உள்ளூர் செய்திகள்

நடிப்பை கை விடுவோம்!

'சில வாரங்களுக்கு முன்பு தான், 'கொஞ்சம் நடிங்க பாஸ்' என்றீர்கள்; இப்போது, அதை கைவிடச் சொல்றீங்களே... எங்கள் நினைவாற்றலை பற்றி, என்ன நினைத்துள்ளீர்கள்...' என்று, கேட்பீர்கள் என தெரியும்.அது வேறு, இது வேறு. இது, சமாளிபிகேஷன் அல்ல; முற்றிலும் வேறு கோணம். கட்டுரையின் போக்கில், இதை நீங்களே ஏற்பீர்கள்.நம் உடல் நலத்தில், நமக்கு அக்கறை இருப்பதாக நடிக்கிறோம்; உண்மையில், நம் ஆரோக்கியத்தின் மீது நமக்கு அக்கறை இல்லை.'ரொம்ப மெலிஞ்சுக்கிட்டே போறீங்க... உடம்பை பாத்துக்குங்க...' என்று, எவரேனும் அக்கறையோடு சொன்னால், 'அதெல்லாம் ஒண்ணுமில்லை; நல்லா தான் இருக்கேன்...' என்கிறோம்.'இப்பல்லாம், பேன்ட் இடுப்புல நிக்க மாட்டேங்குது; நீங்க சொல்றது உண்மை தான்...' என்று ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.'ஜாக்கெட் கை லூசாகிக் கிட்டே போகுது; நீங்களும் சொல்றதுனால, என்னன்னு பார்த்துக்குறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி...' என்று சொல்ல, ஏனோ நமக்கு மனம் வருவதில்லை.'ஏன் இப்படி டல்லா இருக்கீங்க... அலுவலகத்தில் ஏதும் பிரச்னையா...' என்று மனைவி கேட்க, உடனே, 'இல்லையே... நான், நல்லா தானே இருக்கேன்...' என்று, சூப்பராக நடிக்கிறார் கணவர்.பகிர்ந்து கொள்ளும் துன்பம், பாதியாகிறது என்கிற உண்மை, ஏனோ இவருக்கு புரிவதில்லை.'அட நீங்க வேற... என் மனைவியை பத்தி உங்களுக்கு தெரியாது... 'நான் அப்பவே சொன்னேனே கேட்டீங்களா... இப்படி நடக்கும்ன்னு எனக்கு ரொம்ப நல்லா தெரியும்...' என்று ஆரம்பித்து, என்னை, மேலும் கவலை கடலுக்குள் தள்ளி விடுவாள். இதற்கு, நான், அவளிடம் வாயை திறப்பதில்லை...' என்று, சமாதானம் சொல்கிற கணவர்கள் இருக்கின்றனர்.தங்கள் மனைவியை பற்றிய இவர்களது கணிப்பு, உண்மையாக இருக்குமானால், அணுகுமுறையை வேறுவிதமாக மாற்ற வேண்டும்.'சொல்லலாம் தான்... ஆனால், நீ எனக்கு தைரியம் சொல்லாம, என்னை, மேலும், டென்ஷாக்குறே...' என்று ஆரம்பித்தால், காற்று அப்படியே திசை மாறும்.காதல்கள், ஏன் சில நேரம் திருமணத்திற்கு பிறகு தோல்வியடைகின்றன தெரியுமா...ஒரு காதலன், காதலிக்கும் போது, தன் இனிய பக்கங்களை மட்டுமே முன்னிறுத்துகிறான். சரியான சிடுமூஞ்சியான இவன், புன்னகை மன்னன் போல் காட்டிக் கொள்கிறான்; கெட்ட பழக்கங்கள் எதுவுமே இல்லாதவன் போல், 'பாவ்லா' செய்கிறான்; எப்போதும் பணம் புரளும் காசுக்காரன் போல் காட்டிக் கொள்கிறான்; துணிக்கடையில், 'பீஸ்' கிழித்துக் கொண்டு இருப்பவன், மென்பொருள் பொறியாளர் என்று கதை விடுகிறான்.இந்த நடிப்பின் அரிதாரங்கள் கலைகிற போது, திருமண வாழ்க்கையும் கேள்விக்குரியதாக, கேலிக்குரியதாக மாறி விடுகிறது.காதலர்களே... இயல்பாக இருங்கள்; எதையும் மறைக்காதீர்கள். மறைக்க வேண்டிய அளவுக்கு தவறுகள், குறைகள் இருந்தால், மாற்றிக் கொள்ள முன்வாருங்கள். திருமண வாழ்க்கையும், காதல் வாழ்க்கை போல இனிக்க, இதுதான் சரியான வழி!உத்தமனாக, அரிச்சந்திரனாக நடித்ததெல்லாம் போதும்; கடமைகளை மிகச் சரிவர பார்ப்பதாக, வேலையில் சரி வர நடந்து கொள்வதாக நடிப்பவர்கள், வர வர அதிகமாகி விட்டனர்.பெரிய நிறுவனங்களில், பர்சனல் பைல் என்று ஒன்று உண்டு. இதில், அவரவர்களின் பணித் திறமைகள் மற்றும் தனித் தன்மைகள் குறிப்பிடப் பெறும்; ஆனால், இதைத் தாண்டி, ஒவ்வொரு முதலாளிக்குள்ளும், மேலதிகாரிகளுக்குள்ளும், 'மைண்ட் பைல்' ஒன்று உண்டு. இது என்ன சொல்லும் தெரியுமா...'இவன் சரியில்ல... சரியான, 'பாவ்லா' கேஸ்; ஒருமுறையாவது மாட்டாமலா போவான். அப்ப இருக்கு இவனுக்கு கச்சேரி...' என்று, அசரீரி கொடுத்துக் கொண்டே இருக்கும்.எனவே, 'கும்பலில் கோவிந்தா போடுறோம்; நம்மை, யார் கண்டுக்கப் போறாங்க. சரியா நடந்துகிட்டா பிரமோஷனா, இன்கிரிமென்டா என்ன கிடைச்சிடப் போகுது...' என்கிற தவறான பார்வை வேண்டாம்.உரியவர்களுக்கு நடிப்பிற்கும், அசலுக்கும் நிச்சயம் வித்தியாசம் தெரியும். நடிப்புகளை நம்ப எவரும் தயாரில்லை.காவல் நிலையத்திற்குள் காது கொடுத்தால், 'நாலு தட்டு தட்டினால், குட்டு தானா உடையப் போகுது...' என்று, ஒரு வாக்கியம் காதில் விழும்.இந்த தட்டு, கம்பால் விழ வேண்டும் என்பதல்ல; பிற வழிகளாலும் விழுந்து, குட்டு நிச்சயம் உடையும்.நடிப்பு ஒரு நல்ல ஆயுதம். அதை, எப்போதாவது பயன்படுத்தினால் தான் எடுபடும்; அடிக்கடி அல்ல!லேனா தமிழ்வாணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !