உள்ளூர் செய்திகள்

திண்ணை!

ராணி மைந்தன் எழுதிய, 'சாவி - 85' நூலிலிருந்து: பின்னாளில் சாவி என்று அழைக்கப்பட்ட, விசுவநாதன், முதன் முதலாக சென்னை வந்தது, உறவினர் வீட்டுக் கல்யாணத்துக்காக! சின்னஞ் சிறு சிறுவனான அவனுக்கு, ஒரே த்ரில்! பவழக்காரத் தெருவில் உறவினர், வக்கீல் ராமச்சந்திர ஐயர் வீட்டில், பெற்றோருடன் தங்கினான். அவர், ஆனந்த விகடன் பழைய இதழ்களை, தம் பீரோவில், அடுக்கி பத்திரப்படுத்தி வைத்திருந்தார். அத்தனை விகடன் இதழ்களையும், படித்து விட வேண்டும் என்று விசுவநாதனுக்கு ஒரே துடிப்பு. வக்கீலிடம் தயக்கத்துடன் கேட்டான். 'கசக்காமல், அழுக்காக்காமல் படிக்க வேண்டும்...' என்ற நிபந்தனையோடு, இரண்டே இரண்டு விகடன் பிரதிகளை மட்டும் எடுத்துக் கொடுத்தார். அந்த இரண்டு இதழ்களையும் படித்து முடித்ததும், இன்னும் இரண்டு என்று எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தான்.ஒருநாள், வக்கீல் மாமா அவனுக்கு நாலணா கொடுத்தார். மனதுக்குள் போராட்டம்; ஆசைகள் விசுவரூபமெடுத்தன. ஒன்று, போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. அக்காலத்தில், நாலணாவுக்கு இரண்டு சின்ன சைஸ் போட்டோ எடுத்துக் கொடுப்பர். இன்னொன்று, அந்த ஆண்டு வெளியாகி இருந்த, விகடன் தீபாவளி மலரை வாங்கி படிக்க வேண்டும்.போட்டோவா, விகடனா... நீண்ட நேர யோசனைக்குப் பின், விகடன் தீபாவளி மலரை வாங்குவது என்று முடிவு செய்து, நேராக விகடன் அலுவலகத்தை நோக்கி நடந்தான். செக்குமேடு போலீஸ் ஸ்டேஷன்; கினிமா சென்ட்ரல் வழியாக, தங்க சாலைத் தெருவை அடைந்தான். அப்போது விகடன் அலுவலகம், 244, தங்கசாலைத் தெருவில் இருந்தது. அது திண்ணையுடன் கூடிய சின்ன வீடு.கூடத்தில், கம்போசிங் கேஸ்கள் இரண்டு; தூணுக்கும், சுவருக்கும் இடையே உள்ள சின்ன இடத்தில், குட்டி நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார் அந்த கம்பீரமான மனிதர். நாலணாவை அவரிடம் தந்து, 'தீபாவளி மலர் வேணும்...' என்று கேட்டான். உள்ளே போய் தீபாவளி மலர் ஒன்றை எடுத்து வந்து, தூசி தட்டிக் கொடுத்தார் அந்த கம்பீர மனிதர். அவர்தான் எஸ்.எஸ்.வாசன் என்பது, அப்போது அவனுக்குத் தெரியாது; ஆனால், பிற்காலத்தில் தெரிந்து கொண்டான்.மறைந்த சிதார் இசைக்கலைஞர் ரவிசங்கர், 'மை லைப்; மை மியூசிக்' நூலில் சொல்கிறார்: நான், 1920ல் வாரணாசி (காசி)யில் பிறந்தேன். வாரணாசியில் காலை வேளைகள் ரம்மியமானவை. இப்போது நினைத்தால் கூட மனதுக்குள் ஏக்கம் ஏற்படுகிறது. அதிகாலையில், காசி விசுவநாதரின் ஆலயத்தை நோக்கி, பூசாரிகள் சாரை சாரையாக, 'ஹர ஹர மகாதேவா காசி விசுவநாதா கங்கா...' என்று கோரஸாக பஜனை செய்தபடி செல்வர். அவர்களுடைய பாடல்களால் கவரப்பட்டு, நானும், அவர்கள் பின்னாலேயே செல்வேன். காசியிலுள்ள எண்ணற்ற கோவில்களுக்கு என் அன்னையும், என்னை அழைத்துச் செல்வார்.சிலேட்டும், சாக்பீசும் கிடைத்தால், உடனே, கடவுள் படங்களை வரைய ஆரம்பித்து விடுவேன். நான்கு கரங்கள் கொண்ட மகா விஷ்ணு, குழலிசைக்கும் கண்ணன், அனுமார் இவர்கள் தான் திரும்ப திரும்ப என் படங்களில் வருவர்.கங்கை நதிக்கரையில் செல்வந்தர்களின் மாளிகைகள் உண்டு. ஒவ்வொரு வீட்டிலும், ஒரு ஷெனாய் வித்வான் வேலைக்கு நியமிக்கப்பட்டிருப்பார். காலையில், மூன்று மணி நேரம், மாலையில், மூன்று மணி நேரம் இவர்கள் ஷெனாய் வாசிக்க வேண்டும். எனவே, நகரெங்கும் எப்போதும் ஷெனாயின் இன்னிசையும், கோவில்களின் மணியோசையும் என் செவியில் ஒலித்த வண்ணமே இருக்கும்.நம் நாட்டு, 'பஞ்ச தந்திரக் கதைகள்' நூல் எப்படித் தோன்றியது?மகிளா தேசத்து அரசன், அமரசக்தி என்பவனுக்கு பிறந்த பிள்ளைகள், 'காமா சோமா' என்று இருந்தனர். அதனால், விஷ்ணு சர்மா என்ற ஆசிரியரை அமர்த்தி, அவர்களுக்கு உபதேசிக்க செய்தான் மன்னன். விஷ்ணு சர்மா, மன்னனின் குமாரர்களுக்கு சொல்லிய நீதி கதைகளே, பஞ்ச தந்திரக்கதைகள்! ஆளுவோர் கடைபிடிக்க வேண்டிய ஐந்து தந்திரங்களான நண்பரை பிரித்தல், நண்பரை அடைதல், அடுத்துக் கெடுத்தல், ஆராயாமல் செய்தல் மற்றும் பேரழிவு எனும் ஐந்து உபாயங்களை விளக்கும் கதைகளே, 'பஞ்ச தந்திரக் கதைகள்' என பெயர் பெற்றது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !