உள்ளூர் செய்திகள்

ஏழையின் சிரிப்பில்...

''போன வாரம் தானே, உன் அக்கவுண்டில், பணம் போட்டேன். திரும்பவும் பணம் கேட்குறே... உன் மனசுல என்ன தான் நினைச்சுட்டு இருக்க. நான் என்ன பணம் காய்க்கும் மரமா,'' என, ஏக வசனத்தில் மூச்சு விடாமல், மகனை வசை பாடிக் கொண்டிருந்தார், மோகன்.இந்த, 'கொரோனா' தொற்று வந்தாலும் வந்தது. ஊரடங்கு சமயத்தில், வீட்டில் நடக்கும் விவாதங்களையும், சண்டைகளையும் பார்த்து, நொந்து போயிருந்தாள், சுமதி.''காலங்கார்த்தால என்னங்க பிரச்னை... உங்க ரெண்டு பேரையும் சண்டை போட விடாம, கட்டி காப்பாற்றுவதிலேயே என் வாழ்க்கை முடிஞ்சுடும் போல,'' என, புலம்பினாள்.''நானா சண்டை போடுறேன். உன் மகன் செய்த காரியத்தை அவனிடமே கேளு. எல்லாம் நீ கொடுக்கிற செல்லம் தான், அவனை கெடுத்து குட்டிச் சுவராக்குது.''''டேய் வருண், என்னடா செஞ்ச... நீயாவது சொல்லித் தொலையேன். அடுப்படியில் ஏகப்பட்ட வேலை இருக்கு.''''நான் எதுவும் செய்யலை. செலவுக்கு கொஞ்சம் பணம் கேட்டேன், அது தப்பா?'''என்னது, பணமா... சம்பளம் வாங்கிய உடனேயே, 1,000 ரூபாய் கொடுத்தாரே... அதற்குள் செலவழித்து விட்டானா... எப்படி, 'லாக் டவுனில்' வீட்டில் தானே இருக்கிறான்.'ஒருவேளை, எங்களுக்கு தெரியாமல், ரம்மி, அது, இது என்று, 'ஆன்லைனில் கேம்' விளையாடுகிறானா...' என, ஒரு நிமிடத்தில் ஏதேதோ சந்தேகங்களால், மனதில் ஒருவித பயம் தொற்றிக் கொண்டது.இவர் எதிரில் விசாரித்தால், தந்தைக்கும், மகனுக்கும் வாக்குவாதம் முற்றி, அடிதடி நிலைக்கு போய் விடுமோ என்ற அச்சத்தில், மகனை இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் புகுந்தாள்.''டேய்... போன வாரம் தந்த பணத்தை என்ன செஞ்ச... உண்மையை சொல்லுடா,'' என, கண்ணீர் மல்க கேட்டாள்.''அம்மா, இப்ப என்ன நடந்துச்சுன்னு அழற... என் பிரெண்ட், அஜித் தெரியும்ல?''''ஆமா, தெரியும். அவனுக்கு என்ன?''''அவுங்க கிராமத்தில் இருக்கிற ஏழை மக்களுக்கு, 'கொரோனா' நிவாரணமா, அரிசி, பருப்பு, காய்கறி எல்லாம் வாங்கி கொடுக்க போறானாம். அதுக்கு, என் சார்பில் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு கேட்டான். ''அப்பா கொடுத்த பாக்கெட் மணியிலிருந்து, 500 ரூபாய் அனுப்பிட்டேன். ஆனாலும், மனசு கேட்கலை. இன்னும் கூடுதலா பணம் கொடுக்கலாம்ன்னு நினைச்சு தான், அப்பாவிடம் கேட்டேன்.''விஷயத்தை முழுசா சொல்றதுக்குள்ள, வானத்துக்கும், பூமிக்கும் குதிக்கிறார். நான் என்ன செய்ய முடியும். போதாதுன்னு நீயும் அழுது, ஒப்பாரி வைக்கிற. ஏம்மா என்னை புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க,'' என, கடிந்தான் வருண்.மகனின் விளக்கத்தை கேட்ட பிறகு தான், மனம் அமைதியானது.அஜித், நல்ல பையன். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான், அவனை பற்றி அறிந்து கொண்டாள். அவன் அறிமுகமானதும், இதே போன்ற நிதியுதவி கோரும் சம்பவத்தில் தான்.குடியிருப்போர் நல சங்கத்தில், பொருளாளர் பதவியில் இருக்கிறார், மோகன். குடியிருப்புக்கு உட்பட்ட பகுதியில், கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. அதனால், சங்க உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் கூட்டி, கோவில் விழாவை சிறப்பாக நடத்துவது என, தீர்மானித்தனர்.