திண்ணை!
ஆக., 7 கருணாநிதி நினைவு தினம்பாரதி பதிப்பகம், மு.கருணாநிதி எழுதிய, 'பேசும் கலை வளர்ப்போம்' நுாலிலிருந்து: திருமண விழா ஒன்றில், கருணாநிதி கூறிய கதை இது:கணவனும், மனைவியும் ஒன்றுமையுடன் வாழ்ந்தனர். பிழைப்புக்கு வழியின்றி தவித்த அவர்களை, ஏழ்மை தாக்கியது. ஒருநாள், கணவனிடம், 'வீட்டில் உள்ள, காளை மாட்டை விற்று, அதில் கிடைக்கும் பணத்தில், ஒரு பெட்டிக் கடை வைத்தால், குடும்பத்தை நடத்தலாமே...' என்று, யோசனை கூறினாள்.அதற்கு உடன்பட்டு, மாட்டை, சந்தைக்கு ஓட்டிச் சென்றான். வழியில், அங்கும் இங்கும் மிரண்டு ஓடியது, மாடு.அப்போது, ஆடு ஒன்றை ஓட்டி வந்தான், ஒருவன். இவனை பார்த்து, 'ஏனய்யா... அந்த முரட்டுக் காளையுடன் சிரமப்படுகிறாய்... என்னிடம் கொடுத்து விடு; அதற்கு பதிலாக, என் ஆட்டை தருகிறேன்...' என்றான்.அறிவிலி கணவன், மாட்டை கொடுத்து, ஆட்டை ஓட்டி, சந்தைக்கு சென்றான்.கையில் ஒரு பெட்டை கோழியுடன் எதிரே வந்த, ஒருவன், 'கோழியை கையிலேயே துாக்கி போய் விடலாம்... ஏன், ஆட்டை ஓட்டி கஷ்டப்படுகிறாய்...' என்றான். உடனே, அறிவிலி கணவன், ஒப்புக்கொண்டு, ஆட்டை கொடுத்து, பதிலுக்கு, கோழியை வாங்கி கொண்டான்.போகும் வழியில் இருந்த பிரியாணி கடைக்காரன், கோழியை பார்த்ததும், அன்றைக்கு சமைத்து விட திட்டமிட்டான். அறிவிலி கணவனிடம் நயமாக பேசி, ஒரு குவளை தேநீருக்கு, கோழியை வாங்கிக் கொண்டான்.அறிவிலி கணவன், தேநீரை குடித்துக் கொண்டிருந்த போது, அவனது பக்கத்து வீட்டுக்காரன், 'அடே முட்டாளே... நானும், உன்னை கவனித்து தான் வருகிறேன். மாட்டை கொடுத்து, ஆட்டை வாங்கினாய்; ஆட்டை கொடுத்து, கோழியை வாங்கினாய்; இப்போது, கோழியை கொடுத்து, தேநீர் வாங்கி சாப்பிடுகிறாய்... 'இதையெல்லாம் உன் மனைவி அறிந்தால், உன்னை விட்டு ஓடியே விடுவாள் அல்லது உன்னை அடித்து துரத்துவாள்...' என்றான்.'அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது...' என்றான், அறிவிலி கணவன்.'இல்லை... நடக்கும்...' என்றான், பக்கத்து வீட்டுக்காரன்.அப்படி நடந்தால், அறிவிலி கணவனுடைய வீட்டை, பக்கத்து வீட்டுக்காரனுக்கு எழுதிக் கொடுத்து விட வேண்டும்; நடக்காவிட்டால், பக்கத்து வீட்டுக்காரன், அவனுடைய பெட்டிக் கடையை, அறிவிலி கணவனுக்கு எழுதி தந்துவிட வேண்டும் என்று, பந்தயம் கட்டியபடியே, இருவரும், வீடு திரும்பினர்.பக்கத்து வீட்டுக்காரன், அறிவிலியின் மனைவியிடம், 'உன் கணவர், மாட்டோடு சென்று, ஒரு கோப்பை தேநீரோடு திரும்பி இருக்கிறான்...' என்று, அவன் செய்த முட்டாள் தனமான காரியங்களை சொல்லி, கேலி செய்தான்.அறிவிலியின் மனைவியோ, கணவனை பார்த்து, 'அந்த தேநீரையாவது வயிறு நிரம்ப சாப்பிட்டீர்களா...' என்று, அன்பொழுக கேட்டாள்.பக்கத்து வீட்டுக்காரனுக்கு, ஒரே அதிர்ச்சி. பந்தயத்தில் தோற்றுப் போய், பெட்டிக் கடையை எழுதிக் கொடுத்து விட்டான்.மறுநாள், அறிவிலி கணவனை பார்த்து, 'என்னடா... உன் மனைவி, உன்னை விட மூடமாக இருக்கிறாள்...' என்றான், பக்கத்து வீட்டுக்காரன்.'அப்படி ஒன்றும் இல்லை... என்னதான் அவளுக்கு, என் மீது வருத்தமோ, கோபமோ இருந்தாலும், பிறர் முன், அதை காட்டிக் கொள்ள மாட்டாள்; நானும் அப்படி தான். அந்த தைரியத்தில் தான், உன்னிடம் பந்தயம் கட்டினேன்...' என்றான், அறிவிலி கணவன்.தங்கள் குடும்ப பிரச்னைகளை, பிறர் முன், பெரிதுபடுத்தக் கூடாது என்பதற்கு, இந்த கதையே எடுத்துக் காட்டு!பூங்கொடி பதிப்பக வெளியீடு, பி. எல். ராஜேந்திரன் எழுதிய, 'உணர்ச்சிக் கலைஞரின் உவமை நயங்கள்' நுாலிலிருந்து: ஒரு சமயம், தி.மு.க.,வினர், கருணாநிதியை மேடையில் அமர்ந்திருக்க, 'டாக்டர் கலைஞரின் எழுத்திலும், பேச்சிலும் மிஞ்சி நிற்பது உணர்ச்சியா, உவமையா?' என, பட்டிமன்றம் நடத்தினர்.நடுவராக, டாக்டர் மெ.சுந்தரம் என்பவர் இருந்தார்.உணர்ச்சி அணியில் - அவ்வை நடராஜன், வலம்புரி ஜான், ரகுமான்கான், க.அறிவழகன் மற்றும் துரைமுருகன்.உவமை அணியில் - திருப்பத்துார் ராமமூர்த்தி, இளங்கோ, செல்வரத்தினம், முத்து ராமலிங்கம் மற்றும் ராஜா முகமது ஆகியோர் பேசினர்.பட்டிமன்றமும், நடுவர் தீர்ப்பும் முடிந்தது. இங்கும், தீர்ப்பு சமம் என வழங்கப்பட்டது. இறுதியாக, அன்றைய முதல்வர், கருணாநிதி, நன்றியுரை ஆற்றினார்.அது, பட்டிமன்றத்தையே பின்னுக்கு தள்ளியது. அதிலிருந்து சுவையான சில துளிகள்...'இந்த பட்டிமன்றத்தில், நண்பர்களின் நல்ல வாதத் திறமையை கண்டுகளித்தேன். உணர்ச்சிக்கும், உவமைக்கும் எப்போதுமே உறவு உண்டு. உவமை எப்போது தோன்றும்... உணர்ச்சி தோன்றுகிற போது. 'புரட்சிக் கவிஞர், பாரதிதாசன், நிலவை பார்த்து, காலை வந்த செம்பரிதி, கடலில் மூழ்கி, கனல் மாறி குளிரடைந்த, ஒளிப்பிழம்பே என்று பாடினார்.'ஆகவே, உணர்ச்சி ஏற்பட்ட பின் தான், உவமை பிறக்கிறது.'ஒரு காதலனும், காதலியும் சந்திக்கின்றனர். காதலனுக்கு ஒரு உணர்ச்சி தோன்றுகிறது. காதலிக்கு, அது தோன்றாமல் இருக்கலாம். 'ஆனால், காதலன், காதலியை பார்த்து, 'உன் கன்னம் கண்ணாடி; உன் நடை அன்னம்... நீ ஆடுவது, மயில் போல் இருக்கிறது... மெல்ல குரலெடுத்து, நீ பாடும்போது, குயில் போல் இருக்கிறது... உன்னை தொட்டால், பொன்னை தொடுவது போலிருக்கிறது...' என்று கூறினால், காதலிக்கு கூட உணர்ச்சி தானாக வரும்.'அனுபவமா என்று கேட்காதீர். நீங்கள் சொல்ல மறந்ததை - சொல்ல கூச்சப்பட்டதை, நான் எடுத்துக் கூறுகிறேன். இந்த அளவுக்கு, உணர்ச்சியோடு, உறவு கொண்டது உவமை...' என, முடித்து, நன்றி கூறினார், கருணாநிதி.வானதி பதிப்பகம் வெளியீடான, கண்ணதாசன் எழுதிய, 'வனவாசம்' நுாலிலிருந்து: ஒருநாள், சேலம் அம்பிகா தியேட்டருக்கு, நானும், எம்.ஜி.சக்கரபாணியும், அபிமன்யு படம் பார்க்க போனோம். அந்த படத்தின் வசனங்களை, கருணாநிதி எழுதியதாக, சக்கரபாணி சொன்னார். ஆனால், படத்தில், கருணாநிதியின் பெயர் இல்லை. அபிமன்யு படத்தில், கேட்ட வசனம், என்றும் மறக்க முடியாத இன்ப தமிழாகும்.இன்று வரை, அந்த வசனங்கள், என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காணாமலே காதல் என்பர். அன்று, கருணாநிதியை, நான் முதன் முதலாக, கோயம்புத்துார் லாட்ஜில் சந்தித்ததும், ஒரு காதலியை காணும் உணர்ச்சியே ஏற்பட்டது.எங்களை, ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து வைத்தார், சக்கரபாணி.அன்று முதல், கருணாநிதியும், நானும், உயிருக்கு உயிராக நேசிக்க துவங்கினோம்.'மாடர்ன் தியேட்டர்'சில் மாதம், 500 ரூபாய் சம்பளத்தில், அவர் வேலைக்கு அமர்ந்தார்.ஒருவரை ஒருவர் காணாமல், ஒருநாள் இருந்தாலும், எதையோ பறிகொடுத்தது போலிருக்கும் எங்களுக்கு. ஒருவர் கையில், இன்னொருவர் தலை வைத்து துாங்குகிற அளவுக்கு பாசம் வளர்ந்திருந்தது. அண்ணாதுரை, புது கட்சி ஆரம்பிப்பதற்கான கூட்டம், சென்னையில் ஏற்பாடாகி இருந்தது. அந்த கூட்டத்திற்கு வருமாறு, கருணாநிதிக்கும் அழைப்பு வந்தது. என்னையும் அழைத்தார், கருணாநிதி.இருவரும் சென்னை புறப்பட்டோம்.நானும், அவரும் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள, நாடார் உணவு விடுதியில் தங்கினோம்.அன்று மாலை, சென்னை, 'ராபின்சன் பூங்கா' பொது கூட்டத்தில், 'திராவிட முன்னேற்ற கழகம்' என்ற புது கட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. கூட்டம் முடிந்ததும், நாங்கள் தங்கியிருந்த, நாடார் விடுதிக்கு திரும்பினோம். அங்கு, மதியம் சாப்பிட்ட தட்டு, கட்டில் மீது இருந்தது. அந்த தட்டை எடுத்தார், கருணாநிதி.தட்டின் அடியில், கருநாகம் ஒன்று, சுருண்டு கிடந்தது. தட்டை எடுத்த பின்னும் ஓட முயற்சிக்கவில்லை. நாகத்தை கண்டதும், இருவரும் நடுங்கினோம். வெளியே மழை பலமாக கொட்டிக் கொண்டிருந்தது. மழையில் நனைந்து, ஒரு விறகை எடுத்து வந்து, நாகத்தை அடித்து கொன்றோம்.பிறகு, கட்டிலில் படுப்பதற்கு, கருணாநிதிக்கு பயம். இருவரும் ஒரே கட்டிலில் படுத்து உறங்கினோம்.நடுத்தெரு நாராயணன்