திண்ணை!
நான் திருப்பத்தூர் (வட ஆற்காடு மாவட்டம்) வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், கிராம சேவகனாக பணியாற்றிய சமயம், 1960 - 65ல், திராவிடர் கழகத் தலைவர், ஈ.வெ.ரா.,வின் கூட்டம் நடக்க ஏற்பாடாகி இருந்தது. ஈ.வெ.ரா., தங்குவதற்காக, அரசு பணியாளர் (டிராவலர்ஸ் பங்களா) விடுதியில் அனுமதி பெறப்பட்டது. குடியிருப்பில் ஓய்வில் இருந்தார் ஈ.வெ.ரா., இரவு பொதுக் கூட்டத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.அன்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்திலிருந்து, எங்கள் அலுவலகத்திற்கு, மாவட்ட ஆட்சியாளர், இன்று இரவு திருப்பத்தூரில் தங்க உள்ளதால், பணியாளர் விடுதியில் தங்க ஏற்பாடு செய்யும்படி தொலைபேசியில் செய்தி வந்தது.ஆனால், ஈ.வெ.ரா.,வை எப்படி காலி செய்ய வைப்பது என்று, அனைத்து அலுவலக ஊழியர் களுக்கும் ஐயமாக இருந்தது. அப்போது எங்கள் அலுவலக ஜீப் ஓட்டுனர், இச்செய்தியை தெரிந்து கொண்டு, ஈ.வெ.ரா.,வின் கார் ஓட்டுனரிடம் சொல்ல, அவர், ஈ.வெ.ரா.,விடம் தெரிவித்தார்.உடனே ஈ.வெ.ரா., 'அரசு ஊழியர்களுக்கு, பணியாளர் விடுதியில் தங்க, அரசால் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது...' என்று கூறி, உடனே பணியாளர் விடுதியிலிருந்து சாமான்களுடன் வெளியேறி, கட்சி பிரமுகர் வீட்டில் தங்கினார்.ஒரு பெரிய சிக்கலை, இரண்டு கார் ஓட்டுனர் களும், ரொம்பவும் லாவகமாக சமாளித்ததை, அனைவரும் பாராட்டினர். என்ன தான் பெரிய தலைவர் ஆனாலும், சட்டத்தை மதித்து நடந்து கொண்டார் ஈ.வெ.ரா.,ஈ.வெ.ரா., ஈ.வெ.ரா., தான்!— ரங்கசாமி, பி.டி.ஓ., பணி ஓய்வு, அம்பத்தூர்.பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ண தாசன் ஆகியோருக்கு முன்னதாக, புகழ்பெற்ற பாடலாசிரியராகத் திகழ்ந்தவர் கவிஞர் கம்பதாசன். இவருடைய இயற்பெயர் அப்பாவு. சிறு வயதிலேயே பாடல்கள் எழுதும் திறமை பெற்றிருந்தார் கம்பதாசன். ஆனால், ஜெமினி ஸ்டுடியோவில் அவருக்குக் கிடைத்த வேலை என்னவோ மோல்டர் வேலைதான். மோல்டர் வேலை செய்து கொண்டே நாடகங்களிலும் நடித்து வந்தார். 'ஸ்ரீனிவாச கல்யாணம்' என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார். பின்னர், 1940ல், 'வேணுகானம்' படத்திற்கு, அனைத்துப் பாடல்களையும் எழுதினார். அதன்பின், பிசியான பாடலாசிரியரானார். கருத்தாழ மிக்கப் பாடல்கள், அவருக்கு நற்பெயரை அன்று வாங்கித் தந்தது. ஞானசவுந்தரி, மங்கை யர்க்கரசி ஆகிய படங்களில் கம்பதாசன் எழுதிய பாடல்கள் காலம் கடந்தும், அவரது பெயரை இசைத்துக் கொண்டிருக்கின்றன. கேரள நாட்டிய நட்சத்திரம் சித்ரலேகாவை காதலித்து, திரு மணம் செய்து கொண்ட போதி< லும், அவரது இல்லற வாழ்க்கை இனிமையாக அமையவில்லை. அதனால், மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், மது அவரை அருந்தத் துவங்கியது. 1973ல், சென்னை அரசு மருத்துவமனையில் அனாதைபோல் இறந்து போனார் கம்பதாசன்.— 'தமிழ் திரைப்பட வரலாறு' நூலிலிருந்து...அந்தக் காலத்தில் வெற்றிக்கொடி கட்டிய படம், 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி!' இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியவர் கவிஞர் பாரதிதாசன். இந்தப் படத்தின் வெற்றி, சுயமரியாதை வட்டாரத்தை வெகுவாகவே சூடேற்றி விட்டது. புராண, இதிகாசங்களை முழுமையாக எதிர்க்கும் பாரதிதாசன், இது மாதிரியான படங்களுக்குப் பணியாற்றலாமா என்று எதிர்ப்புக்குரல் எழுப்பினர். அதற்கு பாரதிதாசன், 'மக்களிடம் மிகுந்த செல்வாக்கு பெற்றுவரும் திரைப்படத் துறையில், ஒரு புது யுக்தியை ஏற்படுத்தியிருக்கிறேன். பிராணநாதா, ஸ்வாமி, சஹியே, தவஸ்ரேஷ்டரே போன்ற சொற்களை நீக்கி, அழகுத் தமிழில் அத்தான், தோழி, குருவே என்று அழைக்க வைத்திருக் கிறேன். அசுரர்களாகக் காட்டப்பட்டவர்களை, தமிழறிந்த இரக்க சிந்தை உடையவர்களாகக் காட்டியிருக்கிறேன். இந்தத் தொடக்க நிலையில் இதைத்தான் செய்ய முடியும். இன்னும் முன்னேறி, முற்போக்குக் கருத்துக்களுக்கு சிறப்பான இடத்தைப் பிடித்துத் தருவேன். தேவையில்லாமல் என்னை யாரும் தவறாகப் புரிந்து கொண்டு எதிர்க்க வேண்டாம். போய் வேற வேலையைப் பாருங்கப்பா...' என்றார்.— 'பாவேந்தர் பாரதிதாசனின் திரைப்பட பிரவேசம்!' நூலிலிருந்து...***நடுத்தெரு நாராயணன்