முக்கிய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நன்கொடை வசூலிப்பது எனவும், பொருளாளர் என்ற முறையில், தான், 1 லட்சம் நன்கொடை வசூலித்து கொடுப்பதாகவும், வாக்கு கொடுத்தார், மோகன்.இத்தொகையில் ஒரு பகுதியை, சங்க உறுப்பினராக உள்ள, 200 குடும்பங்களுக்கு, தாம்பூல பையுடன், தேங்காய், பழம், 'கிப்ட்' என, குறைந்தது, 250 ரூபாய் மதிப்பில் கொடுக்க வேண்டும் என, தீர்மானித்தார்.கூட்டம் முடிந்து, வீட்டிற்கு வந்தவுடன், யாரிடமெல்லாம் நன்கொடை வசூலிப்பது என, ஒரு பட்டியல் தயாரித்து, அதன்படி ஒவ்வொருவரையும் மொபைலில் தொடர்பு கொண்டார்.நன்கொடை வசூலிப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை என்பது, நான்கைந்து நபர்களிடம் பேசியபோது தான் புரிய ஆரம்பித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை கூறி, தட்டிக் கழித்தனர்.தொடர் முயற்சிக்கு பின், 5,000 ரூபாய் வசூல் ஆனதே பெரிய விஷயமாக இருந்தது. தாம்பூல பைக்கே, 5,000 ரூபாய் தேவைப்படும்.கடைசி முயற்சியாக, தன் நெருங்கிய நண்பரும், தொழில் அதிபருமான, குமாரசாமியை அவரது ஊரில் நேரில் சந்தித்து, நன்கொடை கேட்பது என, முடிவெடுத்தார்.நண்பரை சந்திக்க கிளம்பியபோது இருந்த உற்சாகம், சந்தித்த பிறகு இல்லை. சோர்ந்து, வீடு வந்து சேர்ந்தார்.வருணும், சுமதியும் வற்புறுத்தி கேட்ட போது, 'நண்பரின் மகளுக்கு திருமணம் உறுதியாகி உள்ளது. சென்ற மாதம், மகன், மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளான். கல்வி செலவு, திருமண செலவு, வருமான வரி என, பல காரணங்களை கூறி, தற்போதைக்கு நன்கொடை தர இயலாது...' என, கூறியதாக சொன்னார்.தமிழக தொழிலதிபர்கள் பட்டியலில், குறிப்பிடத்தக்க நிலையில் இருக்கும் குமாரசாமிக்கு, 50 ஆயிரம் நன்கொடை என்பது பெரிய விஷயமில்லை. ஆனால், அதை செய்வதற்கு அவருக்கு மனமில்லை. என, நினைத்து கொண்டாள் சுமதி.அந்த சமயத்தில், தந்தையிடம் ஆறுதலாக பேசினான், வருண்.'அப்பா... கோவில் கும்பாபிஷேகம் பற்றி கவலைப்படாதீங்க. நண்பர்கள் வட்டத்தில், 'பேஸ்புக், வாட்ஸ் - ஆப்' போன்ற சமூக வலைதளங்களில் இது பற்றி போட்டால், நிச்சயம் ஏதாவது உதவி செய்வர். அதனால், கவலையை விட்டு, நிம்மதியாய் இருங்க. பணத்திற்கு நான் பொறுப்பு...' என்றான்.சொல்லியபடியே, தன் நண்பர்கள் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வசூலித்தான். ஆனால், 'கொரோனா' பிரச்னையால், இன்னும் கோவில் விழா நடத்தப்படாமலேயே உள்ளது.நன்கொடை என்றவுடன், முதலில் பணம் அனுப்பி உதவியது, அஜித் தான்.அவன், இப்போது வேறு ஒரு நல்ல காரியத்திற்காக உதவி கேட்கும்போது, செய்யாமல் இருப்பது தவறு தானே. இதை, மோகனிடம் விளக்கி, ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொடுக்க தீர்மானித்தாள், சுமதி.மாலையில், மொட்டை மாடியில் நடை பயிற்சியில் இருந்த கணவனிடம் மெதுவாக பேசினாள்.சுமதியின் பேச்சை கேட்ட மோகன், ''சுமதி, நீயும் புரியாம பேசாத. இப்ப உள்ள சூழ்நிலைக்கு, நமக்கு, 500 - 1,000 என்பது பெரிய தொகை.''நாம ரெண்டு பேரும் அரசு ஊழியர்கள்; ஒன்றரை வருஷமா, நமக்கு பஞ்சப்படி கிடையாது; சரண்டர் பணம் வராது; பிரமோஷனும் கிடையாது. ஆனா, விலைவாசி மட்டும் உயர்ந்துட்டே போகும். அப்போது, இருக்கிற சம்பளத்தை வைத்து எப்படி செலவுகளை சமாளிக்க முடியும்?''வருணுக்கு, காலேஜ் பணம் கட்டணும்; வர்ஷா, பிளஸ் 2 முடிக்கிறாள். அவளுக்கு காலேஜ், 'சீட்' வாங்கணும். அதுக்கு எவ்வளவு செலவாகும்ன்னு தெரியாது. இந்த செலவுகளோட, கார் மற்றும் வீட்டு கடன் என்று, ஏகப்பட்ட செலவுகள் இருக்கு. அடுத்தவரிடம் போய் கடன் கேட்க முடியாது.''அதனால, இப்ப இருந்தே செலவுகளை குறைச்சா தான், இந்த பிரச்னைகளையெல்லாம் சமாளிக்க முடியும். நமக்கே இல்லாதப்போ, அடுத்தவங்களுக்கு எப்படி கொடுக்க முடியும்; 500 ரூபாய் கொடுத்துட்டேன். அதுவே போதும்,'' என்றார்.மோகன் சொல்வதிலும் உண்மை இருந்தது. நடுத்தர மக்களுக்கு வரவை விட, செலவுகள் கை மீறி விட்டால், அதிலிருந்து மீள்வது சிரமம் தான். யாரிடமும் போய் உதவி என்று கேட்பதற்கு தன்மானம் இடம் தராது என்று எண்ணியபோது தான், மோகனின் நண்பரான தொழிலதிபரின் நினைவு வந்தது.நடுத்தர வர்க்கத்தினர், நமக்கே அடுத்தவரிடம் உதவி கேட்க தன்மானம் இடம் தராதபோது, மேல்தட்டில் இருக்கும் அவருக்கு, பண நெருக்கடி என்ற நிலை வந்தால், அவரால் என்ன செய்ய முடியும். பண நெருக்கடி என்பதை பிறர் நம்புவரா...அதனால் தான், நன்கொடை கேட்ட போது, தன் செலவுகளை நினைத்து கொடுக்க மறுத்திருக்கலாம். அவருடைய நிலையிலிருந்து சிந்திக்க தவறி விட்டோமே என, வருந்தினாள்.இதுகுறித்தும், கணவனிடம் பேசினாள். சுமதியின் பேச்சிலிருந்த உண்மையை உணர்ந்த, மோகன், உடனடியாக நண்பர் குமாரசாமியை மொபைல் போனில் தொடர்பு கொண்டார். ''வணக்கம், குமார். நல்லா இருக்கீங்களா, பேசி ரொம்ப நாளாச்சு. பாப்பாவுக்கு திருமணம்ன்னு சொன்னீங்க. திருமண வேலையெல்லாம் எப்படி இருக்கு, எப்ப திருமணம்...'' என, விசாரித்தார், மோகன்.மறுமுனையில் பேசிய நண்பர், ''மோகன்... நானே உங்களோட பேச நினைச்சேன். நீங்களே போன் பண்ணிட்டீங்க. பாப்பாவுக்கு, போன வாரம் திருமணம் முடிஞ்சுடுச்சு. 'கொரோனா' பிரச்னையால, சிம்பிளா வீட்டிலேயே திருமணத்தை முடிச்சுட்டோம். அதனால தான், உங்களை திருமணத்துக்கு அழைக்க முடியலை. தப்பா நினைக்காதீங்க...''இன்னொரு விஷயம், திருமணம் சிம்பிளா முடிஞ்சதால, அந்த செலவு தொகையில், 5 லட்சத்தை, 'கொரோனா' நிவாரண நிதிக்கு கொடுத்துட்டோம். நீங்க, கோவில் காரியமா, பணம் கேட்டீங்க இல்லையா, 1 லட்சம் அனுப்பறேன். விழாவை நல்லபடியா நடத்துங்க,'' என்றார், குமாரசாமி.நண்பரின் பேச்சை கேட்டு, அதிர்ச்சியிலும், ஆனந்தத்திலும் திக்குமுக்காடினார், மோகன்.''நண்பரே... இந்த பணத்தை, தாம்பூல பைக்கு செலவழிக்கலாம் என்று முதலில் நினைச்சேன். இப்போ இந்த தொகையை, ஏழை மக்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறி வாங்கி கொடுக்க பயன்படுத்தலாமா,'' என்றார்.''தாராளமா, மோகன்... கடவுளுக்கு செய்வதும், ஏழைகளுக்கு செய்வதும் ஒன்று தான். 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்' என்று, அறிஞர் அண்ணாதுரை சொல்லியிருக்கிறார். உங்க வங்கி கணக்கு விபரத்தை அனுப்புங்க. நாளைக்கே பணம் அனுப்புறேன்,'' என்றார், குமாரசாமி.இவர்களின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த, சுமதியும், வருணும், நல்ல வழியில் வரும் பணம், ஏழைகளுக்கு பயன்பட போவதை நினைத்து, மகிழ்ச்சி அடைந்தனர்.எஸ். ஆர். சாந்தி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !