உள்ளூர் செய்திகள்

திண்ணை!

'ராஜாஜி 100' நூலிலிருந்து: ராஜாஜி, 'சுதந்திரா கட்சி' எனும் பெயரில், அரசியல் கட்சி துவங்கியிருந்த நேரம். அப்போதைய மத்திய அமைச்சர், சி.சுப்ரமணியம், வீட்டில் ஒரு நிகழ்ச்சி. அதில் கலந்து கொள்ள சென்றிருந்தார் ராஜாஜி.தன் மகளை அழைத்து, ராஜாஜிக்கு அறிமுகம் செய்து வைத்த சி.சுப்ரமணியம், 'இவள், என் மகள் சுதந்திரா; நம் நாடு சுதந்திரம் பெற்ற, ௧௯௪௭ம் ஆண்டில் பிறந்ததால், சுதந்திராதேவி என்று பெயர் வைத்தேன். இப்போது கல்லூரியில் படிக்கிறாள்...' என்றார்.உடனே, ராஜாஜி, 'அம்மா... உன்னை ஒரு வார்த்தை கேட்காமல், உன் பெயரில், கட்சி ஆரம்பித்து விட்டேன்; கோபித்துக் கொள்ளாதே...' என்றார், சுதந்திரா தேவியிடம்!அமெரிக்க ஜனாதிபதி ஆனார் ஆபிரகாம் லிங்கன். தேர்தல் சமயத்தில், அவர் வெற்றி பெற உதவிய சிலர், தங்களுக்கும் பதவி கேட்டு, அவரை நச்சரித்து வந்தனர். இது சம்பந்தமாக ஒரு பொது மேடையில் லிங்கன் பேசும்போது, ஒரு கதை கூறினார்...'ஒரு மன்னன் வேட்டை யாடப் புறப்பட்டான்; தன் அமைச்சரிடம், 'இன்று மழை பெய்யுமா?' என்று கேட்டான். 'பெய்யாது...' என்றார், அமைச்சர். அதை நம்பி பரிவாரங்களுடன் புறப்பட்டு சென்றான். வழியில், கழுதை மீது அமர்ந்து சென்று கொண்டிருந்தான் ஒரு விவசாயி.அவனிடம் மன்னன், 'என்ன குடியானவரே... இன்று மழை பெய்யுமா?' என்று கேட்டான்.'கட்டாயம் பெய்யும்...' என்றான்.சற்று தூரம் சென்றதும், கடும் மழை பெய்தது. தொப்பலாக நனைந்து விட்டான் அரசன். திரும்பும் வழியில் அதே குடியானவனைக் கண்டார். 'மழை பெய்யும் என்று எப்படி உறுதியாக சொன்னாய்?' என்று அவனிடம் கேட்டார்.'மழை பெய்யுமா, பெய்யாதா என்று எனக்குத் தெரியாது; என் கழுதைக்குத் தெரியும். அவை தன் காதுகளை முன்பக்கம் நீட்டிக் கொண்டிருந்தால், அன்று மழை பெய்யும்...' என்றான் குடியானவன்.அரண்மனை திரும்பிய அரசன், அமைச்சரை பதவி நீக்கம் செய்து, குடியானவனின் கழுதையை அமைச்சராக்கினான். அதன்பின் தான் பிரச்னை. ஊரில் உள்ள எல்லா கழுதைகளும், தங்களுக்கும் அமைச்சர் பதவி வேண்டும் என்று நச்சரிக்க துவங்கின...' என்றார் லிங்கன்.'புரியாத சங்கடம்' என்ற கட்டுரையில், கி.வா.ஜ., எழுதியது: ஒரு சத்திரத்து திண்ணையில், இருவர் படுத்திருந்தனர். அவர்களில் ஒருவர் தெலுங்கர்; அவருக்கு தமிழ் தெரியாது. கையில், நீண்ட தடி வைத்திருந்தார்; அதன் பக்கத்தில் ஒரு வளையம் இருந்தது.மற்றொருவர் தமிழர்; அவருக்கு தெலுங்கு தெரியாது. அவர், காதில் கடுக்கன் அணிந்திருந்தார். இரண்டு பேரும் வயது முதிர்ந்தவர்கள்.இரவு நேரம் அது! தடியை தலைமாட்டில், சுவரோரமாக படுக்க வைத்து, தூங்கி கெண்டிருந்தார் தெலுங்கர். வளையம் வெளியே நீட்டி கொண்டிருந்த நிலையில், அதற்கு சற்றுத் தள்ளி படுத்திருந்த தமிழர், சற்றே புரண்டார். தடியின் வளையத்தில் கடுக்கன் மாட்டிக் கொண்டது. இதனால் தமிழர் புரள, தடி அசைவதை அறிந்த தெலுங்கர், அதை மற்றவர் எடுக்கிறாரோ என்று எண்ணி, 'நாதிரா...' (என்னுடையதடா) என்று தெலுங்கில் கூறினார். கடுக்கன் அகப்பட்டுக் கொண்ட சங்கடத்தில் தமிழர், 'காதுரா...' என்றார். தெலுங்கில் காதுரா என்றால், 'இல்லையேடா...' என்று பொருள். அதனால், தெலுங்கர் கோபத்தோடு தடியை இழுத்தார்.தமிழர் 'ஐயோ... காதுரா...' என்று அலறினார்.கன்னடம் பேசும் மாத்துவர்கள் வீட்டில், விருந்து நடந்தது. பெரும்பாலும் கன்னடம் பேசுபவர்களே விருந்துண்டனர். அவர்கள் நடுவில் ஒரு தமிழர் இருந்தார்; அவருக்கு கன்னடம் தெரியாது. சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, ஒருவர் பாத்திரத்தில் எதையோ கொண்டு வந்து, 'சாக்கா... பேக்கா...' என்று கேட்டார். தமிழரோ, 'இரண்டு வித பட்சணங்களில் எது வேண்டுமென்று கேட்கிறார் போலிருக்கு...' என்று எண்ணி, 'சாக்கில் ஒன்று போடு; பேக்கில் ஒன்று போடு...' என்றார்.கன்னடத்தில், சாக்கா என்றால், போதுமா என்றும், பேக்கா என்றால், வேண்டுமா என்றும் பொருள். 'போதுமா இன்னும் வேண்டுமா...' என்று பரிமாறுபவர் கேட்டார். அவர் பேச்சு புரியாத தமிழர், இரண்டு விதமான பண்டங்கள் என்று நினைத்து விட்டார்.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !