உள்ளூர் செய்திகள்

திண்ணை!

தன் மகள் ஜெயலலிதா குறித்து, அவரது தாயார் சந்தியா கூறியதாவது:என் மகள் அம்மு - ஜெயலலிதா திரைப் படங்களில் நடிக்க வேண்டும் என்று, நான் முதலில் விரும்பவில்லை.சிறு குழந்தையாக இருக்கும்போதே, அம்மு எதையும் சீக்கிரத்தில் புரிந்து கொள்ளும் திறமையை பெற்றிருந்தாள். படிப்பில் அம்மு கெட்டிக்காரி. வகுப்பில் அவள் தான் முதல் மாணவி. படித்துப் பட்டம் பெற வேண்டும் என்ற ஆர்வம் அம்முவுக்கு இருந்தது. அவள் விரும்பியவாறு நிறைய படிக்கட்டும் என்று தான் நானும் எண்ணினேன்.சிறுவயதில், ரேடியோவில் ஒலிப் பரப்பாகும் இசையைக் கேட்டால், அதற்கேற்ப நடனமாடுவாள். நடனத் தின் மீது, அவளுக்கு உள்ள ஆர்வத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று நினைத்த நான், நடன ஆசிரியை, கே.ஜே.சரசாவிடம் அம்முவுக்கு நடனம் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தேன்.சென்னை சர்ச் பார்க் கான்வென்ட்டில் அம்மு படிக்கும்போதே, அவளுக்கு நாடகத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதுவும் ஆங்கில நாடகம். ஆங்கில மொழியை நன்கு அறிந்து, சரளமாகப் பேசும் அம்முவுக்கு, அந்த நாடகத்தில் ஆங்கிலம் பேசத் தெரியாத பிரெஞ்சுப் பெண்ணின் வேடம் கிடைத்தது. இந்த நாடகத்தில், வில்லனாக நடித்தவர், சோ. அம்முவின் நடிப்பை அனைவரும் பாராட்டினர்.இதே சமயத்தில், சங்கர் கிரி (ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களின் மகன்) ஆங்கிலத்தில் டாக்குமென்டரி படம் ஒன்றைத் தயாரிக்க ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். அதில் கதாநாயகியாக நடிக்க, ஆங்கிலம் நன்றாகப் பேசத் தெரிந்த, ஒரு பெண்ணைத் தேடிக் கொண்டிருந்தார்.அம்முவின் நடிப்பைப் பாராட்டிய, ஒய்.ஜி.பி., சங்கர் கிரியிடம், அம்முவை சிபாரிசு செய்திருக்கிறார். சோவும், சங்கர் கிரியிடம் அம்முவை புகழ்ந்து கூறி, 'உங்கள் படத்தில் ஜெயலலிதா சிறப்பாக நடிப்பார்...' என்று சொல்லி இருக்கிறார்.அம்முவை தன் டாக்குமென்டரி படத்தில் நடிக்க, என்னிடம் அனுமதி கேட்டார் சங்கர் கிரி. 'அம்மு சினிமாவில் நடிப்பதை நான் விரும்பவில்லை...' என்று அவரிடம் கூறினேன்.'இது ஒரு ஆவணப்படம், உங்கள் மகளின் படிப்புக்கு இடையூறு ஏற்படாத வகையில், சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் படப்பிடிப்பை நடத்திக் கொள்கிறேன். உங்கள் மகளுக்கும், இது ஒரு நல்ல பொழுது போக்காக இருக்கும்...' என்றார்.சனி, ஞாயிறில் மட்டும் படப்பிடிப்பு. அதுவும் ஆங்கிலப் படம். இரண்டையும் எண்ணிப் பார்த்து, நான் சரி என்று சம்மதித்தேன்.இந்தப் படம் தான், 'எபிசில்!' படப்பிடிப்பு துவங்கியது.அப்போது நான், 'நன்ன கர்த்தவ்யா' என்ற கன்னடப் படத்தில் நடித்து வந்தேன். அதில் எனக்கு மாமியார் வேடம். படத்தின் கதாநாயகி, ஒரு பால்ய விதவை, அந்த வேடத்தில் நடிக்க களையான முகம் கொண்ட, ஒரு இளம் நடிகையைத் தயாரிப்பாளர்கள் தேடினர். உடனே கிடைக்காததால், அந்தப் பாத்திரம் சம்பந்தப்பட்ட காட்சிகளை விட்டு வைத்துவிட்டு, படத்தில் வரும் மற்ற காட்சிகளைப் படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.ஒரு நாள் என்னிடம் கால்ஷீட் வாங்க தயாரிப்பாளர்கள் வந்த போது, தற்செயலாக அம்முவை பார்த்து விட்டனர். 'நாங்கள் தேடிய முகப்பொலிவு உள்ள கதாநாயகி இதோ இங்கேயே இருக்கிறாரே... உங்கள் மகளையே, நாங்கள் கதாநாயகியாகப் போடப் போகிறோம்...' என்றனர். ஆனால், நான் அதற்கு சம்மதம் அளிக்கவில்லை.ஆறு மாதங்கள் சென்றிருக்கும். மீண்டும் அவர்கள் என்னிடம் வந்தனர். 'இன்னும் எங்கள் படத்துக்கு கதாநாயகி அமையவில்லை. உங்கள் பெண்ணையே தயவு செய்து நடிக்க அனுமதியுங்கள்...' என்று கேட்டுக் கொண்டனர். நீண்ட நேரம் நான் யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தேன்.'அம்முவின் படிப்பு கெடக்கூடாது. அவளுக்குக் கோடை விடுமுறை வரும்வரை காத்திருப்பீர்களா?' என்று ஒப்புக்கு கேட்டேன். அவர்களும் உடனே, 'ஆகட்டும்' என்று கூறினர்.மேலும், மூன்று மாதங்கள் ஓடி விட்டன. அம்முவுக்குக் கோடை விடுமுறையும் வந்தது. அதே தயாரிப்பாளர்கள் மீண்டும் வந்தனர். 'உங்கள் மகளை, இந்த முறை மட்டும் நடிக்கச் செய்யுங்கள் தொடர்ந்து நடிக்கச் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி...' என்றனர். என் நிலைமை தர்ம சங்கடமாகி விட்டது. 'அம்முவை நடிக்க அனுமதிக்க வேண்டியது தானா?' என்ற எண்ணம் எழுந்தது. அம்முவிடமும் கேட்டேன்.'நான் திறமையாக நடிப்பேன் என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், எனக்கு ஆட்சேபனை இல்லை...' என்றாள். விடுமுறை நாட்கள் தானே என்று, அம்முவை நடிக்க அனுப்பி வைத்தேன்.நான் நடித்திருந்த, 'கர்ணன்' தமிழ்ப்படத்தின், 100 வது நாள் விழாவுக்குப் போயிருந்தேன். என்னுடன் அம்முவும் வந்திருந்தாள். அம்முவை கண்ட தயாரிப்பாளர், டைரக்டர் பி.ஆர்.பந்துலு, அம்முவை அவரது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் வழக்கம் போல மறுத்தேன். கோடை விடுமுறையிலேயே படப் பிடிப்பை முடித்துக் கொள்வதாகக் கூறினார். கல்யாண குமார் நடித்த கன்னடப்படம் அது. அதில் நடிக்க அம்மு ஒப்பந்தமானாள்.இந்நிலையில், அம்மு பள்ளிப் படிப்பில் பாசாகி, கல்லூரியில் சேர்ந்து வகுப்புக்கு இரண்டொரு நாள் சென்று வந்தாள். அப்போது டைரக்டர் ஸ்ரீதர், அம்முவுக்கு தன் படத்தில் கதாநாயகியாக நடிக்க அழைப்பு விடுத்தார். அம்முவை நடிக்கச் செய்வதா அல்லது தொடர்ந்து படிக்கச் செய்வதா? வீட்டில் என் தந்தையோ, 'குழந்தை தொடர்ந்து படிக்கட்டும்...' என்று, தன் எதிர்ப்பைத் தெரிவித்தார். அம்முவுக்கு படிப்பில் தான் மிகுந்த விருப்பம். அப்படியிருந்தும், அம்மு நடிப்புத் துறைக்கு வந்து விட்டாள் என்றால், அதை விதியின் வலிமை என்றுதானே கூற முடியும்?— பழைய சினிமா இதழ் ஒன்றில் சந்தியா பேட்டி.ஆனந்த விகடனில் வெளியான பகுத்தறிவுப் போட்டி முடிவுகளைத் தாங்கி, அத்துடன் சினிமா, இசை, நாடகம் பற்றிய செய்திகளையும் சேர்த்து, 'நாரதர்' என்ற பத்திரிகை ஒரு இணைப்பு இதழாக முன்பு வெளிவந்தது. ஸ்ரீநிவாசராவ் என்பவர், அதன் ஆசிரியர். விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது, ஸ்ரீநிவாசராவ் பொம்மை இதழில் (1969) எழுதிய கட்டுரைப் பகுதி இதோ:ஒரு கம்பெனியை ஏலம் எடுக்க டெண்டர் கோரப் பட்டிருந்தது.எழுபதாயிரம் ரூபாய், எழுபத்திரண்டாயிரம் ரூபாய், எழுபத்தைந்தாயிரம் ரூபாய், எண்பதாயிரம் ரூபாய் என்ற மேற்படி தொகைகள், சீலிடப்பட்ட நான்கு கவர்களுக்குள் வைக்கப்பட்டிருந்த கடிதங்களில் குறிப்பிட்டிருந்தவை ஆகும். மீதம் இருந்த, ஒரு கவரை பிரித்துப் படித்த ஐகோர்ட் அதிகாரிக்கு சிரிப்பு வந்தது. 'எண்பதாயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய், பதினொரு அணா ஒன்பது பைசா...' என்று வாசித்தார் அவர். 'இந்த உயர்ந்தபட்சத் தொகையைக் குறிப்பிட்டிருப்பவர் எஸ்.எஸ்.வாசன், அவருக்கே ஏலம் விடப்படுகிறது...' என்று தீர்ப்பு கூறினார் அந்த கோர்ட் அதிகாரி.ஆமாம், இப்படித்தான் விசித்திரமான ஒரு தொகையைக் குறிப்பிட்டு, ஏலத்திற்கு வந்த 'மோஷன் பிக்சர்ஸ் கம்பைன்ஸ்' ஸ்டுடியோவை வாங்கினார் வாசன். அதை ராஜா சர் முத்தையா செட்டியார். 1940ல், திறந்து வைத்தார். அதுவே மூவிலேண்ட் ஜெமினி ஸ்டுடியோ ஆயிற்று. ஆழ்ந்து ஆலோசித்து எதையும் முடிவு செய்பவர் வாசன் என்பதற்கு இந்நிகழ்ச்சி ஒரு உதாரணம். ***நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !