உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக. . . (21)

இதுவரை: விமான பணிப்பெண்ணான கவிதாவின் குழந்தை, காணாமல் போய்விட்டது என்று தெரிந்ததும், உடனே, காவல் நிலையத்திற்கு சென்ற நரேன், அங்கிருந்த கவிதாவுக்கு ஆறுதல் கூறினான். நரேன் யார், அவனுக்கும், கவிதாவுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்டறிந்த போலீஸ் அதிகாரி, நரேனின் மனைவி மதுரிமாவிடமும் குழந்தை காணாமல் போனது சம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கூறி, அவளது ஆஸ்திரேலிய விலாசம் மற்றும் மொபைல் எண்ணை வாங்கிக் கொண்டார். போலீஸ் அதிகாரியின் விசாரணையால், தனக்கும், மதுரிமாவுக்கும் இடையே குழப்பம் ஏற்படுமோ என்று பயந்தான் நரேன் —வாசலில் நிற்கும், இரண்டு ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரிகளை மாறி, மாறி ஒருவித மிரட்சியுடன் பார்த்தபடி நின்றாள் மதுரிமாவின் தாய். தன் இருப்பிடத்திற்கு எதற்காக போலீஸ் வந்திருக்கிறது என்ற யோசனையுடன், அவளது அம்மாவின் அருகே வந்து, ''என்ன வேண்டும்?'' என்று, அந்த அதிகாரிகளிடம் கேட்டாள் மதுரிமா.''மிசஸ் மதுரிமா... அமெரிக்காவிலிருந்து...''''நான் தான்... என்ன விஷயம் சார்?''''உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்; சின்ன விசாரணை.''''எங்கிட்டயா; எதைப் பற்றி சார்?''''நாங்க உள்ளே வரலாமா?''''வாங்க... உள்ளே வாங்க.''மதுரிமா திரும்பி நடக்க, இரண்டு அதிகாரிகளும், அவளைப் பின் தொடர, சில வினாடிகளில் அந்த மூவரும் ஹாலில் உள்ள சோபாவில் வந்து அமர்ந்தனர்.ஒருவித பதற்றத்துடனும், கலவரத்துடனும் அந்த அதிகாரிகளையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் மதுரிமாவின் தாய்.''சொல்லுங்க சார்... என்ன விஷயமா எங்கிட்ட விசாரிக்கணும்?''அவர்கள், உடனே பதில் சொல்லவில்லை. மவுனத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட மதுரிமாவின் தாய், ஒருவித அவசரத்திலும், பதற்றத்திலும் பேச ஆரம்பித்தாள்...''இதோ பாருங்க... மது இப்படி திடீர்ன்னு நடனத்தை கேன்சல் பண்ணது தப்புத்தான். நான் கேன்சல் பண்ண வேணாம்ன்னுதான் சொன்னேன்; அவ கேட்கல... ஏன்னா... அவ நிலைமை அப்படி!''அவள் என்ன சொல்கிறாள் என்பதை புரிந்து கொள்ள முடியாத அந்த இரண்டு அதிகாரிகளும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.பின்னர் அவர்களில் ஒருவர், மதுரிமாவிடம், ''எதைப் பத்தி பேசுறாங்க'' என்று கேட்டார்.''என்னோட டான்ஸ் புரோகிராமைப் பற்றியும், அதை, நான் கேன்சல் பண்ணினதைப் பற்றியும் சொல்றாங்க... நீங்க வந்தது அந்த விஷயமாவா?''''நோ... நாங்க வந்திருக்கிறது உங்க டான்ஸ் புரோகிராம் விஷயமாகவோ, நீங்க அதை கேன்சல் செய்ததுக்காகவோ இல்லை.''ஒரு போலீஸ் அதிகாரி, அழகான ஆங்கிலத்தில் மதுரிமா சொன்னதை, அழுத்தமாக மறுத்து, பதில் சொன்னார்.''வேற என்ன விஷயமா வந்திருக்கீங்க சார்?''அவளின் இந்தக் கேள்விக்கு, நேரிடையாக பதில் சொல்லாமல், அவள் சொன்ன டான்ஸ் புரோகிராம் கேன்சல் விஷயத்திற்கு, அவரது விசாரணையை மாற்றினார் அதிகாரி.''நாங்க வந்த விஷயத்துக்குப் பிறகு போகலாம். நீங்க டான்ஸ் புரோகிராமை எதுக்காக கேன்சல் செய்தீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?''''மனசு சரியில்ல... இந்த நிலைமையில் என்னால ஒழுங்கா மனசை டான்ஸ்ல ஈடுபடுத்த முடியுமான்னு யோசிச்சுப் பார்த்தேன்... முடியாதுன்னு தோணிச்சு; அதனாலதான், கேன்சல் செய்தேன்.''''ஈஸ் இட்? மிசஸ் மதுரிமா... ஒரு சின்ன கேள்வி. ஒரு புரோகிராமுக்கு ஒத்துக்கிட்டு, அமெரிக்காவிலிருந்து, ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கீங்க... அப்படி மனசு சரியில்லாம புரோகிராமை கேன்சல் பண்ற அளவுக்கு, திடீர்ன்னு இப்ப என்ன நடந்தது?''அதிகாரியின் கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல், மவுனமாக யோசித்துப் பார்த்தாள்...'இவரது கேள்வியிலிருந்து ஏதோ ஒன்று நடந்திருப்பதைப் போலவும், அதை, இதனோடு முடிச்சுப் போட முயற்சிப்பது போலவும் தோன்றியது. அத்துடன், இவரது கேள்விக்கு பதில் சொல்வதென்றால், இவரிடம் நான், என் கணவர் நரேன், கவிதா, எனக்குள் வந்திருக்கும் பயம், சந்தேகம் பற்றியும் சொல்லியாக வேண்டும்!'''என்ன யோசிக்கறீங்க மிசஸ் மதுரிமா?''''நீங்க கேட்கறது என்னோட பர்சனல் விஷயத்தைப் பற்றி... அதை சொல்றதும், சொல்லாமல் இருக்கறதும் என்னோட விருப்பம்.''''எது பர்சனல், எது ஜெனரல்ன்னு நீங்க முதல்ல புரிஞ்சுக்கணும். நம்மோட விஷயம் மத்தவங்களை பாதிக்காத வரையில் அது பர்சனல்; ஆனா, அதன் மூலமாக யாராவது பாதிக்கப்பட்டா, அது பொதுவான விஷயமா மாறிடும்...''''இப்ப பெரிசா என்ன பாதிப்பு வந்துடுச்சு... சொல்லுங்க சார்...''மதுரிமாவின் இந்தக் கேள்வியில், லேசான கோபம் குமிழிட்டது.''ஒரு குழந்தை காணாமல் போயிருக்கு... கடத்தப்பட்டிருக்கு.''அதிகாரியின் பதிலில், சந்தேகத்தின் நிழல் அழுத்தமாகப் படர்ந்திருந்தது.''என்ன சொல்றீங்க... குழந்தையைக் காணோமா... குழந்தை கடத்தப்பட்டிருக்கா? சரி... ஏதோ ஒரு குழந்தை காணாமப் போறதுக்கும், கடத்தப்படறதுக்கும் என்னை எதுக்கு என்கொயரி பண்ணனும். எனக்கும், அந்தக் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?''''காணாமல் போனது யாருடைய குழந்தை தெரியுமா... உங்களோட, உங்க கணவரோட சம்பந்தப்பட்ட ஒருத்தரோட குழந்தை. மிசஸ் கவிதா... விமான பணிப் பெண் கவிதா?''அதிகாரியின் இந்தக் கேள்வியால், ஒரு வினாடி ஆடிப் போனாள் மதுரிமா.'கடத்தப்பட்டிருப்பது கவிதாவின் குழந்தையா... அது விஷயமாக என்னிடம் விசாரணையா? இந்த வளையத்திற்குள் என்னை இழுக்கும் இந்த முயற்சி எதற்காக?' மதுரிமாவிற்கு, நரேனைப் பற்றிய நினைவுகள் தோன்றி, அவளை பயமுறுத்தியது.அதுவரையில் அவளும், அந்த அதிகாரியும் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்த மதுரிமாவின் தாய், குறுக்கே புகுந்து பேசினாள்...''இதோ பாருங்க... என்னோட பொண்ணோ, மாப்பிள்ளையோ அந்த மாதிரி ஆட்கள் இல்லை. குழந்தையைக் கடத்தறது கேவலம் மட்டும் இல்ல... மிகப் பெரிய பாவமும் கூட; அதை, நாங்க செய்ய மாட்டோம். என் பொண்ணுகிட்ட இருந்து அவ புருஷனைப் பிரிக்கறதுக்காக, அந்த கவிதா ஏதோ திட்டம் போட்டிருக்கா... அதுக்காகத்தான் இந்த கடத்தல் நாடகம்.''மதுரிமாவின் அம்மா சொன்னதைக் கேட்டு, அந்த அதிகாரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.''நீங்க சொல்றது உண்மையாகவே இருக்கட்டும். கவிதா, மதுரிமாவிடமிருந்து, எதுக்காக நரேனைப் பிரிக்க பார்க்கணும்? அவங்களுக்குள்ள அப்படி என்ன இருக்கு?'' என்று கேட்டார் ஒரு போலீஸ் அதிகாரி.'எதற்காக இந்த அம்மா, இந்த நேரத்தில் இதை இவர்களிடம் சொல்லி வைத்தாள்? இது, இவர்களை மேலும் சந்தேகப்படத்தானே வைக்கும்?' என்று, அம்மாவின் மேல், மதுரிமாவிற்கு கோபம் வந்தது.''என்ன மேடம் யோசிக்கறீங்க?''''ஒண்ணுமில்ல!''''மேடம்... ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும். கவிதாவோட குழந்தையை உங்க கணவர் நரேன் கடத்தி இருப்பாரான்னு விசாரிக்க நாங்க <உங்களைத் தேடி வரல... கவிதா, தன் கணவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி இருந்தாலும், அந்த கணவன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகவும் இருக்கறவங்க.''கவிதாவுக்கும், உங்க கணவர் நரேனுக்கும் உள்ள நட்பு, எந்த மாதிரியான நட்புங்கறது எங்களோட சந்தேகம்... இதை, உங்க மூலமா தெரிஞ்சுக்கிட்டா, எங்களோட புலன் விசாரணையை சரியான திசையில் மாத்தி அமைக்க உதவியா இருக்கும்.''''அந்த கவிதாவுக்கும், என் கணவர் நரேனுக்கும் எந்தவிதமான நட்போ, உறவோ இல்ல.''''குட்... ஆனா, தன் குழந்தை காணாமல் போனதும், அந்த கவிதா செஞ்ச முதல் காரியம் என்ன தெரியுமா?''''நீங்க சொன்னாதானே தெரியும்.''''குழந்தையை காணோம்ன்னு உங்க கணவர் நரேனுக்குத்தான், 'இன்பார்ம்' பண்ணி இருக்காங்க... இதுல இருந்து என்ன தெரியுது?''''என்ன சார் தெரியுது?''''ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எப்பவுமே, ஒருத்தர், தனக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தரைத்தான் உதவிக்குக் கூப்பிடுவாங்க. சோ... அவங்க ரெண்டு பேருக்குள்ள நெருக்கமான ஒரு உறவு... ஐ மீன், நட்பு இருக்குன்னு தெரியலையா?''''என்ன பேசறீங்க... ஒரு பெண் இக்கட்டான சூழ்நிலையில் தனக்குத் தெரிஞ்ச ஒருத்தரை உதவிக்குக் கூப்பிடுறது தப்பா... அப்படித் தெரிஞ்சவங்க உதவிக்கு வர்றது தப்பா... இது, மனிதாபிமானம்... என் கணவர் ரொம்பவும் இரக்க சுபாவம் உள்ளவர்ன்னு என்னைப் போலவே அந்த கவிதாவும் தெரிஞ்சுகிட்டு, அவரை கூப்பிட்டிருக்கலாம்; அவரும் போயிருக்கலாம்.''''உங்க வாதம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, 'உங்க குழந்தையை கடத்தின விஷயமா, யார் மேலேயாவது சந்தேகம் இருக்கா...'ன்னு கவிதாவை கேட்டதுக்கு, அவங்க பதில் என்ன தெரியுமா?''ஆர்வத்துடன், அந்த அதிகாரியின் முகத்தையே அவள் உற்று நோக்க...''தனக்கு யார் மேலயும் சந்தேகம் இல்லை... தனக்கு எதிரின்னு யாரும் கிடையாதுன்னு கவிதா அழுதிருக்காங்க. ஆனா, உங்க கணவர் நரேன், என்ன சொல்லி இருக்கார் தெரியுமா?''அவளின் ஆர்வம் மேலும் அதிகரித்தது.''என்ன சார் சொன்னார்?''''அவருக்கு ஒருத்தர் மேல சந்தேகம் இருக்கறதா சொல்லி இருக்கார்.''''யார் சார் அந்த ஒருத்தர்?''''கவிதாவோட மாஜி கணவர் டேவிட் ஆண்டர்சன்.''''எதனால நரேனுக்கு, கவிதாவோட மாஜி கணவர் மேல சந்தேகம் வந்திருக்கு?''''எங்க சந்தேகமும் அதுதான். சோ... அந்த கவிதா, அவளோட மாஜி கணவர், அவங்களோட அந்தரங்க வாழ்க்கை பற்றி எல்லாம் நரேனுக்குத் தெரிஞ்சிருக்கு. இதுல இருந்து என்ன புரியுது மேடம்?''''எனக்கு ஒண்ணும் புரியல சார்.''வெகுளியாக பதில் சொன்னாள் மதுரிமா.தொடர்ந்தார் அதிகாரி...''தானும், தன் கணவனும் சம்பந்தப்பட்ட விஷயங்களை, எந்த ஒரு பெண்ணாவது மூணாவது மனிதர்கிட்ட அத்தனை சுலபத்தில் சொல்லி விடுவாளா? ஆண்டர்சன் பற்றி கவிதாவுக்கு வராத சந்தேகம், நரேனுக்கு ஏன் வந்தது?''இதற்கான பதில் சிம்பிள்தான்... தன் அந்தரங்கங்களைப் பரிமாறிக் கொள்ளும் அளவுக்கு கவிதாவும், நரேனும் நெருக்கமா பழகிக்கிட்டிருக்காங்க... சரியா?'''அதிகாரி சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளின் தலையில் இடியைப் போல் இறங்குவதை உணர்ந்தாள். தன் சந்தேகமும், நிஜமும் ஒரு வேளை உண்மைதானோ!'தலையைச் சுற்றுவது போலவும், மயக்கம் வருவது போலவும் உணர்ந்து, சில வினாடிகளில் மயங்கிச் சரிந்தாள் மதுரிமா.மதுரிமா திடீரென மயங்கி விழுவாள் என்பதை எதிர்பார்க்கவில்லை அந்த அதிகாரிகள். மதுரிமாவின் தாயின் பெற்ற வயிறு தீப்பற்றி எரிந்தது.அந்த தாயின் கண்ணீரும், கதறலும் மதுவின் காதுகளில் விழவில்லை; அவள் கண்கள் மூடி, படுத்துக் கிடந்தாள். அடுத்த சில நிமிடங்களில், அறைக்குள் பிரவேசித்தார் டாக்டர்.ஒரு மணி நேரத்திற்குப் பிறகு —கட்டிலில் கண்கள் மூடிப் படுத்திருந்தாள் மதுரிமா. ஏதேதோ எண்ணங்களில் அவள் அருகே அமர்ந்தபடி, மதுவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவளது தாய்.மெல்ல கண் விழித்தாள். அம்மா தன் அருகே அமர்ந்து, தன்னையே கவலையோடு பார்த்திருப்பதை கண்ட மது, கட்டிலில் எழுந்து அமர்ந்தாள்.நடந்து முடிந்ததெல்லாம் கனவு போல, அவள் கண்களில் மீண்டும் நிழலாடியது.''அம்மா... அவங்க போயிட்டாங்களா?''''போயிட்டாங்க.''''உன்னை ஏதாச்சும் கேட்டாங்களா?''''எது எதையோ கேட்டாங்க.''''என்னம்மா கேட்டாங்க?''''மாப்பிள்ளையைப் பற்றியும், அந்த சண்டாளி கவிதாவைப் பற்றியும் கேட்டாங்க.''''நீ என்னம்மா சொன்னே?''''மாப்பிள்ளை ரொம்பவும் நல்லவர்ன்னு சொன்னேன். கட்டின மனைவி இருக்கும் போது, கண்டவ பின்னாடி சுத்தற ஆள் இல்லேன்னு சொன்னேன்.''''எப்படிம்மா அத்தனை உறுதியா சொல்ற? எனக்கு பயமா இருக்கும்மா.''''பயப்படாதே... ஒண்ணும் தப்பா நடக்காது; எல்லாம் சரியாயிடும். ஆமா... இந்த நிலைமைல உன்னால டிராவல் பண்ண முடியுமா?''''பண்ணித்தானே ஆகணும். அவரை விட்டுட்டு தனியா புறப்பட்டு வந்தது தப்புன்னு அந்த வைத்தீஸ்வரன் சொன்ன மாதிரியே...''அதற்கு மேல் பேச முடியாமல், குலுங்கி அழுதாள் மதுரிமா.''மனசைப் போட்டு அலட்டிக்காதே... போய் முகம் அலம்பிண்டு வா... சூடா ஒரு கப் காபி ஆர்டர் பண்றேன்.''மதுரிமாவின் தாய், ஓட்டலின் ரூம் சர்வீசுக்கு போன் பண்ண, முகம் அலம்ப குளியலறைக்குள் சென்றாள் மதுரிமா.சோகமே வடிவாக அமர்ந்திருந்தாள் கவிதா. மேலே மின்விசிறி வேகமாக சுழன்றும், மனதுக்குள் இருந்த வெப்பத்தின் காரணமாக, லேசாக வியர்த்தது அவளது உடல்.அறையின் ஜன்னல் ஓரமாக நின்றபடி, சிகரெட் புகைத்தபடி வெளியே தெரிந்த நீலவானத்தை, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நரேன். சட்டென்று நினைவு வந்தவனாய்...''கவிதா... ஆண்டர்சனின் போன் நம்பரைச் சொல்லு.''''வேணாம் நரேன்... அவர்கிட்ட நாம எதுவும் சொல்லவோ, விசாரிக்கவோ வேணாம். அந்த வேலையை போலீசே பார்க்கட்டும்.''''நோ... போலீஸ் அவங்க கடமையைச் செய்யட்டும். இதுல உன்னோட கடமையும் இருக்கு. இந்த விஷயத்தை நீ ஆண்டர்சனுக்கு சொல்லியே ஆகணும்.''''எனக்கும், அவருக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஆனதுக்கப்புறம், என் குழந்தையைக் காணோம்ன்னு நான் எதுக்கு அவர்கிட்ட சொல்லணும்?''''நீ ஆயிரம் சொன்னாலும், ஆண்டர்சன் அந்த குழந்தைக்கு அப்பா. விஷயத்தை ஆண்டர்சன் கிட்ட சொல்றதுதான் நல்லதுன்னு எனக்குத் தோணுது.''''சொன்னா என்ன பெரிசா நடந்துடப் போவுது. எனக்கு அவரைப் பற்றி நல்லாவே தெரியும். நான் சொல்றது அவருக்கு வெறும் நியூஸ். ஒப்புக்கு சாரி சொல்லிட்டு, குழந்தை காணாமப் போனதுக்கு என்னையே காரணமாக்கிட்டு, அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்க்கப் போயிடுவாரு. மனைவியே வேணாம்ன்னு சொன்னவருக்கு, குழந்தை மட்டும் பெரிசா என்ன?''''இல்ல கவிதா... நான் அப்படி நினைக்கல. இந்த விஷயத்துல பின்னாடி உம்மேல எந்தப் பழியும் வராம இருக்கணும்ன்னா இத சொல்றதுதான் நல்லது.''''சரி... எனக்கு நீங்க ஒரு உதவி செய்யணும். நான் அவர்கிட்ட எந்த விஷயம் பத்தியும் பேச விரும்பல... எனக்காக, அவர்கிட்ட இந்த விஷயத்தை நீங்களே சொல்லிடுங்க ப்ளீஸ்!''கவிதா, ஆண்டர்சனின் போன் நம்பரை கொடுக்க, அவரை மொபைல் போனில் அழைத்தான் நரேன்.''யெஸ்... ஆண்டர்சன் ஸ்பீக்கிங்.''''வணக்கம்... நரேன் பேசுறேன்... என்னை நினைவு இருக்கா?''''நரேன்... நல்லாவே ஞாபகம் இருக்கு. என் முன்னாள் மனைவி கவிதாவின் இந்நாள் நண்பர். உங்களை எப்படி மறக்க முடியும்?''அழகான ஆங்கிலத்தில் கிண்டலாகச் சொல்லி, அவன் சிரிப்பது, நரேனுக்கு தெளிவாகக் கேட்டது. வம்பிழுக்க இது நேரமில்லை என்பதைப் புரிந்து கொண்ட நரேன், அமைதியாகப் பேசினான்...''ஆண்டர்சன்... ஒரு வருத்தமான விஷயம். உங்கள் குழந்தையைக் காணவில்லை.''ஒரு சில வினாடிகளுக்கு அந்த முனையில் மவுனம்.''ம்... குழந்தையைக் காணோமா? கவிதா அங்கே இருக்காளா... இருந்தா அவகிட்ட போனைக் கொடுங்க நரேன்.''கவிதாவிடம் போனை நீட்டியபடி, ''உங்கிட்ட பேசணுமாம்,'' என்று நரேன் சொல்ல, வேண்டா வெறுப்பாக போனை வாங்கி பேசினாள் கவிதா.''ம்... சொல்லுங்க.''''ஹாய் கவிதா... கவலை படாதே... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நான் நரேனைப் பார்க்க, அவனோட வீட்டுக்குப் போயிருந்தேன்; நரேன் வீட்ல இல்ல. ஆனால், நம்ம குழந்தை, சாரி உன்னோட குழந்தை அவனோட வீட்ல, அந்த வேலைக்காரியோடு விளையாடிக்கிட்டு இருக்கறதை பார்த்தேன்.''காலடியில் பூமி நழுவுவதைப் போல் உணர்ந்தாள் கவிதா. — தொடரும்.தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !