புத்தகம் படிக்கலாம் வாருங்கள்!
விடுமுறையில், நீச்சல், ஓவியம் மற்றும் டிரைவிங் என, இன்ன பிறவும் கற்றுக் கொள்வது இருக்கட்டும். இந்த விடுமுறையில், உங்கள் குழந்தைகளுக்கு, புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.நிறைய புத்தகங்கள் படிப்பவர்களுடைய மூளை, மற்றவர்களை விட, கூர்மையாக இயங்குகிறது; எந்தத் துறையிலும், வெற்றி பெறுகின்றனர்; இது, திரும்பத் திரும்ப பல ஆய்வுகளில், ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.வெவ்வேறு வயது குழந்தைகள், அவசியம் படிக்க வேண்டிய சில புத்தகங்களைப் பற்றி, இங்கே பார்ப்போம்...மூன்று முதல் ஏழு வயதுள்ள குழந்தைகளுக்கு:படங்கள் அதிகம் உள்ள, எழுத்தக்கள் குறைவாக உள்ள புத்தகங்கள் ஏராளமாக கிடைக்கின்றன. வண்ண மயமான படங்களை,குழந்தைகள் விரும்பிப் பார்ப்பர். பெற்றோர், அவர்களுக்கு படித்துக் காட்ட வேண்டி இருக்கும். சில சொற்களை, குழந்தையை சொல்லச் செய்யலாம். படங்களை சுட்டிக்காட்டி, 'இது என்ன?' என்று கேட்கலாம். 'இதேபோல் பொம்மை நம்ம வீட்ல இருக்கே. அதைக் காட்டு பார்க்கலாம்...' என்று புதிர் போடலாம்.ஏழு வயது முதல் பத்து வயதள்ள குழந்தைகளுக்கு:படம் உள்ள புத்தகங்களை தான் அதிகம் விரும்புவர். ஆனாலும், படத்துக்கு சமமாக, எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பர்.இவர்கள் விரும்பி வாசிக்கக்கூடிய சில புத்தகங்கள் எவையென்றால், அமர்சித்ர கதா வரிசைப் புத்தகங்கள்... இந்தியாவின் மிகச் சிறந்த, 'காமிக்ஸ்'களை வெளியிடும் நிறுவனம் இது. எளிமையான நடையில் இருக்கும். நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு என, எல்லா வகைகளிலும் கிடைக்கின்றன.பஞ்ச தந்திர கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், கீதோபதேசம் மற்றும் ஜாதகா ஸ்டோரிஸ் போன்ற புத்தகங்களை வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.ஆங்கில வரிசையில், தி விசார்ட் ஆப் ஊஸ்... இது ஒரு ஜாலியான, மாயாஜாலக் கதை. அழகழகான படங்களுடன் கிடைக்கும். வாசிக்க வாசிக்க, அக்கற்பனை உலகமும், கதாபாத்திரங்களும் நம்மை உள்ளிழுத்துக் கொண்டு விடும். இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.ஆலிசின் அற்புத உலகம்: இதுவும் முந்தைய கதையை போலவே, மாய உலகம் சம்பந்தப்பட்டது தான். வார்த்தை விளையாட்டுகளாட்டும், வினோத கதாபாத்திரங்களாகட்டும், கற்பனைக்கெட்டாத காட்சிகளாகட்டும்... வாசிக்கும் ஒவ்வொருவரையும் திகப்பில் ஆழ்த்தி, தன் ரசிகர்களாக்கி விடும் மாயப் புத்தகம் இது. இதன் தமிழ் மொழி பெயர்ப்பும் கிடைக்கிறது.பத்து வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு:தானாகவே தேடித் தேடி வாசிக்க ஆரம்பிக்கும் இந்த வயதினருக்கு, ஆங்கிலத்தில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. குறிப்பாக, துப்பறியும் கதைகள், மாயாஜாலக் கதைகள் மற்றும் அட்வென்சர்ஸ் கதைகள் என, ஏராளமான புத்தகங்கள் உள்ளன.ஹாரி பாட்டர் வரிசை... உலகறிந்த மந்திரவாதி சிறுவனான, ஹாரி பாட்டரின் வாழக்கையை சொல்லும் ஏழு பாகங்கள் உள்ளன. சில ஆயிரம் பக்கங்களுக்கு நீளும் இக்கதையை, ஒரே வாரத்தில் படித்து முடித் தவர்கள் உண்டு. அதன்பின், பலமுறை, திரும்ப திரும்ப படித்தவர்களும் உண்டு. ஹாரி பாட்டரும், அவனுடைய நண்பர்களும் படிக்கிற மாயாஜால பள்ளியை பற்றியும், அதைச் சார்ந்திருக்கிற உலகத்தையும், இதன் எழுத்தாளரான ரவுலிங்கின் நேர்த்தியான எழுத்தாற்றலில், படிக்க படிக்க திகட்டாதது.பேமஸ் பைவ் மற்றும் சீக்ரட் செவன் வரிசைப் புத்தகங்கள்:பெயரை பார்த்ததும் புரிந்திருக்கும்... ஐந்து பேரோ, ஏழு பேரோ சேர்ந்து துப்பறிகிற கதைகள் தாம் இவை. விதவிதமான சூழ்நிலைகள், வித்தியாசமான பிரச்னைகள் என்று, இவர்கள் சந்திக்கிற சவால்கள், மாணவர்களை வெகுவாக கவரும். இந்த வரிசையில், நுாற்றுக்கணக்கான புத்தகங்கள் இருப்பதால், மணிக்கணக்கில் படிக்கலாம்.ஹாரிபிள் ஹிஸ்டரி சீரிஸ் கதைகள்: வரலாற்றை இப்படியும் சுவையாகச் சொல்ல முடியுமா என, திகைக்க வைக்கும் வரிசைப் புத்தகங்கள் இவை. கிட்டத்தட்ட, 'காமிக்ஸ்' மாதிரி தான் இருக்கும். வலைதளங்களில் மேய்ந்தாலும், புத்தகங்கள் படித்து, அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் குழந்தைகளே!எஸ்.எஸ்.ஆதித்யா