உள்ளூர் செய்திகள்

திண்ணை!

தன் பிறந்த நாள் செய்தியாக, 1964ல், 'விடுதலை' பத்திரிகையில், ஈ.வெ.ரா., எழுதியது: இப்புவியில், 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86ம் ஆண்டில் புகுகிறேன். 'என்ன செய்து விட்டாய்?' என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதிலை, நீங்கள் தான் தேடிப் பார்த்து, தெரிந்து கொள்ள வேண்டும். ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்தேன்; திருட்டு, புரட்டு, மோசடி இன்றி வெள்ளையாக நடந்து கொண்டேன். என் நடத்தையில் பல தவறுகள் ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், என்னையே நீதிபதியாக பார்க்கும் போது, எனக்கு சரியென்று பட்டதையே செய்துள்ளேன். தேவைக்காக வாழவில்லை என்பதும், அனாவசியமான மனிதனாய் இருக்கவில்லை என்பதும் ஆறுதல் தரத்தக்க விஷயம். நான், 1034 பிறை கண்டவன்; அதனால், முழு வாழ்நாளையும் வாழ்ந்து விட்டேன்.கிரமப்படி பார்த்தால், உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ள வேண்டும். எனக்கு புத்தி கோளாறு இல்லை என்று கருதினாலும், மறதி அதிகமாகி விட்டது. பேசப் பேச, பேச்சுத் தொடர் மறந்து போகிறது. வெகு கெட்டிக்காரத்தனமாய் சமாளித்துக் கொள்கிறேன். காது, 100க்கு, 40 பங்கு சத்தம் கேட்பதில்லை. கண்கள், கண்ணாடி போட்டாலும், 10 அல்லது 20 வரிக்கு மேல் படிக்க முடிவதில்லை. கண்களில் கண்ணீர் வந்து மறைத்து விடுகிறது; துணைக்கு பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை. குடல் இறக்க நோய் இருப்பதால், உட்கார்ந்திருக்கும்போது, ஒரு இளநீர் அளவு குடல் இறங்கி, சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக்கிறது. நின்றால், 'புட்பால்' அளவுக்கு பெருகி, பெரு வலி ஏற்படுகிறது. இக்காரணங்களால் என்னை நானே, 'கண்டெம்டு மேன்' என்றே கருதி வாழ்கிறேன்.'குழந்தை வளர்ப்பு' நுாலில்: குழந்தைகள் மலரைப் போன்றவர்கள். அவர்களை துாக்கி குலுக்குவது மிகவும் ஆபத்து. சிறு குழந்தையை கையிலெடுத்து, மேலே துாக்கிப் போட்டு பிடிப்பது, கால்களை பிடித்து தட்டாமாலை சுற்றுவது போன்ற செயல்களினால், மூளையில் ரத்தக் கசிவு மற்றும் ரத்த நாளம் வெடித்து விடும் அபாயம் உண்டு. சில சமயம் மூளை கசங்கி, பிற்காலத்தில் குழந்தை மூளை வளர்ச்சி அடையாமல், மிகவும் மந்தமாக இருக்கும் நிலையும் ஏற்படும்.'என் வசந்த காலங்கள்' நுாலில் கண்ணதாசன்: சிறு வயதில் ஒருவனது உள்ளுணர்வில் என்ன தோன்றுகிறதோ, அதே வழியில் செல்ல அவனை விட்டுவிட வேண்டும்; வேறு தொழில்களுக்கு அவனைத் திருப்பக் கூடாது.பெட்டிக் கடை வைப்பதில் தான் ஒரு குழந்தைக்கு ஆசை என்றால், அதையே அனுமதித்து விட வேண்டும். படிப்பு வரவில்லை என்று அவனை அடிப்பதில் பயனில்லை.ஆட்டுக்கு இலை, தழைகள் பிடிக்கும்; மாட்டுக்கு வைக்கோல், புண்ணாக்கு பிடிக்கும்; யானைக்கு கரும்பு பிடிக்கும்; குரங்குக்கு வாழைப் பழம் பிடிக்கும்.புண்ணாக்கு தின்னும்படி குரங்கை வற்புறுத்தக் கூடாது.'தெரிந்து கொள் தம்பி!' என்ற நுாலிலிருந்து: காந்திஜி சுட்டுக் கொல்லப்பட்ட நாளில், இலங்கை வானொலியில் ஒரே களேபரம்... அப்போது, ஒலிபரப்பு அதிகாரியாக இருந்த, ரிச்சர்ட் வீர சூரியா, என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துப் போனார்.இந்திய வானொலியோ, சோகத்தை ஒலிபரப்பியதோடு, இடையிடையே நேரு உள்ளிட்ட தலைவர்களின் பேச்சையும், செய்தி அறிக்கைகளையும் ஒலிபரப்பியபடி இருந்தது.இலங்கை வானொலியில் அந்த வசதி இல்லை; அதிகாரிகள், கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தனர்...அது, அடுத்த, 24 மணி நேரத்திற்கு எந்தவித நிகழ்ச்சிகளையும் ஒலிபரப்பாமல் வானொலி நிலையத்தை மூடி வைப்பது என்று!இதன்படி, நாள் முழுதும், எந்த நிகழ்ச்சியையும் ஒலிபரப்பவில்லை.உலகத்தில், காந்திஜிக்கு இந்த விதமாக, 'மவுன அஞ்சலி' செய்த நாடும், வானொலியும் இலங்கை மட்டும் தான்!நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !