எண் என்று நினைத்துக் கூப்பிடுகின்றனர் போல. அது நான் இல்லை என்று கண்டுபிடித்து விட்டனரா?' என யோசித்தபடி, ஒரு முடிவுக்கு வந்தவனாக, குரலை கட்டையாக்கி, ''சொல்லுங்க...'' என்றான்.''நீங்க போட்டோ, 'அட்டாச்' செய்யல. அப்புறம் நீங்க கொடுத்த விபரங்களோட வங்கி கணக்கு எண்ணில், ஒரு எண், ஏழா ஒன்பதான்னு தெரியாம, 'டேலி' ஆகல. பேங்க் ஆப் சரியா டவுன்லோட் ஆயிருக்குங்களா?'' என்றாள்.'கிழம் என்ன குழப்படி செய்தது?' என யோசித்தபடி, ''இப்ப என்ன செய்யணும்?'' என்றான்.''ரகுபதி சார், நீங்க நேரில் வர்றப்ப, போட்டோ கொண்டு வாங்க. இன்னைக்கே, 'ப்ராசஸ்' செய்திடலாம். அப்படியே உங்க விபரங்களும் சரியான்னு, 'செக்' செய்துடலாம். விலாசத்திலேயும் தவறு இருக்கு.''போகலாமா, வேண்டாமா என, குழம்பினான்.பேசும் போது, வீடு மாறியதால், வங்கியின் இந்த கிளைக்கு வருவது முதல் முறை என்றாரே, ரகுபதி. 'அக்கவுன்ட் டேலி' ஆகவில்லை என்றால், என்ன பிரச்னை? அதுதானே நமக்கு முக்கியம்.மொபைல் எண் மாற்றினது தெரிந்தால், பிரச்னை வரலாம். அதற்கு முன் போய் பார்த்து விட்டு, போட்டோ மறந்து விட்டேன். நாளை கொண்டு வருவதாக சொல்லி, சமாளிக்கலாம். மீறி ஏதாவது பிரச்னை வந்தால், அவரது உறவினன் என்றும், அவர் தான் அனுப்பியதாகவும் சொல்லிக் கொள்ளலாம் என நினைத்து, வங்கிக்குள் நுழைந்தான். கூட்டம் குறைந்திருந்தது.கண்ணில் பட்டவரிடம், ''ஸ்வேதா...'' என, கேட்டான்.''ஸ்வேதா உள்ளே மேனேஜர் அறையில் இருக்கிறார்,'' என்றார்.ஒரு நிமிடத்தில் உள்ளே அழைக்கப்பட்டான்.மேனேஜர் அறையில் சிறு கும்பல். முனை சேரில் இருக்கும் பெண் தான் ஸ்வேதாவா? ''இந்த விண்ணப்பத்தை நீங்க தானே, 'பில் - அப்' பண்ணினது?''எச்சிலை விழுங்கி, ''இல்லைங்க, இது என் கையெழுத்தே இல்லை,'' என்றான்.''பின்ன எப்படி உங்க போன் நம்பர் வந்துச்சு?''''தெரியலியே... யாரோ மிஸ்யூஸ் செஞ்சிருக்காங்க.''''ஏன் தம்பி பொய் சொல்ற,'' என்றபடி உள்ளே நுழைந்தார், பெரியவர் ரகுபதி.யாரும் எதிர் பார்க்காத வகையில் திடீரென எழுந்து, அவன் கன்னத்தில் மாறி மாறி ஓங்கி அறைந்தாள், ஸ்வேதா. மற்றவர்கள் பாய்ந்து, அவளை தடுத்தனர்.''மேடம், இருங்க. நாங்க தான் சைபர் க்ரைம்லேருந்து வந்திருக்கோம்ல்ல.''''ராஸ்கல். இவர் யாருன்னு தெரியுமா. சாதாரண எலிமென்டரி பள்ளி ஆசிரியர் தான். ஆனா, அவரோட மனைவி, பிரிகேடியர் லெவல்ல, நம் ராணுவத்துல நர்சா இருந்தவங்க. கார்கில் சண்டை நடந்தப்ப எத்தனை வீரர்களை காப்பாத்தியிருக்காங்க தெரியுமா, இரவும் பகலுமா அவங்க செஞ்ச சர்வீசுக்கு ஈடுகட்ட முடியுமா...''தனக்கு பிள்ளைகள் கூட வேண்டாம்ன்னு, நாட்டுக்காக உழைச்சவங்க. அவங்க காலமான பிறகு வர்ற குடும்ப ஓய்வூதியத்துல, சின்ன குடிசை வீட்டுல இருந்துக்கிட்டு கொஞ்சம் சேமிச்சு, இவர் மத்தவங்களுக்கும் உதவுறாரு, அவரோட பணத்தை, 'ஈசி'யா, 'ஆட்டைய' போட நினைக்கிறியே, ராஸ்கல்.''இந்த விண்ணப்பத்துல போட்டோ இல்ல, கையெழுத்தும் புரியாம சில சந்தேகம் வந்துச்சு, எனக்கு. கிளம்பின பெரியவரை உட்கார வச்சு, மறுபடியும் எல்லாம், 'செக்' பண்ணினப்ப தான் போன் நம்பர் மாறியிருக்கறது தெரிஞ்சுது. ''உடனே, நானும் மேனேஜரும், அவரின் வங்கி கணக்கை முதல்ல, 'ப்ளாக்' செய்தோம். கம்ப்யூட்டரில், அவரது கணக்குக்கு போய் பார்த்திருப்ப. ஆனா, உன்னால, 'டிரான்ஸ்பர்' பண்ணியிருக்க முடியாதே.''ஏற்கனவே எங்க வங்கியில, வேற வேற கிளையில், இவனே, இந்த மாதிரி இரண்டு தடவை ஏமாத்தி பணம் எடுத்திருக்கான், சார். இன்னைக்கு மாட்டிக்கிட்டான். அதனால தான் உடனே உங்களுக்கு, 'இன்பார்ம்' பண்ணினோம்.''எல்லாம் ஓய்ந்து, அவர்கள், 'ஹேக்கரை' தள்ளிக் கொண்டு போனதும், ரகுபதிக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவரை காரிலேயே வீட்டில் கொண்டு விட ஏற்பாடு செய்தாள், ஸ்வேதா. நன்றி சொல்லி கிளம்பும்போது, ஸ்வேதாவிடம், ''ஏம்மா உனக்கு இவ்வளவு ஆவேசம்?'' கேட்டார், பெரியவர் ரகுபதி.கண் கலங்கி, ''எங்கப்பாவும் அந்த கார்கில் சண்டையிலே உயிரை விட்ட ஒரு ஜவான் அய்யா...'' என்றாள். பத்மினி பட்டாபிராமன்