வாழு வாழ விடு!
சுவர் பக்கம் திரும்பி படுத்திருந்த, கமலம், 'நங்'கென்று தட்டு வைக்கும் சத்தம் கேட்டு, திரும்பினாள்.அவளுக்கான காலை உணவு, மூன்று இட்லி, கொஞ்சம் சட்னி. மணி, 10:00 ஆகிறது. பசி... மருமகள் விஜயாவிடம் வாய் விட்டு கேட்க முடியாது. அவள் தரும்போது தான் சாப்பிட முடியும். முழங்கையை ஊன்றி எழுந்தவள், தட்டை கையில் எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள். மொபைல்போன் சிணுங்க, எடுத்து பேசிய விஜயா, ''சொல்லு, மதன்... எப்படியிருக்க?'' என்றாள்.''ம்... நான் நல்லா இருக்கேன்!''''இந்த வருஷம், வர முடியாதா... என்னப்பா சொல்ற? சரி, உடம்பை பார்த்துக்க,'' என, அமெரிக்காவில் இருக்கும் மகனிடம் பேசி முடிக்கவும், காலிங் பெல் அழைத்தது.கதவை திறந்த விஜயா, ''நித்யா... வா... எப்படியிருக்க, என்ன, திடீர்ன்னு?'' என்றாள்.சாப்பிடும் கமலத்தை பார்த்தபடியே, பையுடன் வந்த நித்யா, ''இது உன் மாமியார் தானே...'' என்றாள், அவளுக்கு மட்டுமே கேட்கும்படியான குரலில்.''ஆமாம், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, அடங்கி ஒடுங்கியாச்சு... உள்ளே வா! என்னடி விஷயம், திடீர் விஜயம்?''என்றாள்.''எங்க மாமியார் உறவு வழியில் ஒரு கல்யாணம். வராமல் இருந்தா நல்லாயிருக்காது. ஆபீஸ் வேலையா அவர் வெளியூர் போயிருக்கார். உன்னை பார்த்துட்டு, நாளைக்கு கல்யாணத்திற்கு போகலாம்ன்னு வந்தேன்!''''சரி, சூடா தோசை சாப்பிடறியா?''''வேண்டாம்; காபி மட்டும் போதும்... ஒண்ணா, 'லஞ்ச்' சாப்பிட்டுக்கலாம். உன்கிட்டே நிறைய விஷயம் பேசணும், விஜி. சீக்கிரம் காபி போட்டு எடுத்து வா,'' என்றாள்.இரண்டு டம்ளரில் சூடான காபியோடு, நித்யாவின் அருகில் உட்கார்ந்தாள், விஜயா.''மாமியாருக்கு தரலையா?''''ஆமா, அது மட்டும் தான் குறைச்சல். கவனிச்ச வரை போதும். சூடு ஆறறதுக்குள்ள சாப்பிடு!''சிறிது நேரம் மவுனத்திற்கு பின், ''மதன் எப்படியிருக்கான். அவன் கல்யாணத்தை பத்தி, என்ன முடிவு பண்ணியிருக்க?''''அடுத்த ஆண்டு, யு.எஸ்.,லிருந்து வந்ததும், கல்யாணம் தான். அவன் விரும்பற பெண்ணையே மனைவியாக்க போறேன்... என் மகனாவது, மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழட்டும்!''''என்ன விஜி, அனுபவம் பேசுதா?'' என்றாள், நித்யா.''இருக்காதா பின்னே... அதோ உட்கார்ந்திருக்காங்களே... என்னை, சந்தோஷமாக வாழ விட்டாங்களா... எப்ப பார்த்தாலும், மகன்கிட்டே என்னை பத்தி குறை... நாலு நாள் நல்லாயிருந்தா.. அடுத்த நாலு நாள், சண்டையும், சச்சரவுமாக தான் போகும். மனசில் நிம்மதியே இருக்காது.''ஒருநா, இவங்களால, என்னை அடிச்சுட்டாரு, கணவர். மனம் குமுறி அழுதேன். மதன் பிறந்த பிறகுதான், வாழணுங்கிற எண்ணமே வந்தது!''''இருக்கட்டும், விஜி... ஒரு காலகட்டத்தில், கணவர், உன்னை புரிஞ்சு, அனுசரணையாக தானே குடும்பம் நடத்தினாரு?''''ஆமாம்... மகராசிக்கு உடம்பு தளர்ந்துடுச்சு. இனி, மருமகள் தயவு வேணும்ன்னு வாயை குறைச்சாங்க... ஆனா, வாழ்ற காலத்தில் வாழ விடலையே... இவரும், அம்மா அம்மான்னு, அவங்க சொன்னதை தானே கேட்டாரு... ''வாழ்க்கையில் பெரிசா எதை அனுபவிச்சேன். அவர் போய், இரண்டு வருஷமாச்சு. தனக்கு முன், மகனை அனுப்பிட்டு, இப்ப கல்லு மாதிரி உட்கார்ந்திருக்காங்க,'' என்றாள், எரிச்சலுடன்.''அதையெல்லாம் மறக்காம, மனசுல வச்சுக்கிட்டு தான், உன் வெறுப்பையும், உதாசீனத்தையும், இயலாமையில் இருக்கும் அவங்ககிட்டே காட்டறியா?'' என்றாள், நித்யா.''அவங்க பண்ணின பாவத்துக்கு, தண்டனையை அனுபவிக்கிறாங்க... நான் ஒண்ணும் சாப்பாடு போடாமல் பட்டினி போடலையே... வராந்தாவில் இடம் கொடுத்து, மூணு வேளை சாப்பாடு போடறேன்!''''ஒண்ணு சொன்னா, கோவிச்சுக்க மாட்டியே... இதுக்கு, அவங்களுக்கு, சாப்பாட்டில் விஷம் வச்சு ஒரேயடியா பரலோகம் அனுப்பிடலாம்!''''நித்யா?''''அப்புறம் என்ன... நீ, அவங்களை நடத்தற விதம்... நீங்க, எனக்கு செய்த கெடுதலை மறக்கலைங்கிற மாதிரியாதானே இருக்கு... உன் மனசில் இவ்வளவு வன்மம் இருக்கும்போது, நாளைக்கு உன் மருமகளை நீ நல்லபடியா நடத்துவேன்னு என்ன நிச்சயம்...''நீ அனுபவிக்காத நிம்மதியும், சந்தோஷமும், மகன் மூலமா உன் மருமகளுக்கு கிடைக்கும் போது, நீ பொறாமைப்பட மாட்டேன்னு என்ன நிச்சயம்...''மாமியார் உன்னை கொடுமைப்படுத்தியதால், கெட்டவங்களாவே இருக்கட்டும்... அமைதியா இருந்து, நீ நல்லவள்ங்கிறதை நிரூபிச்சியா... நீயும் பதிலுக்கு சண்டை தானே போட்டே...''இரண்டு கை தட்டினால் தான் ஓசை வரும். நீயா - நானா போட்டியில், குடும்ப ஒற்றுமை போச்சு... அவங்களை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோசனம்,'' என, படபடத்தாள் நித்யா.அமைதியாக இருந்தாள், விஜி.மாமியார் பற்றி, கணவரிடம் குறை சொன்ன நாட்கள் நினைவுக்கு வந்தது.'நானும் தான் சரிக்கு சரி, வாயாடி இருக்கிறேன்...' என, நினைத்து கொண்டாள்.''இனியாவது நல்ல சிந்தனை வளர்த்துக்க, விஜி. மாமியார் மாதிரி இருக்கணும்ன்னும், இருக்கக் கூடாதுன்னும் ஒரு சிலர்கிட்டேயிருந்து கத்துக்கலாம்...''மகன், மருமகள் வாழ்க்கைக்கு அனுசரணையாக இரு. வயசான காலத்தில், செய்த தப்புக்கு தண்டனை அனுபவிக்கட்டும்ன்னு நினைக்காதே... மனதில் எரிச்சலையும், கோபத்தையும் வளர்க்காமல், இனி வரும் காலங்களையாவது சந்தோஷமாக வாழப் பழகிக்க,'' என்றாள், நித்யா.பாத்ரூம் சென்று குளித்து வந்த கமலம், தன்னுடைய பாய், சாப்பிடும் தட்டு, தண்ணீர் செம்பு எதுவுமில்லாமல் இருக்க, திகைத்தாள்.'கடவுளே... நான் அவளை ஆட்டி வைத்த பாவத்திற்கு, இனி, வராந்தாவில் கூட இடம் தர மாட்டாளா...' என, நினைத்து கொண்டாள்.''உள்ள வாங்க, அத்தை!'''கூப்பிடுவது, விஜி தானா...' என, வராந்தாவை தாண்டி, ஹாலுக்கு வந்தாள்.''இதோ, இது தான், இனி உங்க இடம்... கட்டிலில் படுத்து, 'டிவி' பார்க்கலாம்,'' என்றாள்.நம்ப முடியாமல் கட்டிலில் உட்காந்தாள். மின்விசிறி சுழன்று, 'சில்'லென்ற காற்று வீச, உடல் சிலிர்த்தாள், கமலம்.''இந்தாங்க, அத்தை... குளிச்சிட்டு வந்திருக்கீங்க, பால் சாப்பிடுங்க!''நடுங்கும் கையில் வாங்கியவள், ''உனக்கு, நான் நிறைய கெடுதல் பண்ணிட்டேன்மா... மன்னிச்சுடு, விஜி!''''இல்லை, அத்தை... நீங்க தான் என்னை மன்னிக்கணும்... உங்களை ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன்!''அன்புடன் மாமியார் கையை பிடித்தவள், மனம் லேசான உணர்வுடன் அவரை பார்த்தாள்.பரிமளா ராஜேந்திரன்