திண்ணை
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தன்னை, தமிழினத் தலைவர் என்று, குறிப்பிட்டுக் கொள்கிறார். ஆனால், அவர் தலைவர் ஈ.வெ.ரா., 'தமிழ் எழுத்தும், தமிழ் பேச்சும் ஒழியணும்...' என்று பேசியிருக்கிறார். அதைப் படித்தபோது, நமக்கே, 'திக்' கென்றது. ஈ.வெ.ரா., பேசியதாவது:நான், 1939ல் கோவை கல்லூரியில், அக்கல்லூரி முதல்வரின் தலைமையின் கீழ், மாணவர்கள் முன்னிலையில் பேசும் போது, ஆங்கில எழுத்துக்களையே, தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கணக்காக, அகரவரிசையாக எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து, ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்துக் கொள்ளலாம் என்று சொன்னதோடு, மேலும் ஆங்கிலமே, தமிழனின் பேச்சு மொழியாக ஆகும் காலம் ஏற்பட்டால், நான் மிக மிக மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன், என்று, 1962ல் ஈ.வெ.ரா., பேசியுள்ளார். மேலும், 1957ல் ஈ.வெ.ரா., பேசியது...'சமீபத்தில், நுங்கம்பாக்கத்தில் இந்தி எதிர்ப்புக் கூட்டம் நடந்தது. அதற்கு, எல்லா கட்சிக்காரர்களும் வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் பேசிய திருவாளர் ராஜகோபாலச் சாரியார், தமிழகத்துக்கு, ஆங்கிலமே ஆட்சி மொழி யாக இருக்க வேண்டும் என்று பேசினார். பின், நான் பேசும் போதும், அது போலவே பேசிவிட்டு, ஆங்கிலம் பேச்சு மொழி யாக இருந்தால், மிகவும் பயன்படும் என்று சொன்னேன்...' என்று, கூறியுள்ளார்.- வே. ஆனைமுத்து. பெரியார் ஈ.வெ.ரா., சிந்தனைகள் தொகுப்பு பாகம் -2 பதிப்பு 1974பெல்லாரி மத்திய சிறைக்கு, ஓர் ஆங்கிலேயே அதிகாரி நியமிக்கப்பட்டான். ஒரு நாள் மாலை, காங்கிரசார் அனைவரையும் வரிசையாக அழைத்து போய், மைதானத்தில் நான்கு நான்கு பேர்களாக உட்கார வைத்தனர் வார்டன்கள். நடுவே, ஒரு பலகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. 'யாருக்கோ கசையடி தண்டனை கொடுக்கப் போகின்றனர் போலும்...' என்றேன், அருகிலிருந்த ஜமதக்னியிடம்.லாகூர் சதி வழக்குக் கைதிகள் பூதகேசுவர தத்தர், மகாவீர் சிங், கயா பிரசாத் சிங் ஆகியோரை விலங்கிட்டு, வார்டன்கள் இழுத்து வந்தனர். சிறை நாவிதர்களைக் கூப்பிட்டு, மூவருக்கும் வலுக்கட்டாயமாக மொட்டையடித்தனர். முதலில், பூதகேசுவர தத்தரை பலகைக்கு கொண்டு போயினர். 'புரட்சி ஓங்குக; ஆங்கில ஆட்சி வீழ்க. இந்தியக் குடியரசு வாழ்க...' என்று முழங்கியவாறு, அவர் சிங்கம் போன்று, பாய்ந்து, பலகையில் ஏறிக் கொண்டார்.அவரது கை, கால்களை சங்கிலி கொண்டு பிணைத்தனர். 'புரட்சி வாழ்க' என்று, கோஷமிட்டால் அடிப்பதற்கென்று, ஒரு வார்டன் கையில் தடிமனான பிரம்பு கொடுக்கப்பட்டது. சூப்பரின்டென்ட், 'சார்ஜ்' என்று, கட்டளை யிட்டான். இதற்குள் எங்கள் வரிசையில் அமர்ந்திருந்த வீரபாகு பிள்ளை என்னும் வாலிபர் எழுந்து, 'சூப்பரின்டெண்ட், ஒரு வார்த்தை...' என்று, இழுத்தார். உடனே வீரபாகுவைக் காட்டி, 'சார்ஜ்' என்று, முழங்கினான். பத்து வார்டன்கள், வீரபாகு பிள்ளைமேல் பாய்ந்தனர்.'தடதட'வென லத்தி அடிகள், அவர்கள் முதுகின் மீதும், கைகள் மீதும் விழுந்தன; அவரது சுண்டு விரல் ஒடிந்தது. அவர் மயங்கி விழுந்து விட்டார்.இப்போது, 'சார்ஜ்' என்று, மீண்டும் சூப்பரின்டெண்ட் முழங்கினான். பூதகேசுவரின் புட்டத்தின் மீது, அந்த வார்டன் பலமாகப் பிரம்படி கொடுத்தான். 'இன்குலாப் ஜிந்தாபாத், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் வீழ்க! இந்தியக் குடியரசு வாழ்க...' என்று, முழங்கியவாறு இருந்தார். ஒரு சிங்கம் முழங்குவது போலிருந்தது. அவர் சதைகள் துடிக்கவில்லை. முகத்தில் மலர்ச்சியே இருந்தது. துன்பக் குரலே வெளிவரவில்லை. புட்டத்தின் சதை பிய்ந்து, ரத்தம் தெறித்தது. முப்பது அடிகள் முடிந்தன; கட்டுகள் அவிழ்க்கப்பட்டன. மீண்டும் கோஷமிட்டுக் கொண்டே இறங்கினார். அவரை, அவர் அறைக்கு இழுத்துச் சென்றனர்.அடுத்து மகாவீர் சிங், கயாபிரசாத் சிங் இருவருக்கும் மேற்கண்ட சடங்குகள் ஒன்றுவிடாமல் நடைபெற்றன. இரு வரும் பூதகேசுவர தத்தர் போன்றே, ௩௦ அடிகளையும் பொறுத்துக் கொண்டனர். நாங்கள் அனை வரும் கண்களை மூடிக் கொண்டோம். 'கடவுளே எங்களைக் காப்பாற்று...' என்று, பலர் தொழுதனர். ஒரு பத்துப் பிரம்புகள் முறிந்தன!- ஆக்டர் அனந்தாச்சாரியார், 'அரசியல் நினைவு அலைகள்' நூலிலிருந்து.நடுத்தெரு நாராயணன்