உள்ளூர் செய்திகள்

நல்ல கூட்டணி அமையட்டும்!

'மகத்தில் பிறந்தால், ஜெகத்தை ஆளலாம்' என்பது ஜோதிட மொழி. ஜெகம் என்றால் உலகம். ஆட்சியாளர்கள் நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.மதுரையை ஆண்ட பாண்டிய நெடுஞ்செழியனும், அவன் மனைவி கோப்பெருந்தேவியும் மிகவும் நல்லவர்கள் தான். இருந்தும் என்ன பயன்? ஆராயாமல் தீர்ப்பு வழங்கியதன் விளைவு, அவர்களை மட்டுமல்ல, அந்நகரையே அழித்து விட்டது. அரசாள்வோரும், அதிகாரிகளும் நல்லவர்களாக இருந்தால் தான், இத்தகைய விளைவுகள் தடுக்கப்படும்.மகாமகம் திருவிழா நடத்துவதன் நோக்கமே, இதுபோன்ற நல்ல கூட்டணியை வரவேற்கத் தான். ஆனால், இது, கிரகக் கூட்டணி!நவக்கிரகங்களின் தலைவரான சூரியன், மாசி மாதம், கும்ப ராசியில் இருப்பார். இந்த ராசி, சனீஸ்வரருக்குரிய சொந்த வீடு. சூரியனுக்கும், சனீஸ்வரருக்கும் ஆகாது. இதனால், உலகில் உள்ள உயிர்கள் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இச்சமயத்தில் உயிர்களைக் காப்பாற்ற, தெய்வ அருள் வேண்டும். நவக்கிரகங்கள், சிவனுக்கு கட்டுப்பட்டவை. அவரது திருவருள் வேண்டுமானால், குருவருள் தேவை!நாம் தவறான பாதையில் செல்லும் போது, நம்மைத் தடுத்து நிறுத்தி, யாரொருவர் நல்வழி காட்டுகிறாரோ அவரே குரு!சனீஸ்வரருக்குரிய கும்ப ராசியில் சூரியன் இருக்கும் போது, அந்த இருவராலும் ஏற்படும் பிரச்னையைத் தடுக்க, சிம்ம ராசிக்கு வந்து விடுகிறார் குரு. இந்நிகழ்வு, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால், மகாமகம் கொண்டாடப்படுகிறது.சிம்ம ராசியில் இருக்கும் குரு, தன் ஏழாம் பார்வையால் கும்ப ராசியில் இருக்கும் சூரியனை பார்ப்பார். இது எப்படி என்றால், சிம்ம ராசியில் இருந்து கும்பம் வரை வரிசையாக எண்ணினால், ஏழாவது ராசியாக கும்பம் வரும். இதைத்தான், ஏழாம் பார்வை (நேரடி பார்வை) என்பர். குருவின் ஏழாம் பார்வை, எந்த ராசியில் விழுகிறதோ, அந்த ராசியில் இருக்கும் கிரகங்கள், தங்கள் சேட்டையைக் குறைத்துக் கொள்ளும். குருவின் ஆதிக்கமே அதிகமாக இருக்கும். அதாவது, குரு அந்த கிரகத்தை நல்ல பாதையில் நடக்கும்படி அறிவுறுத்துவார். அப்போது, சூரியன், குருவின் கட்டளைக்கு கட்டுப்பட்டு, உலகிற்கு நன்மை செய்வார்.அது மட்டுமல்ல, சூரியனுக்கு நிகரான இன்னொரு கிரகமான சந்திரனும், மகாமகத்தன்று சிம்ம ராசியில் தான் இருப்பார். அன்று பவுர்ணமி என்பதால், சந்திரனின் ஆற்றலும் அதிகமாக இருக்கும். சந்திரனும், சூரியனும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போது நன்மை ஏற்படும்.சூரியன், ஆன்மிக பலமான ஆத்மபலத்தையும், சந்திரன் தைரியம் எனப்படும் மனோபலத்தையும் உலக உயிர்களுக்கு தருவர். குருவோ சகல நன்மைகளையும் தருபவர். அவரது பார்வை கோடி நன்மை தரும். திருமணம், குழந்தைப் பேறு, தொழில் மற்றும் செல்வ அபிவிருத்தி என, எல்லாமும் அவரது சிபாரிசுபடி தான் சிவனால் நமக்கு அருளப்படும். கிரகங்கள் இப்படி ஒரு கூட்டணி அமைத்து நமக்கு நன்மை தருவது போல, இந்த உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் நல்ல ஆட்சி மலரட்டும். அதற்கு, மகாமக நாயகரான கும்பகோணம் கும்பேஸ்வரர் அருள் புரியட்டும்!தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !