உள்ளூர் செய்திகள்

வளமுடன் வாழ்க!

மே13 - அட்சய திரிதியைமனிதனுக்கு, வாழும் காலத்தில் தேவை சொத்து சுகம். வாழ்வுக்குப் பின் தேவை, இறைவனிடம் நற்பெயர். இந்த இரண்டையும் பெற என்ன செய்வது? அட்சய திரிதியை பற்றி அறிந்து கொண்டால் புரியும். அட்சயம் என்றால், வளர்தல். திரிதியை என்பது நிலாவின் மூன்றாம் பிறை. நிலவானது, தேய்ந்து வளரும். செல்வம், வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியது. அதை ஏன் தேய்ந்து வளரும் சந்திரனுடன் ஒப்பிட வேண்டும்!செல்வம் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான் என்றாலும், அதை சம்பாதிப்பவன் மட்டும் அனுபவிக்க கூடாது. இந்த உலகில் எத்தனையோ பேர், உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி இருக்கின்றனர். அவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். இது சோம்பேறித்தனத்தை வளர்ப்பதாகாதா... என்ற கேள்வி எழும்.உழைக்க தகுதியிருந்தும், பிச்சை என்ற பெயரில் கை நீட்டுபவருக்கு உதவ வேண்டியதில்லை. உதவி பெறுபவன் தகுதி உடையவனாக இருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாணவன் நிறைய மார்க் வாங்கியிருக்கிறான்... டாக்டருக்கு படிக்க ஆசைப்படுகிறான்; ஆனால், பணமில்லை. இந்நிலையில், ஒரு செல்வந்தன், அவன் படிப்பிற்கு உதவ வேண்டும். தகுதியான இடத்துக்குச் சென்ற அந்த உதவி மூலம், நோயாளிகள் பலர் காப்பாற்றப்படுவர்.அதாவது, ஒரு பணக்காரனிடம் கோடி ரூபாய் இருந்தது. அவன் 25லட்சத்தை தானம் செய்து விட்டான். அவனிடம் இருந்த செல்வம், தேய்பிறை நிலா போல் குறைந்து போனாலும், அவன் செய்த தானத்தின் பலனாக, அவனது புண்ணியக் கணக்கு, வளர்பிறை நிலவு போல் வளர்ந்து விட்டது. அட்சய திரிதியை அன்று தங்க நகை வாங்கினால், அது பெருகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு வாங்குவோர், தங்களுக்காக மட்டும் வாங்காமல், ஏழைப் பெண்களுக்கும் வாங்கிக் கொடுக்க வேண்டும். அதாவது, அட்சய திரிதியை என்பதற்கு உண்மையான அர்த்தம் தானம் செய்வது.தங்கம், வெள்ளி வாங்கிக் கொடுக்க முடியவில்லையா, வஸ்திரம் வாங்கிக் கொடுங்கள். அவ்வளவு பெரிய கிருஷ்ண பரமாத்மாவே திரவுபதிக்கு வஸ்திரத்தை தானே அளித்தார். ஆம்...கவுரவர்கள் முன்னிலையில், துச்சாதனன் திரவுபதியின் ஆடையைக் களைய முற்பட்ட போது, கிருஷ்ணர் அவளுக்கு, 'அட்சய' என்று சொல்லி, அளித்தது ஆடையைத் தான்! ஆடை தானம் மிக மிக உயர்ந்தது.அட்சய திரிதியை அன்று, அன்னதானமும் முக்கியம். இந்நாளில், தயிர் சாதம் தானம் அளிப்பது நன்மை தரும். சிலப்பதிகார மாதவியின் மகள் மணிமேகலையிடம் ஒரு பாத்திரம் இருந்தது. அள்ள அள்ளக் குறையாமல் அதில் உணவு வரும். அதைக் கொண்டு அவள் மட்டும், வயிறு முட்ட சாப்பிடவில்லை. ஏழைகளுக்கு வழங்கினாள். அதனால் தான் அந்த பாத்திரத்திற்கு, 'அட்சய பாத்திரம்' என்று பெயர் வந்தது. அட்சய திரிதியை அன்று ஏராளமாய் பொருள் வாங்கி சேருங்கள்; சேர்த்ததில், ஒரு பகுதியை தானமாகக் கொடுங்கள். லட்சுமி கோவிலுக்கு செல்லுங்கள். இந்த உலக மக்கள் நன்றாக வாழ பிரார்த்தியுங்கள். ***கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம்!* கிரகங்களிலேயே பலம் பொருந்திய கிரகம், சனிக் கிரகம்தானே...இல்லை. குரு தான் பலம் வாய்ந்த கிரகம். 'குருவின் பார்வை வேண்டும்; வியாழ நோக்கம் வர வேண்டும்' என்கிறார்களே, ஏன்? சுய ஸ்தானத்தில் சனி இருந்தால் உச்சம். எந்த ஸ்தானத்தில் இருந்து குரு பார்த்தாலும் சுகம்.***தி.செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !