ஐந்தெழுத்தின் அற்புதம்!
ஜூலை 6 அமர்நீதியார் குருபூஜை!கும்பகோணம் அருகிலுள்ள பழையாறை கிராமத்தில் வசித்தவர் அமர்நீதியார் என்ற வணிகர். தீவிர சிவபக்தரான இவர், பெரும் வள்ளலாகவும் திகழ்ந்தார். சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான கோவணம், துண்டு முதலானவையும் வழங்குவார்.அமர்நீதியாரின் வள்ளல் தன்மை கண்டு மகிழ்ந்த சிவன், அவரது புகழ் உலகெங்கும் பரவும் வகையில் சோதனை செய்ய ஆரம்பித்தார். ஒருநாள், அடியார் வேடத்தில் அமர்நீதியாரின் இல்லத்திற்கு வந்தார் சிவன். அவரை வரவேற்று <உணவு உண்ண அழைத்தார் அமர்நீதியார். காவிரியில் நீராடிவிட்டு வருவதாக சொன்ன அடியார், தான் கொண்டு வந்த ஒரு கோவணத்தை அவரிடம் கொடுத்து, 'ஐயா... இதை பத்திரமாக வைத்திரும். இதன் மதிப்புக்கு அளவே கிடையாது; பல அற்புதங்களை இது நிகழ்த்தும் சக்தியுடையது. எனவே, பாதுகாப்பான இடத்தில் வைத்திரும். இப்போது மழை வரும் போல் தெரிகிறது. கொண்டு சென்றால் நனைந்து விடும்...' என்று கூறி, அவரிடம் ஒப்படைத்தார்.அதை, பத்திரமாக ஒரு பெட்டியில் வைத்து பூட்டி விட்டார் அமர்நீதியார். ஆற்றுக்குச் சென்ற சிவன், அந்த கோவணத்தை காணாமல் போகும்படி செய்து விட்டார். இதற்குள் மழை வந்து விட, நனைந்தபடியே வந்தார். அவருக்கு ஒரு புதிய துண்டு ஒன்றைக் கொடுத்து, துவட்டிக் கொள்ளச் சொன்னார் அமர்நீதியார்.'அதெல்லாம் இருக்கட்டும்... நான் கொடுத்த கோவணத்தை எடுத்து வாரும்; மாற்றிக் கொள்ள வேண்டும்...' என்றார். அமர்நீதியார், பெட்டியைத் திறந்து பார்க்க, கோவணத்தைக் காணவில்லை. அதிர்ச்சியடைந்த அவர், அடியாரிடம் வந்து விவரம் சொல்லி, வேறு கோவணம் வாங்கிக் கொள்ளச் சொன்னார்; அடியாருக்கு கோபம் வந்து விட்டது.'மகிமை மிக்க கோவணம் என நான் சொன்னதால், அதை, நீர் மறைத்து வைத்து, புதிய கோவணம் தருவதாக நாடகமாடுகிறீர். அதன் மர்மத்தைப் புரிந்து, அதிக விலைக்கு விற்க திட்டம் போட்டிருக்கிறீர். இப்படி கொள்ளையடிக்கும் பணத்தில், தான - தர்மம் செய்பவர் போல் நாடகமாடுகிறீர்...' என்று, திட்டித் தீர்த்தார்.அமர்நீதியார் எவ்வளவோ கெஞ்சியும், பெரும் பணமும், பட்டாடைகளும் தருவதாகச் சொல்லியும் கேட்டபாடில்லை. நீண்ட வாக்குவாதத்துக்குப் பிறகு, 'சரி... சரி... உன் செல்வமெல்லாம் எனக்கு வேண்டாம். துறவிக்கு எதற்கு பணம்? இதோ, என் கோவணங் களில் ஒன்றை இந்த தராசுத் தட்டில் வைக்கிறேன். அதன் எடை அளவுக்கு கோவணம் தந்தால் போதும்...' என்று கோவணத்தை தட்டில் வைத்தார்.அமர்நீதியாரும், ஒரு கோவணத்தை வைத்தார்; எடை சரியாகவில்லை. இன்னும் சில கோவணங்களை வைத்தார்; அசையவில்லை. தன்னிடமிருந்த கோவணங்கள் முழுமையும், பட்டாடைகளையும் வைத்தார். முள் ஆடக் கூட இல்லை. தன் செல்வம் முழுவதையும் வைத்தார். அது அசையாததால், 'அடியாரே... இது என்ன சோதனை! இப்போது நானும், என் மனைவி, மகனும் மட்டுமே இருக்கிறோம். நாங்கள் வேண்டு மானால் அதில் ஏறி அமர்கிறோம்; ஏற்றுக் கொள்ளுங் கள்...' என்று சொல்லி, 'சிவாயநம' என்ற, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடியே, 'நாங்கள் தினமும் சொல்லும் இந்த மந்திரத்துக்கு சக்தி இருக்குமானால், தராசு சீராகட்டும்...' என்றார்.ஐந்தெழுத்து மந்திரம் அங்கு ஒலித்ததுமே, தட்டு சீராகி விட்டது. அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷப வாகனத்தில் பார்வதிதேவியுடன் அமர்ந்து தன் சுயரூபம் காட்டி, எல்லாம் தன் சோதனையே என்றும், அவரது வள்ளல் தன்மையை உலகுக்கு காட்ட நடத்திய நாடகம் என்றும் தெரிவித்தார்.'நமசிவாய' என்ற மந்திரத்தைச் சொன்னால், வாழும் காலத்தில் செல்வ வளத்துடன் வாழலாம்; 'சிவாயநம' என்று சொன்னால், சொர்க்கத்திலேயே இடம் கிடைக்கும்; பிறப்பற்ற நிலையை அடையலாம். சிவன், அந்த தராசை புஷ்பக விமானமாக மாற்றி, அப்படியே கைலாயம் அழைத்துச் சென்றார். அவர்கள் பரமனின் திருவடியை நேரடியாகத் தரிசிக்கும் பாக்கியம் பெற்றனர்.அமர்நீதியாரின் குருபூஜை, ஆனி பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், நமசிவாய எனும் நாமத்தையும், சிவாயநம எனும் நாமத்தையும் உச்சரித்தபடியே நாக்கு இருக்கட்டும்.***- தி. செல்லப்பா