உள்ளூர் செய்திகள்

அன்பு செய் மனமே!

எதிர்பார்த்தது போலவே, அலுவலகம் ஒரே இரைச்சலாக இருந்தது; திரைப்பட இடைவேளை போல, கலவையான சிரிப்பு, பேச்சு, கும்மாளம், கைதட்டல்!கதவை திறந்து, அருண் உள்ளே நுழைந்ததும், அத்தனை சத்தங்களும் அடங்கின.'குட்மார்னிங் சார்...''வணக்கம் சார்...' என, குரல்கள் தொடர, அவர்களுக்கு பதில் சொல்லாமல், வேகமாக தன் கேபினுக்குள் நுழைந்தவன், இன்டர்காமில் பலராமனை அழைத்தான். அடுத்த நொடி, ''குட் மார்னிங் சார்... கூப்பிட்டீங்களா?'' என்று வந்தார், பலராமன்.''என்ன பலராம் இது... ஐடி கம்பெனியா, இல்ல மீன் மார்க்கெட்டா... ஒரே சத்தம்,'' என்றான், கோபத்துடன்! ''வந்து... எல்லாரும் சின்னப் பசங்க... விளையாட்டு பிள்ளைங்க,'' என்றதும், அவரை முறைத்தான்.''அவங்கள சப்போர்ட் பண்ணல... ஆனா...''''என்ன ஆனா... 26 - 27 வயசு, விளையாடற வயசா... பொறுப்பில்லாம பேசாதீங்க... என்ன பலராம் குறை வெச்சேன் இவங்களுக்கு... கேன்டீன்ல டிபன், சாப்பாடு இலவசம்; ஓய்வெடுக்க, ஏசி ரூம் இருக்கு; மெடிக்கல் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டுறேன், கிரிக்கெட், வாலிபால் டீம் வெச்சிருக்கேன். ஆர்கானிக் தோட்டம் போட்டு பழங்களையும், காய்கறிகளையும் மலிவு விலைக்கு கொடுக்கறேன். புராஜெக்ட்டை முடி முடின்னு எந்த பிரஷரும் கொடுக்கறதில்ல; இன்னும் என்ன வேணும் இவங்களுக்கு... அலுவலக நேரத்தில, வேலை செய்யாம இப்படி கூச்சல் போட்டுட்டு இருக்காங்க,'' என்றான்.தலை குனிந்து நின்றார், பலராம்.கார் கதவின் ஒலி கேட்டு, விரைந்து வந்த அருணின் மனைவி ராகினி, ''இன்றைய நாள் எப்படி இருந்தது...'' என்று கேட்டாள், புன்னகையுடன்!''எப்போதும் போல தான் போனது, '' என்றான் நீண்ட பெருமூச்சுடன்!பின், உடைமாற்றி, முகம் கழுவி வந்தவனின் முன், ''புது டிகாஷனில் போட்ட காபி... அதுக்கு முன் கொஞ்சம் காரட் அல்வாவும், தேன்குழலும் சாப்பிடுங்க,'' என்று, அவன் முன் வைத்து விட்டு போனாள், ராகினி. இரண்டும் வாயில் கரைந்தன; முழுதாக ரசிக்க முடியாமல் உள்ளே ஒரு கனல் எரிந்து கொண்டே இருந்தது.அறைக்குள் நுழைந்த அம்மா, ''என்னப்பா அருண், வேலை ஜாஸ்தியா... கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ... டின்னருக்கு ராகினி, சாமை அடையும், வேர்க்கடலை சட்னியும் செய்திருக்கா சாப்பிட்டு பாரு... அவ்வளவு ருசி; செய்த கைக்கு வைர வளையல் வாங்கிக் கொடு,'' என்று சிரித்து விட்டு போனாள்.அதை காதில் வாங்காமல், அலுவலக நினைவில், கண்களை மூடிக் கொண்டான்; 'ஏன் இப்படி இருக்கின்றனர்... வெற்றிகளுக்கான ரகசியங்களை தேடாமல், தேவைகளை நிறைவேற்றாமல், பிரச்னைகளை கண்டறிந்து தீர்க்காமல், வெற்று அரட்டைகளும், கூலிக்கு மாரடிப்பதுமாகவே ஏன் ஆகிப் போனது இளைய தலைமுறை...' என்று மனம் பொங்கியது. பத்தாண்டுகள் கொத்தடிமை போல பன்னாட்டு நிறுவனங்களுக்கு உழைத்து கொட்டி, முதுகும், கண்களும் பாதிப்படையும் வரை, அலுவலகமே கதியாக கிடந்து, பின், வெளியே வந்து, தன்னந்தனியாக, 'பூஜா சொல்யூஷன்ஸ்' ஆரம்பித்து, தன்னையே அதில் கரைத்தான். ரோஜாக்கள் ஒருபோதும் மாலையாக கொட்டாது என்று அனுபவம் சொல்லிக் கொடுத்த பாடத்தில், எவ்வித அற்புதங்களையும் எதிர்பார்க்காமல் உடல், பொருள், ஆவியை கலந்தான். விளைவு, பின் பனிக்காலத் தாவரம் போல் தொழில், 'சரசர'வென வளர்ந்தது. 'அந்த வேகம், ஆர்வம் இன்றைய இளைஞர்களுக்கு ஏன் இல்லை. எதையும் தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. சம்பளம் தருகிற வேலைக்கு, நேர்மையாக தன் பங்கை அளிக்க வேண்டும் என்கிற அடிப்படை நெறி கூட இல்லாமல், அலுவலக நேரத்தில் அரட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர்...' என, எண்ணினான்.இரவு உணவின் போதும், அதே சிந்தனையுடன் சாப்பிட்டவனிடம், ''என்ன, பேச்சையே காணோம்... சாமை அடை எப்படி இருக்கு,'' என்று கேட்டாள், ராகினி. ''பிரமாதமா இருக்கு; உன் திறமை பத்தி எனக்கு தெரியாதா...'' என்றான்.''வேர்க்கடலை சட்னி...''''அதுவும் பிரமாதம்... ஏன் இவ்வளவு மெனக்கெடறே...''''அதெல்லாம் ஒண்ணும் கிடையாது... வெளிநாட்டு மிக்சி, இன்டக் ஷன் ஸ்டவ், ஓவன், நாள் பூரா ஓய்வு... இதுல நான் பண்றது ஒண்ணுமே இல்ல,'' என்றாள். அப்போது அங்கு வந்த அருணின் அம்மா, ''அப்படி இல்லே ராகினி... மிஷின்கள் என்னிக்கும் வெறும் மிஷின்கள் தான். அந்த ஆற்றலை நாம அன்பும், ஆசையுடன் சேர்த்து பயன்படுத்தும் போது தான், எல்லாமே அற்புதமா மாறும். என்னையே எடுத்துக்கோ... நான் வாழ்க்கைப்பட்டு வரும்போது, நன்னிலத்துல மாடு, தோட்டம், தோப்புன்னு எல்லாம் இருந்தது... வீடு பூரா தேங்காயும், பலாவும் கொட்டிக் கெடக்கும். கை பரபரக்கும்... பாலைக் கிண்டி திரட்டுப்பாலும், தேங்காயை துருவி பர்பியும் பண்ணுவேன். சேவை, புட்டுன்னு தெனம் ஒரு வகை. வாசலில், தேர், கிளி கோலம்ன்னு போடுவேன்... ஆனால், ரசிக்க ஆள் இருக்காது. உங்க மாமனாருக்கு எப்பவும் கோர்ட், கேஸு, வாய்தா இதேதான் நினைப்பா இருக்கும்... சாப்டறது, குளிக்கறது, துாங்கறது எல்லாமே வெறும் சம்பிரதாயம் தான். மூணே மாசத்துல, மனசு, 'சே'ன்னு ஆகிப்போச்சு. அப்புறம் குழந்தைகள் பிறந்து, திருச்சி, சென்னைன்னு வந்து, இங்க அப்பார்ட்மென்ட் வாழ்க்கைக்கு பழகியாச்சு.''எனக்கு மட்டும் ஒரு சப்போர்ட்டோ, பாராட்டோ, குறைந்தபட்சம் ரசிகத் தன்மையோட ஒரு துணையோ கிடைச்சிருந்தா, வாழ்க்கை இன்னும் அழகா இருந்திருக்கும்ன்னு தோணும். உனக்கு அருண் வாங்கித் தந்த மிஷின்களும், உன்னோட ஆர்வமும், ரசிச்சு, உணர்ந்து அனுபவிக்கிற தோழமையோட சேர்ந்து, இந்த வீட்டை அழகான தோட்டமா மாத்தியிருக்கு,'' என்றாள்.''நுாறு பர்சென்ட் சரியா சொல்றீங்க அத்தை... வெறும் மிஷின்கள் மட்டும் அற்புதம் செஞ்சுடாது; அந்த ஆற்றலோட மனித மனமும், அன்பும் இணையணும்; அப்பதான் மாஜிக் நடக்கும். மிக்சி இருந்தா இட்லி வந்துடுமா இல்ல ஓவன் இருந்தா பிட்சா வந்துடுமா... எடுத்துச் செய்ய, ஒரு கனிவான மனசு வேணும். அது, இணக்கமான சூழல்லதான் சாத்தியம். நாந்தான் எல்லா பொருட்களையும் வாங்கிக் கொடுத்திருக்கேனே... சமைக்கிறதுல என்ன கஷ்டம்ன்னு கேட்டா, அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்...'' என்றாள், புன்னகையுடன், ராகினி.அருணின் மனதில், 'நாளை முதல் அந்த வாலிபர்களிடம் எப்படி அன்பு செய்யலாம்...' என்று சிந்தனை ஓடியது. வி.உஷா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !