உள்ளூர் செய்திகள்

தெய்வத்தின் துணை இருந்தால்....

'எனக்கு மட்டும் ஏன் தான் சாமி இப்படி கஷ்டத்தை கொடுக்கிறாரோ...' என்று நம்மில் பலர் புலம்புவதுடன், சில சமயங்களில், தெய்வத்தை நிந்திக்கவும் செய்வோம். ஆனால், மகா புருஷர்களோ, உயிரே போகக்கூடிய அளவிற்கு, துயரங்கள் விளைந்தாலும், தெய்வத்தை நிந்தித்ததில்லை.காட்டில் இருந்த பிள்ளையார் கோவிலுக்கு சென்ற திருடர்கள் சிலர், 'பிள்ளையாரப்பா... திருடச் செல்லும் எங்களுக்கு இன்று நிறைய பொருள் கிடைக்கணும்; அருள் செய்யப்பா...' என, வேண்டிச் சென்றனர். அதே போன்று, அன்று, அரண்மனையில், ஏராளமான பொருட்களை திருடி வந்ததால், 'இத்தனை வருஷத்துல இன்னிக்கு தான் நிறைய பொருள் கிடைச்சிருக்கு; எல்லாம் பிள்ளையாரப்பா அருள்...' என்று சிலாகித்து, தாங்கள் திருடியதில் இருந்து விலை உயர்ந்த பதக்கத்தை எடுத்து பிள்ளையாரை நோக்கி வீசி விட்டு சென்றனர்.இருட்டில் அவர்கள் வீசிய பதக்கம், அக்கோவிலில் தவம் செய்த துறவி ஒருவரின் கழுத்தில் விழுந்தது.பொழுது விடிந்ததும், அரண்மனையில் களவு போனது தெரிந்தது. திருடர்களை தேடிப் புறப்பட்ட காவலர்கள், பிள்ளையார் கோவிலில், தவத்திலிருந்த துறவியின் கழுத்திலிருந்த பதக்கத்தை பார்த்தனர். உடனே, அவரை குண்டுக்கட்டாக கட்டி தூக்கிச் சென்றனர். அவர்களில் சிலர், மன்னரிடம் விரைந்து சென்று, 'அரசே... திருடர்களில் ஒருவன் பிடிபட்டுள்ளான்; அவன், அவர்களின் தலைவனாக தான் இருக்க வேண்டும். அவனிடம் ஒரு பதக்க மாலை மட்டுமிருந்தது; மற்ற ஆபரணங்களோ, திருடர்களோ அகப்படவில்லை. இதோ அவனிடமிருந்த பதக்கம்...' என்று சொல்லி, துறவியிடமிருந்து கைப்பற்றிய பதக்கத்தை மன்னரிடம் அளித்தனர். கூடவே, 'இப்படிப்பட்டவர்களை விட்டு வைத்தால், எதிர்காலத்தில் அரண்மனை மட்டுமல்ல, இந்நாட்டையே கொள்ளையடித்து விடுவர்...' என்றனர்.களவு போன குழப்பத்திலிருந்த மன்னர், 'அக்கொடியவனை உடனே கழுவில் ஏற்றுங்கள்...' என, உத்தரவிட்டார். அதன்படியே, துறவியை, கொலைக்களத்திற்கு அழைத்துச் சென்றனர், காவலர்கள்.அதுவரை நடந்தது எதுவுமே தெரியாமல், தியானத்தில் ஆழ்ந்திருந்த துறவி, தன்னிலைக்கு மீண்டார்; சூழ்நிலையை புரிந்து, கண்களுக்கெதிரில் கழு மர வடிவில், காலன் இருப்பதை பார்த்தார்; ஆனாலும் சற்றும் கலங்கவில்லை.'தெய்வமே... இதில் என் செயல் ஏதுமில்லை; எல்லாம் உன் செயல். நான், இதுவரை எந்த தீவினையும் செய்தது இல்லை. போன பிறவியில் செய்த தீவினை தான், என்னை இவ்வாறு மரணத்தின் முன் நிறுத்தியிருக்கிறதோ...' என, சிவபெருமானை எண்ணிப் பாடினார்.உடனே, எதிரில் இருந்த கழுமரம் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த மன்னர், ஓடி வந்து துறவியின் திருவடிகளில் விழுந்து, அறியாமல் செய்த தவறை, மன்னிக்கும்படி வேண்டினார்.வாழும் நாட்களில் எந்த ஒரு தவறும் செய்திராத நிலையில், தனக்கு இத்துயர் வருவதற்கு, போன பிறவியில் செய்த வினையே காரணம் என்றுணர்ந்து, தெய்வத்திடம் முறையிட்ட அந்த துறவி பட்டிணத்தார். அவர் திருவடிகளில் விழுந்த மன்னர், பிற்காலத்தில் பத்திரகிரியார் எனும் பெயரில், பட்டினத்தாரின் சீடரானார்.நம் கஷ்டத்திற்கான காரணம், நமக்கு தெரியாது. இருட்டில் நிழலோடு சண்டை போடுவதை விட, தெய்வத்தின் துணை கொண்டு, தீவினைகளுடன் போராடலாம். தீ வினைகள் நீங்கும்; தெய்வ அருள் ஓங்கும்!பி.என்.பரசுராமன்திருவாசகம்!பூத்தாரும் பொய்கைப் புனல்இதுவே எனக்கருதிப்பேய்த்தேர் முகக்குறும்பேதை குணம் ஆகாமேதீர்த்தாய் திகழ் தில்லைஅம்பலத்தே திருநடஞ் செய்கூத்தா உன் சேவடி கூடும் வண்ணம்தோணோக்கம் ஆடாமோ!விளக்கம்: தில்லையம்பலத்தில் திருநடனம் செய்யும் நடராஜப் பெருமானே... கானல் நீரை, மலர்கள் நிறைந்திருக்கும் தடாகத்து நீர் என எண்ணி, அதை அள்ள நினைக்கும் பேதமைக்குணம் உண்டாகாமல், எங்கள் அறியாமையை நீக்கி அருளிய உன் திருவடிகளை அடையும் பொருட்டு, நாங்கள் பாடி ஆடுவோம்.கருத்து: அறியாமை நீக்கிய ஆடல்வல்லானை அகம் குளிரப் பாடி, ஆட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !