உள்ளூர் செய்திகள்

திண்ணை!

பிப்., 24, ஜெயலலிதா பிறந்த நாள்!எஸ்.கிருபாகரன் எழுதிய, ஜெ.ஜெயலலிதா என்னும் நான்... 'அம்மாவின் கதை!' எனும் நுாலிலிருந்து:ஜெயலலிதா, முதல்வரானபோது, அவர் அறிவித்த திட்டங்களில் மிகவும் பாராட்டப் பெற்றது, தொட்டில் குழந்தை திட்டம். இத்திட்டத்தின் பின்னணியில் ஒரு, 'ப்ளாஷ்பேக்' உண்டு. சிறு வயதில், ஒருமுறை, தன் இல்லம் அருகே இருந்த பூங்காவில், பணியாள் ஒருவருடன், நடைபயிற்சியில் இருந்தார், ஜெயலலிதா.அப்போது, பூங்காவின் ஓரிடத்தில் மக்கள் திரளாக நின்றிருந்தனர். ஆர்வத்துடன் கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்த்தார், ஜெயலலிதா.அங்கே, கந்தல் உடையுடன், எலும்பும் தோலுமாக, எண்ணெய் இல்லாத பரட்டை தலையுடன் சில சிறுமியர், பல்டி அடிப்பது, கம்பிக்குள் நுழைந்து வெளியேறுவது என, வித்தை காட்டிக் கொண்டிருந்தனர். வித்தை முடிந்ததும், கூட்டத்திடம் காசு வசூலித்தனர், சிறுமியர்.ஒரு பெண் குழந்தை, ஜெயலலிதாவிடம் கையேந்தும்போது, அவருக்கு கண்ணீர் வந்து விட்டது.உடனே, தன் காதிலிருந்த இரண்டு காதணிகளையும் கழற்றி, அந்த நாடோடி குழந்தையின் தலைவனிடம் கொடுத்து, 'இதை விற்று, அந்த பெண்ணை படிக்க வை...' என்றார்.பிரபல சினிமா இதழ் ஒன்று, அப்போதைய பிரபலங்களிடம், 'மாய மாத்திரை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்து, யாருடைய கண்ணுக்கும் தெரிய மாட்டீர்கள் என்றால், என்ன செய்வீர்கள்...' என, ஒரு கற்பனையான கேள்விக்கு, பதில் அளிக்க கேட்டது.'அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால், எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல முடியுமோ, அவ்வளவு பணத்தையும் எடுத்து, இந்தியா முழுவதையும் சுற்றிப் பார்க்க கிளம்புவேன்...'அப்போது, ஏழ்மையின் காரணமாக, பள்ளிக்கு, பணம் கட்டி படிக்க முடியாமல் தவிக்கும் சிறுவர்கள் எங்கே உள்ளனரோ, அவர்களை கண்டுபிடித்து, பணத்தை அள்ளிக் கொடுப்பேன்...'வீதியிலே, தாய், தந்தையின்றி, மண்ணில் புரண்டு, அழுக்கேறி, திக்கற்று நிற்கும் அனாதை சிறுவர் - சிறுமியரை துாக்கிச் சென்று, குழாயடியிலே குளிப்பாட்டி, புத்தாடைகளை அணிவிப்பேன். 'அவர்களின் வருங்காலத்துக்கு வழி செய்ய, நானே அவர்களை பள்ளிக்கும் அழைத்து போய், அவர்களுக்கு வேண்டிய பணத்தையும் முன் கூட்டியே கட்டி விடுவேன்...'எதிர்கால செல்வங்களுக்கு, என்னால் எவ்வளவு உதவி செய்ய முடியுமோ, அவ்வளவையும் இந்த மாய தோற்றத்தில் செய்து திரும்புவேன்...' என, பதிலளித்திருந்தார், ஜெயலலிதா.அவர், சொன்னது, வெறும் வார்த்தைகள் அல்ல; அப்போது, பார்வையற்ற சில மாணவர்களை தத்தெடுத்து, தன் வழக்கறிஞர் மூலம் அவர்களின் அனைத்து செலவுகளையும் ஏற்று, படிக்க வைத்துக் கொண்டிருந்தார், ஜெயலலிதா.சென்னை சட்டக் கல்லுாரியில், 1962ல், நடந்த விழா ஒன்றுக்கு, தலைமை தாங்கினார், எம்.ஜி.ஆர்.,பார்வையாளர்களை மகிழ்விக்க, மேடையில் பல கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்ச் பார்க் பள்ளி மாணவியான, ஜெயலலிதாவின் நாட்டியத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு மாணவன் நடத்திய, 'மிமிக்ரி' நிகழ்ச்சியில் மனதை பறிகொடுத்த, எம்.ஜி.ஆர்., தன் கை கடிகாரத்தை அவனுக்கு பரிசளித்தார். அடுத்து, நடனமாடியவர், ஜெயலலிதா. பார்வையாளர்கள் மத்தியில் பலத்த கைதட்டல். சிறுமி ஜெயலலிதாவின் நாட்டியத்தில் மெய்மறந்த, எம்.ஜி.ஆர்., அவருக்கு, ஏதாவது பரிசு தந்தே ஆகவேண்டும், என்று நினைத்தார். உடனடியாக தன் உதவியாளரை அழைத்து, நிகழ்ச்சி முடிவதற்குள், அழகிய வெள்ளிக் கோப்பை ஒன்றை வாங்கி வர சொன்னார். ஜெயலலிதாவுக்கு வெள்ளிக் கோப்பையை வழங்கி, பாராட்டினார், எம்.ஜி.ஆர்., நடுத்தெருநாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !