உள்ளூர் செய்திகள்

திண்ணை!

மணியாச்சி ரயில் நிலையத்தில், திருநெல்வேலி கலெக்டர் ஆஷ் துரையை, வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று விட்டு, தன்னையும் சுட்டுக் கொண்டு மரணமடைந்தார். போலீஸ் புலன் விசாரணையில், ஒட்டப் பிடாரத்தைச் சேர்ந்த மாடசாமிப் பிள்ளை என்பவருக்கும், இந்த கொலை சதியில் பங்கு உண்டென்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்ய, போலீஸ் படை புறப்பட்டது.அன்று, அந்த ஊர் உலகம்மன் கோவில் திருவிழா. அம்மன் வீதி உலா வரும் போது, பொய்க்கால் குதிரையாட்டம், மயிலாட்டம், புலி ஆட்டம் என்றெல்லாம் முன்னால் ஆடிக் கொண்டு போவது வழக்கம். ஆண்டு தோறும் மாடசாமிப் பிள்ளையும், ஏதேனும் வேஷம் போட்டு ஆடுவார். இதை காண, பெருந்திரளாக மக்கள் கூடுவர். அன்றைய திருவிழாவில், மாடசாமிப் பிள்ளை புலியாட் டம் ஆடப் போகும் தகவல் தெரிந்து, போலீசார் அவரைக் கைது செய்ய, கூட்டத்தோடு கூட்டமாக, மாறு வேடத்தில் நின்றனர்.புலி வந்து விட்டது. சங்கிலியால் பிணைத்து, அந்த புலியை சிலர் இழுத்து வந்தனர். புலி உறுமிக் கொண்டே, பம்மிப் பதுங் கிப் பாய்ச்சல் காட்டி, இங்கும், அங்கும் குதித்து ஆட்டம் காட்டியது. கூட்டத்தினருக்கு ஒரே உற்சாகம். மாறுவேடப் போலீசார், 'புலி' தப்பிச் செல்ல முடியாதபடி, சுற்றி வளைத்துக் கொண்டனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் துரைசாமி, 'புலி'யின் கைகளைப் பற்றி பிடித்துக் கொண்டு, 'மாடசாமி... உன்னைக் கைது செய்திருக்கிறேன்...' என்றார்.புலி தப்பியோட முயற்சித்தது. போராட்டத்தில், புலியின் முகமூடி, போலீஸ் அதிகாரி கையோடு வந்து விட்டது. பார்த்தால்... அது மாடசாமி அல்ல; வேறொருவர்.போலீஸ் வரப்போகும் செய்தி அறிந்த மாடசாமி, தனக்குப் பதில், தன் நண்பர் ஒருவருக்குப் புலி வேஷம் போட்டு அனுப்பி விட்டு, அவர் தலைமறைவாகி, புதுச்சேரிக்கு தப்பி ஓடிவிட்டார்.ஆஷ் கொலை வழக்கு குற்றவாளிகள் பட்டியலில், வாஞ்சிநாதன், செங்கோட்டை தர்மராஜ ஐயர், புனலூர் வெங்கடேசுவர ஐயர், ஒட்டப்பிடாரம் மாடசாமி ஆகியோரை, கோர்ட்டில் ஆஜர்படுத்த முடியவில்லை.இதற்கு காரணம், முதல் மூவர் தற்கொலை செய்து கொண்டனர். வாஞ்சிநாதன், தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். செங்கோட்டை தர்மராஜ ஐயர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். புனலூர் வெங்கேடசுவர ஐயர், அரிவாளால், தன் கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்தார்.மாடசாமி தப்பித்து, புதுச்சேரி வந்தடைந்தார். வ.வே.சு., ஐயர், பாரதியார் ஆகியோருடன் இருந்த பாரதிதாசன், மாடசாமியை இரவோடு இரவாக, ஒரு கட்டுமரத்தில் ஏற்றி, கடலில், தூரத்தில் நின்று கொண்டிருந்த கப்பலில் ஏற்றி, இந்தோனேஷியாவுக்குத் தப்பிப் போகச் செய்தார். பின், அங்கிருந்து இலங்கைக்குச் சென்று, வாழ்ந்தார் மாடசாமி என்று தெரிகிறது. அவரது இறுதிக்காலம் பற்றிய தகவல் தெரியவில்லை.பாரதிதாசனிடம், 'நீங்கள், உங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதலாமே?' என்று யாராவது கேட்டால், அவர் சற்று நேரம் மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மெல்லிய குரலில், 'வேண்டாமய்யா... அந்த மாடசாமி, இன்னும் உயிரோடு இருந்தாலும் இருப்பான்...' என்பார். தன் வாழ்க்கை வரலாற்றை எழுதப் புகுந்தால், சில விஷயங்களை வெளிப் படுத்த அல்லது மறைக்க வேண்டிய சங்கடம் ஏற்படும் என்பதால், தன் சுயசரிதையை எழுதாமலே இருந்து விட்டார் பாரதிதாசன்.— 'புரட்சி கவிஞர் நினைவுகள்' நூலிலிருந்து...***பாண்டிய நெடுஞ் செழியனின் மனைவி காலில் இருந்த சிலம்பில், முத்துப் பரல்களும், வணிகனின் மனைவி கண்ணகியின் காற்சிலம்பில், மாணிக்கப் பரல்களும் இருந்ததென்று கூறுகிறது சிலப்பதிகாரம். அப்படியானால், கோவலனை விட, பாண்டியன் அந்தஸ்தில் குறைந்தவனா?அந்த காலத்தில் தமிழகத்தில், மாணிக்கமும், வைரமும், இறக்குமதி பொருட்கள்; அவை, அன்னிய நாட்டி லிருந்து வருபவை. அதை கோவலனின் மனைவி, விலை கொடுத்து வாங்கி அணியலாம்; ஆனால், தேச பக்தி நிரம்பிய பாண்டிய நெஞ்செழியன், தன் சொந்த நாட்டில் கிடைக்கும் முத்துக்களை தான், தன் மனைவியின் காற்சிலம்பில் வைத்தான். மன்னனே விதேசிப் பொருட்களை உபயோகிக்கலாகாது என்று தான், இளங்கோ அப்படி காட்டியிருக்கிறார்.— ம.பொ.சி.,- நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !