திண்ணை!
சி.எஸ்.சிவசுப்ரமணியன் எழுதிய, 'தோன்றியது எப்படி?' என்ற நுாலிலிருந்து: ஆங்கில ஆண்டுக்குரிய மாதங்களின் பெயர்கள், எப்படி ஏற்பட்டது தெரியுமா?* ஜனவரி: ஜேனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால், இந்த மாதம் அமைந்தது* பிப்ரவரி: ரோமானியர்கள், இந்த மாதத்தின், 15ம் நாளை, புனிதமாக கருதி, பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு, துாய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதை குறிக்கும் வகையில், பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே, பிப்ரவரி என, மாறியது* மார்ச்: ரோமானிய காலண்டர் முறைப்படி, மார்ச் மாதம் தான் ஆண்டின் முதல் மாதமாக இருந்தது. ரோமானிய போர்க் கடவுள், மார்ஸ் என்ற பெயரில் இருந்து, மார்ச் வந்தது* ஏப்ரல்: ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு, திறந்து விடு என, பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழி பிறக்கும் மாதம் என்பதால், இந்த சொல்லிலிருந்து, ஏப்ரல் மாதம் தோன்றியது* மே: உலகத்தை சுமக்கும் அட்லஸ் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இவரது மகள் மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதமே மே* ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை, இளமையின் சின்னமாக வழிபட்டனர், ரோமானியர்கள். இந்த பெயரால் வந்தது தான், ஜூன்* ஜூலை: ஆரம்ப காலத்தில், இது, ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். இந்த பெயரை மாற்றி, ஜூலியஸ் சீசரின் பெயரால், ஜூலி என்று பெயர் சூட்டினார், மார்க் ஆண்டனி. 19ம் நுாற்றாண்டு முதல், ஜூலை என்றானது* ஆகஸ்ட்: ஆரம்பத்தில், இது, ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்று, கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜூலியஸ் சீசர், இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு, ரோமானியர்கள் தங்கள் மன்னரான, அகஸ்டசை பெருமைப்படுத்தும் விதத்தில், அகஸ்டஸ் என பெயரிட்டனர். அதுவே, ஆகஸ்ட் என, மாறியது* செப்டம்பர்: மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில், செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில், செப்டம் என்றனர். ஆனால், புதிய அமைப்பின்படி, ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழைய பெயரே நிலைத்து விட்டது* அக்டோபர்: அக்டோ என்றால், எட்டு. ஆரம்பத்தில், எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப்படாமல், 10வது மாதமாகி விட்டது* நவம்பர்: நவம் என்றால், ஒன்பது. ஆரம்பத்தில், ஒன்பதாம் மாதமாக இதை கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும், பெயர் மாற்றம் செய்யப்படவில்லை* டிசம்பர்: டிசம் என்றால், பத்து. 10ம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.செ.ஜெயக்கொடி எழுதிய, 'சின்னச் சின்ன செய்திகள் சிறகடிக்கும் செய்திகள்' நுாலிலிருந்து:தி.மு.க., கூட்டணி, 1967ல், பொது தேர்தலில் வெற்றி பெற்றது. அண்ணாதுரையால் அமைச்சரவை அமைக்கப்பட்டு நடைபெற்று வந்தது. மூன்று மாதத்திற்கு பின், தி.மு.க., கூட்டணியிலிருந்த, ராஜாஜியிடம், 'ஆட்சி பற்றி தங்கள் கருத்து என்ன...' என, கேள்வி எழுப்பினர், நிருபர்கள். 'தி.மு.க.,வுடனான, 'தேன் நிலவு' முடிந்து விட்டது...' என்றார், ராஜாஜி.முதல்வர் அண்ணாதுரையிடம், 'தேன் நிலவு முடிந்து விட்டதாக, ராஜாஜி சொல்லியிருக்கிறாரே... அதுபற்றி, உங்கள் பதில் என்ன...' என்று கேட்டனர், நிருபர்கள்.'ஆம்... அவரின், 'தேன் நிலவு' முடிந்து விட்டது. இனிமேல், மண வாழ்க்கை ஆரம்பிக்க இருக்கிறோம்...' என, இலக்கிய நயத்துடன் பதிலளித்தார், அண்ணாதுரை.நடுத்தெரு நாராயணன்