ஆர்கானிக் பால்!
பாக்கெட் உணவுகளால், ஆரோக்கியத்தை தொலைத்து விட்டவர்களுக்கு பிடித்த வார்த்தை, 'ஆர்கானிக்!' காய்கறி, பழங்கள், தானியங்கள் என்று, இயற்கை உணவுகள் வந்து விட்ட நிலையில், 'ஆர்கானிக்' பசும் பால் விற்பனை செய்கிறார், சென்னையை சேர்ந்த அப்துல் ஷுகூர்.இயற்கை விவசாயத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக, கார்ப்பரேட் வேலையை துாக்கி எறிந்து, சமுதாய அக்கறையோடு, இப்பணியை மேற்கொண்டுள்ளார்.திண்டிவனம், கீழ் பஜார் கிராமத்தில், ராத்தி, சாஹி, வால், கிர் மற்றும் தார்பார்க்கர் உள்ளிட்ட வட மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த, 176 நாட்டு மாடுகளை கொண்ட பண்ணை வைத்துள்ளார், அஹமத் என்பவர். இயற்கை சூழ்நிலையில், பசும்புல், வைக்கோல், புண்ணாக்கு போன்ற தீவனங்கள் சாப்பிட்டு வளரும் இப்பண்ணை மாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பாலை, மக்களிடம் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றுள்ளார், அப்துல். இது, ஏ2 ரக பாலாகும்.கறந்த பாலின் தன்மை மாறாமல், திண்டிவனத்திலிருந்து அப்படியே கொண்டு வந்து சென்னையில் விற்கிறார், அப்துல். ஆரம்பத்தில் ஐந்து, பத்து என்று இருந்த இவரது வாடிக்கையாளர்கள், மிகக் குறுகிய காலத்தில், முன்னுறை தாண்டியுள்ளனர். இவரிடம் பால் வாங்கி பயன்பெற்றோர், அதன் தரம் மற்றும் அப்துலிடம் தென்பட்ட உண்மைத் தன்மை காரணமாக, அவரிடம் மேலும் சில பொருட்களைக் கேட்டனர். அதன் அடிப்படையில், பொள்ளாச்சியிலிருந்து மரச்செக்கால் தயாரிக்கப்பட்ட கடலை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவைகளையும், ஈரோட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஆர்கானிக் பருப்பு வகைகளையும் நியாயமான விலையில் விற்பனை செய்கிறார். தற்போது, மலிவு விலையில், மக்களுக்கு சத்தான கீரை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளார்.இப்படி, எதைச் செய்தாலும் மக்கள் நலனிற்கு ஏற்றதாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்துலுக்கு உதித்தது ஒன்றும் புதிதல்ல... சென்னை மழை வெள்ளத்தின் போது, களத்தில் இறங்கி, மக்களுக்கு உதவியவர்களில் இவரும் ஒருவர்!அடுத்த முறை பால் வாங்குவதற்கு முன், அப்துலை அழையுங்கள். அவரது மொபைல் எண்கள்: 89399 91573 - 98401 89403.எல்.முருகராஜ்