திண்ணை!
ஆங்கிலேயர்களின் நிறவெறித் திமிர், உலகம் அறிந்ததே. பொது இடங்களில், வெள்ளையர்களுக்கு தனி இடம்; மற்றவர்களுக்குத் தனி இடம். குற்றால அருவியில் குளிப்பதில், யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், அந்த அருவியில் ஆங்கிலேயர்கள் குளிக்கும் போது, இந்த நாட்டினர் எவரும், அந்த பக்கமே செல்லக் கூடாது என, ஒரு அதிசய சட்டம் போட்டனர், வெள்ளைக்காரர்கள் ஆட்சிக் காலத்தில்!வெள்ளைக்காரர்கள் எப்போது குளிக்க வருவர் என்று தெரியாததால், மற்றவர்கள், அருவியை எட்ட இருந்து பார்ப்பதோடு சரி... குளிக்கச் செல்ல அஞ்சுவர்.அருவி அருகே கோவில் கொண்டுள்ள குற்றால நாதருக்கு, அபிஷேகத்திற்காக, அருவி நீர் எடுக்கவும் முடியாத நிலை. இதனால், கோவில் நிர்வாகம், திருநெல்வேலி கோர்ட்டில் வழக்கு தொடுத்தது. ஆங்கிலேயர் குளிக்கும் போது, அவர்களுக்கு இடையூறின்றி நீர் எடுக்கலாம் என அனுமதியளித்து, தீர்ப்பு கூறியது.இது என்னய்யா விளக்கெண்ணெய் தீர்ப்பு என எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், மேல்முறையீடு செய்தனர். 'அருவி பொதுவானது; குறிப்பிட்ட இரண்டு மணி நேரமே ஆங்கிலேயர், அங்கு குளிக்கலாம்...' என தீர்ப்பளித்தது. அந்த இரண்டு மணி நேரம் தான், கோவிலுக்கு நீர் எடுக்க வேண்டிய நேரம்.ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, 1915ல், பிரிவியூ கவுன்சிலில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இரண்டு ஆண்டு வழக்கு முடிவில், 1917 முதல், 'அருவியில் யார், எப்போது வேண்டுமானாலும் குளிக்கலாம்; ஆனால், அரிஜனங்கள் அங்கு சென்று குளிக்க அனுமதியில்லை...' என்று தீர்ப்பாயிற்று.சென்னை மாகாண முதல்வராக, ராஜாஜி பதவி வகித்த காலத்தில், இந்த அருவியில் அரிஜனங்கள் குளிக்கக் கூடாது என்றிருந்த தடையை நீக்கினார்.***பொன்னுசாமிப் பிள்ளை நாடகக் கம்பெனியில், எம்.ஆர்.ராதா வேலை பார்த்தார். சிவாஜி கணேசன், டி.எஸ்.பாலையா, டி.ஆர்.மகாலிங்கம் எல்லாரும், பொன்னுசாமியிடம் நடிப்பு பயின்றவர்கள் . சென்னை ஒற்றை வாடை தியேட்டரில், கோவலன் நாடகம் நடந்தது. அதில், பாண்டிய மன்னன் தர்பாரில், சேவகனாக நின்றார் ராதா. வஞ்சிப் பத்தனாக, என்னுடைய ஆசிரியர் பி.டி.சம்பந்தம் நடிப்பது வழக்கம்.தர்பாருக்கு வந்தவுடன், 'அடேய், சேவகா... நான் வந்திருப்பதாக அரசனிடம் சொல்!' என்று, சொன்னார் பி.டி.சம்பந்தம். உடனே, 'ஏண்டா, ஆசாரி... உனக்கு என்ன திமிரா? மரியாதையாகப் பேசு!' என்றார் ராதா; ஒரே கரகோஷம். நாடகம் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், (ஆசாரி இனத்தைச் சேர்ந்தவர்!) ராதாவைக் கோபமாகத் திட்டினார்; ராதாவும், பதிலுக்கு ஏதோ மேடையிலிருந்தபடியே திட்டினார். பிறகு, நாங்கள் சென்று, குழப்பத்தை அடக்கினோம்.ராமதாஸ் நாடகத்தில், பஜனை கோஷ்டியில் ஒருவராக வருவார் ராதா. ராமர் பூஜையெல்லாம் முடிந்தவுடன், வாத்தியார் வேடம் போட்டிருப் பவர், 'வாத்தியாருக்கு தேங்காய், பழம், வெத்தலை, பாக்கு, தட்சணை சமர்ப்ப யாமி...' என்று சொல்வது வழக்கம்.உடனே பக்கத்திலிருக்கும் நடிகரிடம், 'இவர் யாருக்கு வாத்தியார்... சாமிக்கா?' என்று குறும்பாகக் கேட்டார் ராதா. எனக்கு தெரிந்த வரையில், சீர்திருத்தக் கருத்துக்களை அவர் நாடகத்தில் சொல்வது, எந்த கட்சியையும் பின்பற்றியோ அல்லது அவர்கள் சொல்லிக் கொடுத்தோ அல்ல. அது, அவரின் இளம் வயதிலேயே உடன் பிறந்த பேச்சுக்கள்!— பொன்னுசாமிப் பிள்ளை எழுதிய, 'என் மாணவன் எம்.ஆர்.ராதா...' என்ற கட்டுரையிலிருந்து...'மேன் ஆப் டெஸ்டினி' என்று, ஒரு நாடகம் எழுதியிருக்கிறார் பெர்னாட் ஷா; அது, நெப்போலியனை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகம். அதில், ராணுவத் தளபதியாக இருக்கிறான் நெப்போலியன். ஒரு சாதாரணப் போர் வீரன், அவனிடம் வந்து ஓர் ஆலோசனை சொல்கிறான். உடனே, தளபதி நெப்போலியன், 'நீ எதை செய்தாலும், அது தவறாகவே இருக்கிறது...' என்கிறான். உடனே அந்த போர் வீரன், 'என்னை தளபதியாக்கி விடுங்கள். நான் சொல்வதெல்லாம் சரியாகி விடும்...' என்கிறான்.இந்த உரையாடலில், அருமையான வாழ்க்கை யதார்த்தத்தை உணர்த்தியிருக்கிறார் பெர்னாட் ஷா. ஒருவர் சொல்வது சரியா, தவறா என்பதை, விஷயத்தின் அடிப்படையில் முடிவு செய்வதை விட, அவர் இருக்கும் இடத்தை வைத்தே பெரும்பாலும் முடிவு செய்யப்படுகிறது என்பது தான் உண்மை.தவிர, ஒரு பெரிய இடத்தில் அமர்ந்திருப்பவர் எதைச் சொன்னாலும், நம்பிக்கையுடன் சொல்கிறார். நம்பிக்கையின் விளைவாகத் தான் அந்த இடத்தையே அவர் அடைந்திருக்கிறார். அதனால், அவரால் நம்பிக்கையுடன் எதையும் சொல்ல முடிகிறது. உங்களை, நீங்கள் மதிக்காமல், இந்த நம்பிக்கை உங்களுக்கு வராது. தங்கள் திறமையை உணர்பவர்கள், அதை மதிப்பவர்கள் மட்டுமே, வாழ்க்கையில் உயர்கின்றனர்.—'உறுதி இருந்தால் உலகை வெல்லலாம்...' பி.சி.கணேசன் எழுதிய நூலிலிருந்து...- நடுத்தெரு நாராயணன்