உள்ளூர் செய்திகள்

திண்ணை!

சுமார், 50 ஆண்டுக்கு முன், ஒரு பத்திரிகையில் வந்துள்ள செய்தி: சாத்துாரில் ஒரு கூட்டம், மு.கருணாநிதியின் பேச்சில் சூடேறிக் கொண்டிருந்தது. அப்போது, சில தொண்டர்கள், கழக நிதிக்காக கூட்டத்தினரிடையே உண்டியல் குலுக்கினர். அதனால் ஏற்பட்ட ஓசையால், கருணாநிதியின் பேச்சில் சிறிது தடை ஏற்பட்டது. உடனே அவர், தன் குரலை லேசாக தாழ்த்தி, ஒலிபெருக்கியில் சொன்னார்... 'நண்பர்களே... கழக தோழர்கள் கொண்டு வரும் உண்டியலில் சில்லரையாக போடுவதால் தான் இப்படி சத்தம் உண்டாகிறது. எனவே, ஓசை ஏற்படாதிருக்க, நீங்கள் ஒவ்வொருவரும் ரூபாய் நோட்டுகளாகவே உண்டியலில் போடும்படி கேட்டுக் கொள்கிறேன்...'இதை படித்தபோது, உங்கள் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்குமே... அதாவது, அன்றைக்கு பொது மக்களிடம் உண்டியல் ஏந்திய கட்சிகள், இன்று பொதுமக்களுக்கு, தலைக்கு இருநுாறு ரூபாய் பணமும், பிரியாணியும் கொடுத்து, வாகனங்களில் ஏற்றி வந்து மாநாடுகளுக்கு கூட்டம் சேர்க்கின்றனர். ஆயிரம், இரண்டாயிரம் கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். இதுவன்றோ கட்சிகளின் வளர்ச்சி!காந்திஜியுடன் இருந்த, சாந்தி குமார் என்பவர் எழுதியுள்ள, 'காந்திஜி நினைவுகள்' நுாலிலிருந்து: திறந்த வெளியில் தான் துாங்குவார், காந்திஜி. மழை பெய்யும்போது மரக் கட்டிலில் கொசு வலை கட்டிக்கொண்டு தாழ்வாரத்தில் படுப்பார். அதிகாலை, 3:30 மணிக்கு எழுந்து விடுவார். 'ஹே ராம்' என்று சொல்லி, கொஞ்ச நேரம் மாலையை கையில் வைத்து, ஜபம் செய்வார். பின் எழுந்து சிறுநீர் கழித்து, படுக்கை அருகே உள்ள ஸ்டூலின் மீது வைக்கப்பட்டிருக்கும் நீரை எடுத்து வாய் கொப்பளித்து, பல் தேய்ப்பார். பல் குச்சியில் கரி பொடியை தோய்த்து பல் தேய்ப்பார். பின், 16 அவுன்ஸ் வெந்நீரில் தேனும், சோடா உப்பும் கலந்து, பருகுவார். காலை பிரார்த்தனைக்காக, முதல் மணி, 4:00 மணிக்கு அடிக்கும். 4:15க்கு இரண்டாவது மணி; பிரார்த்தனைக்கு போய் அமர்வார். பிரதி மாதம், 22ம் தேதி மட்டும் (கஸ்துாரிபா இறந்த நாள்) பகவத்கீதை பாராயணம் நடக்கும். காலை, 6:00 மணிக்கு நடைபயிற்சி முடித்து திரும்புவார்.ஒரு கதாசிரியரிடமிருந்து அவரது நாவலை படமாக்கும் உரிமையை வாங்கியிருந்தார், தயாரிப்பாளர் ஒருவர். படத்தை தயாரித்து முடித்ததும், நாவலாசிரியருக்கு படத்தை திரையிட்டு காட்டினார், தயாரிப்பாளர். படத்தை பார்த்த கதாசிரியர், தயாரிப்பாளரிடம், 'படம் நன்றாக இருக்கிறது; இந்த கதையை தழுவி, நான் ஒரு நாவல் எழுதிக்கொள்ள அனுமதி தர முடியுமா?' என்று கேட்டார். பாவம், அவர் எழுதிய நாவலுக்கும், அவர்கள் எடுத்திருந்த படத்துக்கும் அவ்வளவு வேறுபாடு இருந்தது! 'மகாகவி பாரதி' என்ற நுாலிலிருந்து, பரலி சு.நெல்லையப்பருக்கு, பாரதி எழுதிய கடிதம்: உன் கடிதம் கிடைத்தது; குழந்தைக்கு உடம்பு சுகமின்மையால், உடனே, 'ஜவாப்' எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாசத்துக்கு, 'நாட்டுப் பாடல்கள்' அனுப்புகிறேன். அவற்றை, உன் பத்திரிகையிலும், 'ஞான பானு'விலும் பிரசுரம் செய்திடு. 'புதுமை பெண்' என்றொரு பாட்டு அனுப்புகிறேன்; அதை, தவறாமல் அச்சிட்டு, அதன் கருத்தை விளக்கி எழுது. எங்கேனும், எப்படியேனும் பணம் புரட்டி, ஒரு நண்பன் பெயரால் எனக்கனுப்பு. தம்பி... உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை... நீ வாழ்க!— உனதன்புள்ள, பாரதி.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !