வாழ்க்கை எனும் பாடம்!
'காலையிலேயே, கதவை தடாரென்று திறந்து வருவது யார்...' என்று யோசித்தபடியே வாசலுக்கு வந்த, கமலம், சற்றே அதிர்ச்சியாகி நின்றாள்.ஆட்டோ ஒன்று கிளம்பிப் போக, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, சின்ன சூறாவளி போல வந்தாள், மகள் கீதா.'தீபாவளிக்கு இன்னும் நாள் இருக்கே... அதுக்குள்ளே இவள் ஏன் இங்கே...' என்று யோசித்தபடி, கீதாவை விலக்கி, வாசலையும், வாசல்படி இறங்கி, தெருவையும் எட்டிப் பார்த்தாள்.''என்ன பார்க்கிற... உன் மாப்பிள்ளையும், பேரனையுமா... அவங்க வரலை,'' என்று கூறியபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.நுழைந்த வேகத்திலேயே, வாசல் கதவை சடாரென சாத்தி போனாள். அது, அவளது வழக்கமான சாத்தல் தான் என்றாலும், இன்று, அதில் சற்றே ஒரு செய்தி மறைந்து இருந்தது.அதே வேகத்தில் காலை உதற, செருப்பு பறந்த வேகம் சொன்னது, அவளது கோபத்தின் அளவை.''ஏண்டி, இப்படி உதைச்சுக்கிற... மாப்பிள்ளை கூட ஏதாவது தகராறா,'' வழக்கமான கேள்வியை சற்றே மாற்றி கேட்டாள், கமலம்.''ஆமாம்... பொல்லாத மாப்பிள்ளை... நீ தான் மெச்சிக்கணும்... சே... எப்ப பாரு, வேலை வேலை... வீட்டில் இருப்பதே கிடையாது; ஒரு நல்லது, கெட்டதுக்கு போய் வர முடியுதா,'' என்றாள்.''அவர், அப்படி போனால் தானே, வீடு வீடா போய், இப்படி பேச முடியும்,'' கிண்டலாக கூறிய, அம்மாவை முறைத்தபடி, பின்னாலேயே போனாள்.''அதுக்காக... வீட்டில் ஒருத்தி இருக்காளே, எங்காவது கூட்டிட்டு போவோம்ன்னு கிடையாது... வீட்டுக்கு வந்தா, உன் பேரன், கார்த்தி கூட உட்கார்ந்து படிக்க ஆரம்பிக்க வேண்டியது.''''ம்ஹும்... இன்னும் அவர் மேல குற்றம் சொல்ல ஆரம்பிக்கவே இல்லையே,'' என்றபடியே, காபி கலந்து வந்தாள், கமலம்.''என் பாடு, உனக்கு சிரிப்பா இருக்குல்ல,'' வெடுக்கென காபியை பிடுங்கி குடித்ததில், சற்றே சிந்தியது. ஆனாலும், காபி குடிப்பதை நிறுத்தவில்லை.சிரித்தாள், கமலம்.''அதுக்காக, கிளம்பி வந்துடுறதா... முதல்ல, நான் வெளியூர் குடி போகணும் அல்லது மாப்பிள்ளை மாற்றலாகி வெளியூர் போகணும்... அம்மாவும், பொண்ணும் ஒரே ஊரில் இருந்தா, ஏதாவது ஒரு குடும்பம் தான் நல்லா இருக்கும்ன்னு சொல்வாங்க... அது சரி தான் போல,'' என்றாள்.''இப்ப என்ன சொல்றே நீ?''''போய் உன் வீட்டுக்காரர் கூட சேர்ந்து நீயும் படி... காலையிலேயே இப்படி கிளம்பி வந்துட்டா, கார்த்திக்கை, ஸ்கூலுக்கு யார் கிளப்பி விடுவது... அவனுக்கு, பரீட்சைன்னு சொன்னியே.'' ''அவர்தானே விழுந்து விழுந்து படிக்கிறார்... அவரே அனுப்பட்டும்; அப்போ தான் தெரியும் கஷ்டம்,'' வேகமாக சென்று படுத்துக் கொண்டாள், கீதா.'ஒரே பொண்ணாச்சேன்னு, ஆண் மாதிரி வளர்க்க ஆசைப்பட்டு, இப்போ, பொண்ணாவும் வளராம போயிட்டாளே...' என்று கவலைப்பட்டாள், கமலம்.'இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... இல்லைன்னா நாமே அனுப்பி வைக்க வேண்டியது தான்...' என்று நினைத்தபடி, ஊருக்கு போயிருக்கும் கணவருக்கு போன் செய்ய, மொபைல் போனை எடுத்தாள்.காலையும், மதியமும் இல்லாத பொழுது... துாக்கமா, மயக்கமா என்று புரியாத ஒரு நிலையிலிருந்த, கீதாவுக்கு, எங்கோ, யாரோ பேசுவது கேட்டது.'சாந்தி... தீபாவளிக்கு கொஞ்சம் பலகாரம் செய்யணும்... இருந்துட்டு தான் போயேன்...' என்று கமலம் கேட்க, 'இல்லம்மா... நான் போகணும்...' என, பணிப்பெண், சாந்தி சொல்வது, கனவில் நடப்பது போல, சன்னமான குரல் கேட்டு, விழித்தாள்.அவளது வழக்கமான படுக்கையில் படுத்ததும், துாங்கி போனது, அப்போது தான் தெரிந்தது. 'ஐயோ... பையன் கார்த்திக்... வேன்... ஸ்கூலு... அவர்...' என்று ஏதேதோ நினைவில் தோன்ற, வேகமாக முன் அறைக்கு வந்து பார்த்தாள். சாந்தி கிளம்பிக் கொண்டிருந்தாள்.அப்போது தான், அம்மா வீட்டில் இருப்பதையே உணர்ந்தாள். சட்டென திரும்பி, சுவரில் மணி பார்த்தாள், காலை, 11:00. இரண்டும் கெட்டான் நேரம்.சற்று தன்னை ஆசுவாசப்படுத்தி, நிகழ்வுக்கு வந்ததும், சமையல் வாசனை நாசியில் வருடியது. மெல்ல பசியை கிளப்பியது. உள் அறைக்கு வந்தாள்.கார்த்திக்கு பிடித்தவைகளாக இருப்பதை பார்த்ததும், அம்மாவிடம், ''காலையில், என் வீட்டுக்கு போய் வந்தியா?'' கோபத்தை வெளியே காட்ட முடியாமலும், அடக்கவும் முடியாமலும், ஆற்றாமையுடன் கேட்டாள், கீதா.எதுவும் பேசவில்லை, கமலம். வாசலில், சாந்தி, 'கிரில்' கதவை திறக்க, சத்தம் கேட்டு திரும்பினாள், கீதா.தன் கேள்வியின் புறக்கணிப்பு, அம்மாவின் அலட்சியம் என, இரண்டும் சேர்ந்த இயலாமையின் வெளிப்பாடு கோபமாக மாறி, சாந்தி மீது திரும்பியது. ''எங்கே கிளம்பிட்ட... அதான் கேக்குறாங்கல்ல... இருந்து பலகாரம் செஞ்சு கொடுத்துட்டு போக வேண்டியது தானே,'' என்றாள், எரிச்சலுடன்.கண்களில் ஒரு கெஞ்சலுடன், ''இல்லம்மா... பையனுக்கு பரீட்சை நடக்குது... போயாகணும்,'' என்றாள், சாந்தி. ''ஓஹோ... நீ போய் சொல்லி தரப்போறியாக்கும்... ஏன், எங்காவது டீச்சர் வேலைக்கு போயிருக்கலாம்ல்ல,'' கணவன் மேல் இருந்த கோபம், சாந்தியை சீண்டிப் பார்த்தது.கீதாவை நிமிர்ந்து பார்த்த, கமலம், ஒரு நிமிடம் சாந்தியையும் பார்த்தாள். அவளிடம் எந்த சலனமும் இல்லை என தெரிந்ததும், அமைதியாக வேலையை தொடர்ந்தாள்.''இல்லம்மா... எனக்கு அதெல்லாம் தெரியாது... அந்த அளவுக்கு படிப்பும் கிடையாது... ஆனா, கூட இருந்தா, அவனுக்கு ஒரு பலம் கிடைச்சது போல இருக்கும்... காபி தண்ணி, டீன்னு அவனுக்கு தேவையானதை செஞ்சு கொடுப்பேன். ''அது மட்டும் இல்லை... அவன் அப்பன் குடிச்சுட்டு வந்து, இவனை படிக்க விடாம தொந்தரவு செய்யும்... ஏதாவது வேலை கொடுத்துக்கிட்டே இருக்கும். அதையும் சமாளிக்கணும்... குழந்தைகள் படிப்புதானேம்மா முக்கியம்... நான் தான், அஞ்சாங் கிளாஸ் தாண்டலை... அதுகளாச்சும் நாலு எழுத்து படிக்கட்டும்,'' என்றாள், சாந்தி.''நீ போய் உன் புருஷனை பவுசா சமாளிச்சுப்ப... பையன் படிச்சுக்குவான்... அப்படித்தானே?'' என்றாள், குதர்க்கமாக.தன்னை மதிக்காதவர்களை வெற்றி கொள்ள, அவர்களை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தும் மனிதனின் கீழான எண்ணம் அது.''என்னடி பேசுற,'' என்று அதட்டிய, கமலத்தை முறைத்து, சாந்தியின் பக்கம் திரும்பினாள், கீதா.கீதாவின் வார்த்தைகளால் அடிபட்டு, மனம் வலித்தாலும், ஏழ்மை, சாந்தியை அமைதி காக்க வைத்தது.சிறிது அமைதிக்கு பின், ''அப்படி எல்லாம் இல்லம்மா... எங்கம்மா இருந்த வரை, கூடமாட இருந்து பார்த்துக்கிச்சு... இப்போ, அம்மா இல்லை!'''அம்மா இல்லை' என்று சொல்லும்போது, நாக்கு தழுதழுத்தது... குரல் உடைந்து விம்மியது... தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், தொடர்ந்தாள்...''அம்மா இறந்ததும், நானே எல்லாம் செய்ய வேண்டி இருக்கு... வீட்டிலும் ஆளில்லை... இங்கே, வீட்டு வேலைக்கு அதிக நேரம் ஆயிட்டா, எங்க வீட்டுக்கு போக இருட்டிரும்... ''சாயந்தரம் பள்ளிக்கூடம் விட்டு, குழந்தை வரும்போது, வீட்டில் இருந்து கூப்பிட்டுக்க முடியலையேன்னு தவிச்சு போயிடுவேன்... பாவம்... பசியோட வெளியிலேயே உட்கார்ந்திருப்பான்...''இப்போ பரீட்சை நடக்குது... மதியம் லீவு விட்டுருக்காங்க... அதனால, கூட இருந்து நல்லா ஆக்கிப் போடணும்ன்னு ஆசை... அதுக்காக தான் போறேன்... அதுதான் உங்க அம்மாவும் விட்டுட்டாங்க. ''உங்களுக்கும், எனக்கும் அஞ்சு வயது தான் வித்தியாசம் இருக்கும். உங்களுக்கு, நல்ல அம்மா, அப்பா, கணவன்னு வாழ்க்கை அமைஞ்சதேன்னு ஆத்தாளுக்கு நன்றி சொல்லி கும்பிடுங்கம்மா... உங்களை மாதிரி பெண்களுக்கு, அம்மா - அப்பா, கணவனோட அருமை தெரியாது,'' வார்த்தை இடறி, நா தழுதழுக்க, கண்கள் கலங்க, அதை மறைத்தபடி, சாந்தி சொல்லிக் கிளம்ப, விக்கித்து நின்றாள், கீதா.அம்மாவின் பார்வையில் இருந்த வெறுமை கலந்த வருத்தத்தை பார்த்ததும், துணுக்குற்றாள்.''இல்லம்மா... நான் காலைல,'' என்று, தன் நொண்டி சாக்கை சொல்லத் துவங்கும் முன், ''ஒண்ணும் சொல்ல வேணாம்... நீ நல்லா அசந்து துாங்கிட்ட... நான் சமைச்சு, ஆட்டோ பிடிச்சு போய், மாப்பிள்ளைக்கு சாப்பிட கொடுத்து, கார்த்திக்கு ஊட்டி விட்டு, ஸ்கூலுக்கு அனுப்பிட்டு வர்றேன்... அதுவரை வீட்டுக்கும், உனக்கும் காவல் இருந்தது, சாந்தி தான்,'' என்றாள், கமலம்.எதுவும் பேசாமல் சோபாவில் அமர்ந்திருந்த கீதாவுக்கு, கார்த்திக் நினைவில் வந்தான்.'என்னை பற்றி என்ன நினைத்திருப்பான்...' நினைக்கவே கஷ்டமாக இருந்தது, கீதாவுக்கு.சாந்தியின் முகம் தெரியாத பையன், தன்னை பார்த்து புன்னகைப்பது போல இருந்தது.படிப்பில் இரண்டு டிகிரி வாங்கியிருக்கும், கீதா, இன்றைக்கு, சாந்தி சொல்லிக் கொடுத்த வாழ்க்கை பாடத்தை கேட்டு, இனம் புரியாத தெளிவுக்குள் இருந்தாள்.பின், ஏதோ நினைத்தவளாக, சத்தம் போடாமல் எழுந்து, முகம் கழுவி கிளம்பினாள்.''எங்கே போற,'' என்ற, கமலத்தை பார்க்காமலேயே, செருப்பை தேடி எடுத்து மாட்டி, ''என் வீட்டுக்கு!'' என்றாள்.கி.ரவிக்குமார்