உள்ளூர் செய்திகள்

வெற்றி சுலபமானால்...

''அது ரொம்ப சுலபம்,'' என்றான் முரளி.பல ஆண்டுகளுக்குப் பின், சொந்த ஊருக்கு திரும்பியிருந்த முரளியை, ஆர்வத்தோடு நோக்கினர், அவன் நண்பர்கள்.அவன் முன்பு இருந்ததற்கும், இப்போது இருப்பதற்கும் பாதாளத்திற்கும், ஆகாயத்திற்கும் உள்ள வித்தியாசம்.முரளி ஊரை விட்டுப் போகும் போது, உடுத்திக் கொள்ள நல்ல உடையோ, உடைமைகளை வைத்துக் கொள்ள நல்ல பெட்டியோ இல்லை. அவனுடைய பரட்டைத் தலைக்கு எண்ணெய் கூட, பக்கத்து வீட்டில் வாங்கித் தான் தடவி விட்டாள் அவன் அம்மா.'பத்திரமா பாத்துக்கங்க...' என்று கூறி, செங்கல்பட்டுக்காரரிடம் கைப்பிடித்துக் கொடுத்தனர், அவனது பெற்றோர்.செங்கல்பட்டுக்காரரிடம், பத்து ஜெர்சி பசுக்கள் இருந்தன. அவைகளை பராமரித்து, பால் கறந்து, வினியோகம் செய்து, பால் பண்ணை நடத்தி வந்தார்.முரளிக்கு, முதலில், சாணம் அள்ளி, கொட்டகையை கழுவி சுத்தம் செய்யும் வேலை.'பிடிச்சிருக்கா பாரு... இல்லனா வேற வேலையில சேர்த்து விடறேன்...' என்றார், செங்கல்பட்டுக்காரர்.'முதலாளி... நீங்களே இந்த வேலை தான் செய்றீங்க; நான் செய்றதுக்கென்ன, எனக்கொண்ணும் கஷ்டமில்லங்க...' என்றான். அவர், அவன் தலையை கோதியபடியே, 'பிழைச்சுக்குவே...' என்றார்.சாணத்தை உருட்டி, வறட்டி தட்டுவதும், கடையில் தீவனங்கள் வாங்கி வருவதும், மாடுகளை குளிப்பாட்டுவதும் மற்றும் வரவு - செலவு கணக்கு எழுதுவதும் என, அவன் வேலைகள் நீண்டன.கொட்டகையில் பசுக்கள் இசை கேட்பதற்காக, சி.டி., போடுவர். பசுக்கள் மயங்குகிறதோ இல்லையோ, அவன் கரைந்து உருகுவான். வேலையே அனுபவமாய், அனுபவமே வேலையாய் மாற்றிக் கொண்டான்.பிரபல பால் நிறுவனம், பண்ணையை குத்தகைக்கு எடுக்க. பசுக்கள் பெருகி, அதையொட்டிய வேலைகளும், அதற்கான ஆட்களுமாய் விரிவடைய, இப்போது பண்ணையின் நிர்வாகம், கிட்டத்தட்ட முரளியின் கைக்கு வந்தது.நல்ல சம்பளம், சாப்பாடு, இருப்பிட வசதி மற்றும் வாகனம் என்று, அவனை உயரத்தில் வைத்திருந்தார் முதலாளி. ஆனாலும், அவன் இப்போதும் தொழுவத்தில் தான் அதிக நேரம் இருந்தான். தொழுவம் அவனுக்கு தொழிற்சாலை.ஆண்டுகள் சில கடந்த பின், பளிச்சென்று அவன் ஊரில் வந்து இறங்கவும், பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டனர்.'முரளி... அடையாளமே தெரியலயே... நல்லா தேறிட்டியே...' என்றனர்.திருஷ்டி கழித்தாள் அம்மா.தான் கொண்டு வந்திருந்த பணத்தை கைநிறைய எடுத்து அப்பாவிடம் கொடுத்தான்.'இத்தனை வருஷத்துல நாங்க, ஒரு அங்குலம் கூட வளரல... நீ எப்படிடா...' என்று நண்பர்கள் கேட்டதற்கு, முரளி கூறிய வார்த்தை தான், 'வெற்றி ரொம்ப ஈஸி!''நாங்களும், உன்னைப் போல ஆகணும்டா; வேலை கிடைக்குமாடா...' என்றவர்களுக்கு, 'செய்யத் தயாராய் இருந்தா, எல்லா இடத்திலும் வேலை கிடைக்கும்...' என்றான் முரளி.'நீ இருக்கிற இடத்துக்கு அழைச்சிட்டு போய், எங்களுக்கு வேலை வாங்கி கொடுப்பியா...' என்றனர் சிலர். 'தாராளமா... வீட்ல அனுமதி வாங்கிட்டு வாங்க...' என்றான்.'கேட்கணுமா... சும்மா இழுத்துக்கிட்டு போ தம்பி; எப்படியாவது இவனுகளையும் உன்னளவுக்கு கொண்டு வந்திடு...' என்றனர் அவர்களது பெற்றோர்.முரளி ஊருக்கு புறப்பட்டபோது, அவனோடு வந்தவர்கள் நாலு பேர்!அவர்களை டவுனில் உள்ள தன் அறையில் தங்க வைத்தான் முரளி. அவன் அறையில் இருந்த பேன், கட்டில் மற்றும் மேஜை போன்ற வசதிகளைப் பார்த்து, 'இந்த மாதிரி இடத்துல, சம்பளமே இல்லாம வேலை பார்க்கலாம் போலிருக்கே... ஊர்ல அவன் என்னமோ, மாட்டு கொட்டாய்ல சாணி அள்ளுற வேலை பார்க்குறான்னுல்ல சொன்னாங்க...' என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.''பேக்டரி ஒரு இடத்துல, நிர்வாக அலுவலகம் வேற இடத்துல இருக்குற மாதிரி, இதுவும் இருக்கும் போல... முதல்லயே தெரியாம போச்சுடா. நாம என்னமோ நினைச்சோம்; ஆனா, இவனுக்கு எவ்வளவு சொகுசான வேலை. அன்னைக்கே நாமும் வந்திருந்தா, இந்நேரம் கைநிறைய சம்பாதிச்சிருக்கலாம்...'' என்றான் அவர்களில் ஒருவன்.மறுநாள், அவர்களை பண்ணைக்கு அழைத்துச் சென்றான் முரளி. நவீனமாக இருந்த பண்ணை மற்றும் பசுமையாக இருந்த தீவன தோட்டம் எல்லாம் சுற்றிக் காட்டி, ''பிடிச்சிருக்கா?'' என்று கேட்டான்.'சுற்றுலா தலம் மாதிரி இருக்கு...' என்றனர்.''இங்கே வேலை செய்ய உங்களுக்கு விருப்பம் தானே?''''என்னடா இப்படி கேட்டுட்ட... அதுக்குத்தானே வந்திருக்கோம். இப்பவே ஆரம்பிச்சுடறோம். என்ன வேலை சொல்லு... பால் கணக்கு எழுதணுமா, பால் வண்டியில போகணுமா, வேலையை மேற்பார்வை பார்க்கணுமா...'' என்று ஆர்வமாய் கேட்டான் ஒருவன்.''அதுக்கு முன், ஒரு வேலை இருக்கு வாங்க,'' என்று அழைத்துப் போய், அவர்கள் கையில் சின்ன தகரமும், ஒரு முறமும் கொடுத்து, ''முதல்ல தொழுவத்தை சுத்தம் செய்யலாம் வாங்க,'' என்று கூறி முன்னால் நடந்தவன், ''பால் பண்ணை வேலைங்கறது, பேக்டரி வேலை மாதிரி இரும்பும், இயந்திரமும் கலந்த வேலையில்ல; உயிரும், உணர்வும் கலந்தது. நமக்கு இது புதுசில்ல. ஊர்ல மாடு இல்லாத வீடே இல்ல. ஒவ்வொரு மாட்டையும், நம்ம குடும்பத்தில் ஒருத்தராகவே நினைச்சு வளர்க்கறோம்; பழகுறோம். அதோடு ரொம்ப இணக்கமா, நேசமா இருக்கிற மாதிரி, இங்கும் இதுகளோடு இருக்கணும்.''பசுக்கள வசியப் படுத்தணும்ன்னா, முதல்ல அதுகளோட கழிவுகளை அப்புறப்படுத்தி, அவைகளை குளிப்பாட்டி, தீவனம் கொடுத்து, இடம் மாற்றி கட்டி, அதுங்களோடு பேசி, அதுங்க மொழியை புரிஞ்சுக்கிட்டோம்ன்னு வைங்க... அதுகளோட சிக்கலும், புரிஞ்சு போகும். அதுகளுக்கு என்ன தேவை, என்ன தேவையில்லன்னு தெரிய வரும்.''பசுக்களோடு ஐக்கியம் ஆகிட்டா, மத்த வேலைகள புரிஞ்சு செய்ய ஆரம்பிச்சிடலாம்; சிரமமாகவே இருக்காது. போகப் போக நிர்வாக வேலைய கத்துக்கிட்டா பொறுப்பும், சவுகரியங்களும் வரும். எதிர்காலத்துல லோன் போட்டு, பத்து பசு மாடுக வாங்கி, சொந்தமா பால் பண்ணையே நடத்தலாம். எல்லா வேலையையும் கத்துக்கிட்டா, யாரும் நம்மை ஏமாத்தவோ, பொய் சொல்லவோ முடியாது.''என்னைப் போல வரணும்ன்னு தானே ஆசைப்பட்டீங்க. என்ன செய்தால் என்னளவு வரமுடியும்ன்னு தெரியணும்ல... நான் இங்க வந்து செஞ்ச முதல் வேலை இதுதான்! இங்கிருந்து தான் ஒவ்வொண்ணா கத்துக்கிட்டு, மேல வந்தேன். ஆனா, எனக்கு பல வருஷம் ஆச்சு. நீங்க தீயா வேலை பார்த்தா சில மாசத்துல, தனி பண்ணை கூட ஆரம்பிச்சுடலாம்...'' என்று பேசியபடியே நண்பர்களை திரும்பிப் பார்த்தான் முரளி.அவன் பின்னால் வந்தவர்களில், ஒருவனைத் தவிர, மற்றவர்கள் திரும்பிப் போய் கொண்டிருந்தனர்.''ரொம்ப சுலபம்ன்னு சொன்னியா... அதோடில்லாமல், வந்ததும் சாப்பாடு, சினிமான்னு கவனிச்சியா... பயலுக கற்பனையில மிதந்தாங்க. ஆபீஸ் வேலை, நேரத்துக்கு சாப்பாடு, மாசம் பொறந்தா சம்பளம்ன்னு நினைச்சுட்டாங்க. இங்க வந்து, சாணி அள்ளச் சொல்லி, தகரத்தை கையில் கொடுத்ததும் மிரண்டுட்டாங்க. ஊர்ல வேலை செய்ய உடம்பு வணங்காத பசங்க, இதெல்லாம் எப்படி செய்வாங்க?''போறானுங்க பாரு... இவ்வளவு தூரம் பணம் செலவழிச்சு, கூட்டிக்கிட்டு வந்து, மூணு நாள் சோறு போட்டதுக்கு, ஒரு நன்றி கூட சொல்லாம...'' என்றான் போகாமல் நின்றிருந்த நண்பன்.''அவங்க ஏமாற்றத்துல போறாங்க. நான் சுலபம்ன்னு சொன்னது, சின்ன வேலையிலிருந்து துவங்கலாம்ங்கிறதை... சாணி அள்றது சுலபமா, கஷ்டமா நீ சொல்லு...'' கேட்டான் முரளி.''உனக்கு சுலபம்; உனக்கு மட்டும் தான் சுலபம். மூணு நாள் உபசாரத்துக்கு நன்றி சொல்லத் தான் நின்னேன்,'' என்று சொல்லி, அவனும் அந்த மூவரணியைப் பின்தொடர, புன்னகையுடன் தொழுவம் நோக்கி நடந்தான் முரளி.அவனை எதிர்பார்த்து, ஆவலாக குரல் கொடுத்தன பசுக்கள்!எஸ். செங்கோடன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !