உள்ளூர் செய்திகள்

உயிரே உனக்காக.... (33)

இதுவரை: நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க சென்ற மதுரிமா, அங்கு, தன் அப்பா வேறொரு பெண்ணுடன் வந்ததை பற்றி, அம்மாவிடம் விசாரித்தாள். அதுபற்றி விளக்கமாக சொல்வதை தவிர்த்தாள் அவளது அம்மா. மதுரிமா இல்லாமல் தனிமையில் இருந்த நரேனுக்கு, அவளது பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. அந்நேரத்தில், நரேனை சந்திக்க விரும்புவதாக கூறினாள் கவிதா —இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவாள் கவிதா.'மதுரிமா வீட்டில் இல்லாத நேரத்தில், அதுவும் இரவில், மதுரிமா என்னைப் பிரிந்து போய் விட்டாள் என்பதைத் தெரிந்து, என்னைப் பார்ப்பதற்காக, எதற்காக கவிதா வர வேண்டும்?'இந்தக் கேள்வி பெரிதாய், மிகப் பெரிதாய் நரேனுக்குள் எழுந்தது.தானும், அவளும் வீட்டிலேயே சந்திப்பதற்கும், ஜெசிகா அந்த நேரத்தில் வீட்டில் இருக்க வேண்டாம் என, கவிதா ஆசைப் பட்டதற்கும், அவனையும் மீறி, அவனது உள் மனது, ஏதேதோ யோசிக்க வைத்தது.'நான் ஏன், கவிதாவைப் பற்றி, இன்று, இப்படி தவறாக யோசித்துப் பார்க்கிறேன்?'தனிமையும், சூழ்நிலைகளும் மனிதர்களை மாற்றி யோசிக்க வைத்து விடுமோ என்ற பயம் அவனுக்குள் தோன்றியது.மனதுக்கு ஆறுதல் என்ற போர்வையில், மறைமுகமாக உடலின் தேவைகளைத் தேடும் ஒருவிதமான ஹிப்போகிரசியோ இது?வாசலில் கார் வந்து நிற்கும் சப்தம் கேட்டு, எழுந்து வெளியே வந்தான் நரேன். டாக்சி டிரைவருக்கு பணத்தைக் கொடுத்து, அவனை நோக்கி நடந்து வந்தாள் கவிதா.இரவு நேரத்திற்கு ஏற்ற ரம்மியமான ஆடையணிந்து, விண்ணிலிருந்து பூமிக்கு இறங்கி வந்த அழகான தேவதையைப் போல், நரேனின் கண்களுக்குக் காட்சி அளித்தாள்.''குட் ஈவினிங்... வெல்கம் கவிதா.''''குட் ஈவினிங்... எப்படி இருக்கீங்க நரேன்?'''புன்னகையோடு ஒலிக்கும் இவள் குரலில் தான் எத்தனை மயக்கம். இது, வலிந்து மயக்குவது அல்ல; இயல்பாகவே அமைந்துவிட்ட ஒரு வசீகரம். விமானத்தில் பயணிக்கும் அத்தனை ஆண்களையும், இவளது புன்னகை வசீகரித்திருக்கும். சே, என்ன இது... மறுபடியும் நான் ஏன் தவறாகவே யோசிக்கிறேன். இன்று எனக்கு என்னவாயிற்று?'அவனது எண்ணத்திலிருந்து விடுவித்துக் கொண்டான். ''நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... உங்களுக் கும், மதுவுக்கும் அப்படி என்ன பிரச்னை?'''எனக்கும், மதுரிமாவுக்கும் இடையில் நீதான் பிரச்னை... என்பதை என் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று இவள் எதிர்பார்க்கிறாளா... தன்னளவில் பிரச்னையாக இல்லாத, ஏன் நான் நினைக்காத ஒன்றை, இவள் இப்போது பிரச்னையாக்கி அதுபற்றி என்னை யோசிக்க வைக்க, இவள் முயற்சிக்கிறாளா...' நரேனுக்குள் சந்தேகம் எழுந்தது.''என்ன யோசிக்கறீங்க... அப்படி உங்களுக்குள் என்னதான் பிரச்னை?''மீண்டும் அதே கேள்வி. கவிதாவின் கண்களையே உற்றுப் பார்த்தான்...''எங்களுக்குள் என்ன பிரச்னை என்பது உண்மையிலேயே உனக்குத் தெரியாதா?'' என்று துணிந்து கேட்டான் நரேன்.உடனே பதில் சொல்லாமல், சில விநாடிகள் யோசித்தாள்...''தெரியும்... ஓரளவுக்கு யூகித்தேன்; ஆனால், என் யூகம் சரியா, தவறா என்று எனக்குள் கொஞ்சம் குழப்பம் இருக்கிறது.''''சரி... என்ன யூகித்தாய் என்பதை முதலில் சொல். பிறகு குழப்பத்திற்கு வரலாம்.''''உங்களுக்குள் அநேகமாக நான்தான் பிரச்னை என்பது என் யூகம்.''''சந்தேகமில்லாமல் நீதான் பிரச்னை. இதில், யூகிப்பதற்கு ஒன்றுமே இல்லை. மதுரிமாவும், அவள் அம்மாவும் உன் குழந்தை விஷயத்தில் உன்னுடன் தகராறு செய்து, உன்னை வெளியே அனுப்பியதை மறந்து விட்டாயா?''''அதை எப்படி மறக்க முடியும்; நன்றாக நினைவில் இருக்கிறது. ஆனால், அந்த சம்பவம், என் குழந்தை இங்கே இருந்ததால் நிகழ்ந்த ஒன்று என்று மட்டும்தான் நினைத்தேன். நான்தான் என் குழந்தையை இங்கே கொண்டு வந்து விட்டேன் என்று, அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதுதான் காரணம் என்றுதான் நான் நினைத்தேன்.''''நிஜமாகவா... எங்கள் பிரச்னைக்கு நீ காரணமாய் இருப்பாய் என்று நீ யோசிக்கவே இல்லையா கவிதா?''''நிச்சயமாக இல்லை... என்னையும், உங்களையும் சேர்த்துப் பார்க்கும் ஒரு சாதாரண பெண்ணாக மதுரிமாவை நான் கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை.''மதுரிமாவைப் பற்றி உயர்வாக சொன்னது நரேனுக்கு பெருமையாக இருந்தது.'இவள் மீதா மதுரிமா சந்தேகப்பட்டாள்... இவளைப் பற்றியா சற்று நேரத்திற்கு முன்பாக நான் ஏதேதோ தவறாக கற்பனை செய்து பார்த்தேன்?'அவனுக்குள் வெட்கப்பட்டான் நரேன். ஆனால், அந்த பெருமையும், வெட்கமும் அற்ப ஆயுளில் மடிந்து போகும் விதமாக, அடுத்ததாக கவிதா சொன்னது அமைந்தது...''நரேன்... மதுரிமாவைப் பற்றி நான் அப்படி நினைத்திருந்தது உண்மை; ஆனால், எனக்குள் உங்களைப் பற்றிய நினைவுகள் இருக்கத்தான் செய்தன.''''என்னைப் பற்றி உனக்குள் நினைவுகளா... என்ன சொல்கிறாய்?''''ஆம்... உங்களைப் பற்றி எனக்குள் எந்த நினைவும் இல்லை என்று நான் பொய் சொல்ல விரும்பவில்லை.''''என்னைப் பற்றி உனக்குள் நீ என்ன நினைத்திருந்தாய்?''''வேறு எதை குறிப்பிடப் போகிறேன். தவறான ஒருவனுக்கு வாழ்க்கைப்பட்டு, இனி, அவனோடு ஒரு வாழ்க்கை இல்லை என்று அவனை விவாகரத்து செய்து, தனியே வாழும் கொடுமையைத்தான் சொல்கிறேன்.''இதைச் சொல்லும் போது, கவிதாவிற்குள் எழுந்த சோகத்தில், அவள் குரல் அடைத்து ஒலிக்க, அவள் கண்களில் நீர் முத்துக் கோர்த்தது. அவளே தொடர்ந்து பேசினாள்...''அதற்காக நான் உங்களைப் பற்றி தவறாக எதுவும் நினைத்து விடவில்லை. மதுரிமாவிற்கு நீங்கள் கணவனாக அமைந்தது, என்னை மதுரிமாவின் மேல் லேசாகப் பொறாமைப்பட வைத்தது.'''இந்தக் கவிதாவால் எப்படி இத்தனை வெளிப்படையாகப் பேச முடிகிறது?' நரேனுக்கு ஆச்சரியமாக இருந்தது.''உங்களைப் போன்ற ஒருவர் எனக்கு கணவராக அமைந்திருந்தால், என் வாழ்க்கை எத்தனை சந்தோஷமாக இருந்திருக்கும் என்று நான் நினைத்துப் பார்த்தேன்.''கவிதா கண்களைத் துடைத்து, தொடர்ந்து பேசினாள்...''இதில் வருத்தமான ஒரு விஷயம் என்ன தெரியுமா நரேன்... நாம் எல்லாரும் தவறு என்றோ, கேவலம் என்றோ பொய்யாக ஒதுக்கி வைத்து, நம்மை வருத்திக் கொள்ளும் அந்த உடலின் சுகம் அல்லது தேவை என்பது அத்தனை சுலபத்தில் நாம் விலகிக் கொள்கிற ஒன்றல்ல. இதை மறுப்பவர்கள் எல்லாம் போலியானவர்களே...''ஆண் - பெண் என்ற உடல் சார்ந்த வாழ்க்கையில், எத்தனை பெரிய உண்மை இது. இதை மறப்பதாகவும், துறப்பதாகவும் சொல்வதெல்லாம் ஒரு பாவனைதான்; உண்மையல்ல. நரேனுக்கு இதுபற்றி வைத்தீஸ்வரன் சொன்ன விஷயங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நினைவில் வந்தன.''சரி... அதெல்லாம் இருக்கட்டும். உங்களை ஒன்று கேட்கலாமா நரேன்... நான் நினைத்ததைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லி விட்டேன். நான் நினைத்தது போலவே, என்னைப் பற்றி நீங்களும் நிச்சயம் நினைத்துப் பார்த்திருப்பீர்கள். என்னைப் பற்றி நீங்கள் என்னவெல்லாம் நினைத்தீர்கள்?''''உன்னைப் பற்றி, நான் எதையும் தவறாக நினைத்ததில்லை. நாம் இருவரும் நல்ல நண்பர்கள். நல்லவிதமான ஒரு நட்பில், எந்தவிதமான தவறான எண்ணத்திற்கும் இடமில்லை.''''அப்படியா... ஒரு நல்ல நட்பைப் பற்றி மதுரிமா ஏன் தவறாக நினைக்க வேண்டும்... எதற்காக உங்களைப் பிரிந்து செல்ல வேண்டும்... உங்கள் மனைவியைப் பொறுத்தவரையில், நாம் இருவரும் குற்றவாளிகள். அதாவது, தவறு செய்து கொண்டிருப்பவர்கள்... அப்படித்தானே?''''கவிதா... பொதுவாகவே பெண்களுக்கு சந்தேகம் அதிகம். அதிலும், நம்மூர் பெண்களைப் பற்றி சொல்லவே வேண்டாம்... மதுரிமா நம்மைத் தவறாகப் புரிந்து கொண்டாள். நாம் எந்தத் தவறும் செய்யவில்லை.''''இங்கேதான் ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இது போன்ற சூழ்நிலையில் பெரும்பாலான ஆணும், பெண்ணும் உடல் அளவில் தவறு செய்யாதவர்களே. ஆனால், மனதளவில்... மனதுக்குள் இருப்பதை திறந்து காட்ட தைரியமின்றியும், குடும்பம், சமூகம் என்ற கட்டுக்குள் அஞ்சி ஒடுங்கியும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே அதிகம்.''நரேன்... என்னையே எடுத்துக் கொள்ளுங்கள்... சந்தோஷமாக வாழ வேண்டிய வயதில், நேரத்தில் நான் கணவனை விவாகரத்து செய்து, வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிற்கிறேன். இந்த சூழ்நிலையில் என்னுடைய வாழ்க்கையில், இன்னொரு ஆணைப் பற்றி சிந்திப்பது என் தவறா, என் முன்னாள் கணவனின் தவறா, புதிதாக என்னை ஏற்க வருபவரின் தவறா?''''கவிதா... நீ எந்தக் காலத்தில் இருக்கிறாய்? இப்போதெல்லாம் விவாகரத்து என்பதும், மறுமணம் என்பதும் ரொம்பவும் சாதாரணமாகிவிட்ட விஷயம். பெண்ணிற்கு சுதந்திரம் கிடைத்து ரொம்ப வருடங்கள் ஆகி விட்டன.''''அது எனக்கு தெரியும். நான் மறுமணம் செய்து கொள்வது, பெண் விடுதலை என்ற பெயரில் சிலருக்கு சரியாகவும், செக்ஸ் மீதான என்னுடைய தேடல் என்று சிலருக்குத் தவறாகவும் தோன்றும் போது, நான் எந்த முடிவுக்குப் போவது?''''சந்தேகம் என்ன... நிச்சயமாக முதல் முடிவான மறுமணம் என்பதுதான் சரியானது.''''சரி... நான் மறுமணம் செய்து கொள்ள விரும்புகிற ஆணைப் பற்றிய என் முடிவு எப்படி இருக்க வேண்டும்... அவன் இதுவரை திருமணம் ஆகாதவனா அல்லது திருமணமாகி மனைவியைப் பிரிந்தவனா அல்லது இழந்தவனா அல்லது வேறு ஒரு பெண்ணுடன் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவனா... இதையெல்லாம் முடிவு செய்ய வேண்டியது நானா அல்லது மற்றவர்களா?''''நிச்சயமாக நீதான் முடிவு செய்ய வேண்டும்.''''பிரச்னையே அங்குதான் ஆரம்பமாகிறது. இதுபோன்ற சூழலில், ஒரு பெண் புதிதாக ஒரு காதலைத் தேடிக் கொண்டோ, சுயம்வரம் நடத்திக் கொண்டோ இருக்க மாட்டாள். அவள் பழகுகிற ஆண்களில், யாரோ ஒருவரை அவளுக்குப் பிடித்திருக்கலாம். அவன் ஏற்கனவே திருமணம் ஆனவனாக இருக்கும் பட்சத்தில், அவள் எந்த முடிவுக்கு வருவாள்... அவனோடு பகிரங்கமாக தொடர்பு வைத்துக் கொள்வாளா அல்லது மானசீகமாக அவனோடு வாழ ஆரம்பித்து விடுவாளா?''''அவன் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவன் என்பது தெரிந்த பின்பும், அவளுக்கு எதற்காக அவன் மேல் விருப்பம் வர வேண்டும்?''''அப்படி ஒரு விருப்பம் வருவதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.''''அது தவறு கவிதா. ஒரு பிரச்னையில் இருந்து விடுபடுவதற்காக, அவள் தெரிந்தே புதிதாய் ஒரு பிரச்னையை உருவாக்கிக் கொள்வதாகத்தான் நான் நினைக்கிறேன். ஒரு பெண்ணிற்கு இரண்டாவது வாழ்க்கையை அனுமதித்த பெண் சுதந்திரத்தை காரணமாக்கி, அவள் இன்னொரு பெண்ணின் முதல் வாழ்க்கையைப் பிரச்னையாக்குவது எந்த விதத்தில் நியாயம்?''''நரேன்... இதில் வருத்தமான ஒரு உண்மை என்ன தெரியுமா... இது போன்ற சூழ்நிலைகளில் பெரும்பாலானவர்கள் நியாய, அநியாயங்களைப் பார்ப்பதில்லை. அவர்களை மனம் கட்டுப்படுத்தினாலும், உடல் விட்டு வைப்பதில்லை; இது, படைப்பின் ரகசியம்.''நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.''நீ சொல்வது தவறு கவிதா... இதை வெறும் உடலின் தேவையாக மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் வாழ்க்கை மீது அவர்களுக்குள்ள ஆசையும், பயமும்தான். கட்டுப்பாடு என்பதன் பெயரால் வாழ்க்கையை சீக்கிரத்தில் இழந்து விடவோ, முடித்துக் கொள்ளவோ யாரும் விரும்புவதில்லை.''''சரி... உங்கள் வாதத்திற்கே வருகிறேன். நீங்கள் சொல்கிற வாழ்க்கை மீதான ஆசையும், பயமும் எனக்கு மட்டும் இருக்காதா! அப்படி இருக்கும் பட்சத்தில், என் மனதுக்குப் பிடித்த ஒருவரை நான் மறுமணம் செய்து கொள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை. சரிதானே?''''நிச்சயமாக சரி... அதில் எந்தவிதத் தவறும் இல்லை. உன் மனது விரும்புகிற ஒருவரை நீ தாராளமாக மணந்து கொள்ளலாம்.''ஒரு சிறிய மவுனத்திற்குப் பிறகு கவிதா கேட்டாள்...''உங்கள் விவாகரத்தை முடிவு செய்தது நீங்களா, மதுரிமாவா?''''எதற்காக இப்படி ஒரு கேள்வி?''''காரணமாகத்தான்... சொல்லுங்கள்.''''ஒரு விதத்தில் இரண்டு பேரும்தான். மதுதான் முதலில் அந்த முடிவுக்கு வந்தாள். அந்த இக்கட்டான சூழ்நிலையை அவளுக்குத் தர வேண்டாம் என்று அவளை நான் முந்திக் கொண்டேன்.''இதை சொல்லும் போதே அவனுக்குள் வலியை உணர்ந்தான் நரேன். அதை அறியாதவளாய் கவிதா கேட்டாள்...''சரி... இந்த விவாகரத்திற்குப் பிறகு, உங்கள் இருவரின் நிலையும் என்ன?''அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல், மவுனமாய் இருந்தான் நரேன். அப்படி ஒரு நிலைமையே வரக்கூடாது என்பதுதானே அவனது பிரார்த்தனை.''பதில் சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கும்; ஆனால், அதற்கான பதிலோடுதான் நான் இப்போது உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்.'''இதற்கான பதிலுடன் இவள் என்னைத் தேடி வந்திருக்கிறாளா... என்ன பதில் அது?'''நீங்களும், மதுரிமாவும் பிரிந்து விடும் பட்சத்தில், கணவனைப் பிரிந்த நானும், மனைவியைப் பிரிந்த நீங்களும் மறுமணம் செய்து கொண்டால் என்ன நரேன்? ஒரு தோல்வியை, இன்னொரு தோல்வியின் மூலமாக சமன்படுத்துவதும் ஒருவித முயற்சிதானே!''கவிதா சொன்னதைக் கேட்டு, அதிர்ச்சியில் உறைந்து போனான் நரேன்.''கவிதா... இதை உன்னிடம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. நீ கேட்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.''''நான் கேட்டது தவறா நரேன்?''''நிச்சயமாகத் தவறு. மதுரிமா மேல் நான் எத்தனை காதல் வைத்திருக்கிறேன் என்பதை அவளாலேயே புரிந்து கொள்ள முடியவில்லை. பாவம்... நீ எங்கே புரிந்து கொள்ளப் போகிறாய்?''''பிறகு எதற்காக மதுவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினீர்கள்?''''நிச்சயமாக அவளைப் பிரிவதற்காக அல்ல. இந்த பிரிவின் மூலம், அவள் என்னை உணர்வதற்காக, நான் கையில் எடுத்த அதிர்ச்சி வைத்தியம் அது.''''சாரி நரேன்... உங்களைப் பற்றி நினைக்கவே எனக்குப் பெருமையாக இருக்கிறது. நான்தான் புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு விட்டேன்; என்னை மன்னித்து விடுங்கள்.''''உன் மீது எந்தத் தவறும் இல்லை கவிதா... மதுரிமா மேல் உள்ள என் காதல் எந்த அளவிற்கு வலுவானதோ, அதே அளவிற்கு நான் உன்னிடம் கொண்ட நட்பும் வலுவானதுதான். நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம். உன் மறுமணம் பற்றி மறுபடியும் யோசி கவிதா. நிச்சயம் உன் நல்ல மனதுக்கு, நல்ல துணைவர் கிடைப்பார்.''நரேன் சொன்னதைக் கேட்டு சிரித்தாள் கவிதா. சிரிப்பு விரக்தியாக இருந்தது.''ஓ.கே., நரேன்... உங்களின் நேரத்தை வீணாக்கி விட்டேன்; வருகிறேன். குட் நைட்!''புறப்பட்டு போனாள் கவிதா.அவளைப் பற்றிய நினைவுகளிலேயே, நீண்ட நேரம் அமர்ந்திருந்தான் நரேன்.அவனது மொபைல் போன் ஒலித்தது.மறுமுனையில் அவனது எம்.டி., வைத்தீஸ்வரன் பேசினார்...''நரேன்... நாளைக்கு காலைல உனக்கு ஒரு குட் நியூஸ் இருக்கு.''''அந்த நியூசை இப்பவே சொல்லக் கூடாதா?''''நோ... இன்றைய ராத்திரிக்கு மட்டும் அது சஸ்பென்சாக இருக்கட்டும். நாளைக்கு காலைல நீ முதல்ல எனக்கு டிரீட் கொடுக்கற... அப்புறம்தான் உனக்கு நியூசே! குட் நைட்.''போனைத் துண்டித்து விட்டார் வைத்தீஸ்வரன். நாளைக் காலையில் அவர் சொல்லப் போகும் நல்ல செய்தி எதுவாக இருக்கும்? — தொடரும்.தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் ஏ. நடராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !