மீசைக்கார கிருஷ்ணர்!
கிருஷ்ணருக்கு மீசையா... ஆம்... அவர், அர்ஜுனனின் தேர் சாரதியாக பூமிக்கு வந்த காலத்தில், வேலைக்கேற்ற தோரணையாக மீசையுடன் காட்சியளிப்பதை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தரிசிக்கலாம்.சுமதிராஜன் என்ற மன்னன், பெருமாள் பக்தன். இவனுக்கு குருசேத்ர போரில் தேரோட்டியாக இருந்த கண்ணனின் வடிவத்தை தரிசிக்க ஆசை ஏற்பட்டது. தனக்கு அக்காட்சியை காட்டும்படி பெருமாளிடம் வேண்டினான். சுவாமியும் தேரோட்டியாக காட்சி தந்தார். மகிழ்ந்த மன்னர், அதே கோலத்தில் சிலை வடித்தார். பாரதப் போரில், அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்த போது, பெருமாள் ஆயுதம் எதையும் எடுப்பதில்லை என்று செய்த சபதத்திற்கு ஏற்ப, ஒரு கையில் சங்கு மட்டுமே ஏந்தி இருக்கிறார். சக்கரம் இல்லை. இவருக்கு, வேங்கட கிருஷ்ணர் என்று பெயர்.இத்தலத்து உற்சவர் பார்த்தசாரதி, பிற்காலத்தில் பிரசித்தி பெறவே, இவரது பெயரில் கோவில் அழைக்கப்பட்டது. அர்ஜுனனுக்கு, பார்த்தன் என்ற பெயர் உண்டு. அவனுக்கு தேர் சாரதியாக பணி செய்ததால், இவர், பார்த்தசாரதி என்ற பெயர் பெற்றார்.இக்கோவிலில் பிரதான மூலஸ்தானத்தில் வேங்கட கிருஷ்ணர், முன்மண்டபத்தில் ரங்கநாதர் மற்றும் ராமபிரான். பிரகாரத்தில், கஜேந்திரவரதர் மற்றும் யோக நரசிம்மர் உள்ளனர். எனவே, இக்கோவிலை, பஞ்சமூர்த்தி தலம் என்பர். யோக நரசிம்மருக்கே முதல் பூஜை நடக்கிறது. இவரது சன்னிதியிலுள்ள மணியிலும், கதவிலுள்ள மணிகளிலும், நாக்கு இருக்காது. நரசிம்மர் யோக நிலையில் இருப்பதால், மணி ஒலிக்கும் சத்தமும், பேச்சு சத்தமும் கேட்கக் கூடாது என்பதற்காக, இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டியின் கம்பீரத்தை உணர்த்துவது மீசை. இதை உணர்த்தும் விதமாக, இக்கோவிலில் மீசையுடன் காட்சி தருகிறார், வேங்கட கிருஷ்ணர்.வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, பகல் பத்து, ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை, ஐந்து நாட்கள் மட்டும், இவரை மீசையில்லாமல் தரிசிக்கலாம்.துரியோதனனிடம், பாண்டவர்களுக்காக, கிருஷ்ணர் துாது சென்ற ஓவியம், மனதைக் கவரும்.கண்ணன், குருசேத்ர போரில் காயம்பட்டவர் என்பதால், சிலையில் வடுக்கள் உள்ளதைக் காணலாம். காயத்தால் எரிச்சல் இருக்கும் என்பதால், இவருக்கான நைவேத்யத்தில் நெய் அதிகம் சேர்க்கப்படுகிறது.இரண்டு கிலோ அரிசியில் தயாரிக்கும் சர்க்கரைப் பொங்கலுக்கு, 700 கிராம் நெய், 1.4 கிலோ முந்திரி சேர்ப்பது விசேஷம். மற்ற நைவேத்யங்களில் மிளகாய் போன்ற காரமான பொருட்கள் சேர்ப்பதில்லை.கிருஷ்ண ஜெயந்தியன்று, இவரைத் தரிசித்து வரலாம்.தி. செல்லப்பா