உள்ளூர் செய்திகள்

திண்ணை

ஜி.ஆளவந்தார் எழுதிய, 'மாவீரன் திப்பு சுல்தான்' நுாலிலிருந்து: மார்ச், 17௦7ல் காலமானார், பேரரசர் அவுரங்கசீப். சக்கரவர்த்தி இறந்தவுடன், பேரரசு சின்னாபின்னமாயிற்று. அவுரங்கசீப்புக்கு மூன்று மகன்கள். மூத்தவர், தன் இரு தம்பிகளையும் கொன்று, பகதுார்ஷா என்ற பெயருடன் முடி சூட்டிக் கொண்டார். இவர், ஐந்து ஆண்டுக்குப் பின், 1712ல் காலமானார். இவருடைய நான்கு மகன்களுக்கு இடையே, அரச பதவிக்கு போட்டி.மூத்தவன் ஜகந்தர்ஷா, தன் மூன்று தம்பிகளையும் கொன்று, அரசனானான். இவனுடைய ஆட்சி ஒரு சில மாதங்களே நீடித்தது. அவனால் கொலை செய்யப்பட்ட ஒரு தம்பியின் மகன், பரூக் என்பவன், ஜகந்தர்ஷாவை சிம்மாசனத்திலிருந்து இறக்கி, செருப்பு காலால் உதைத்தே கொன்றான்.கடந்த, 1713ல் அரசனான பரூக், ஆறு ஆண்டுகள் தான் பதவியில் நீடித்தான். இவனை பதவியிலிருந்து இறக்கினர், சையத் சகோதரர்கள்.அரச சபையில் சிற்றரசர்கள் முன்னிலையிலேயே ஒருவன், பரூக்கை, மயிலாசனத்திலிருந்து தள்ளினான். பரூக் மார்பின் மீது உட்கார்ந்து, அவன் கண்ணைத் தோண்டி எடுத்து, தரதரவென்று இழுத்துச் சென்று, கேவலமான முறையில் கொன்றான்.இதன்பின், பகதுார்ஷாவின் இரண்டு பேரன்களை, ஒருவர் பின் ஒருவராக சிம்மாசனத்தில் பொம்மைகளை போல் அமர்த்தினர், சையத் சகோதரர்கள். ஒரு சில மாதங்களுக்குத் தான் இக்கூத்து. இரு அப்பாவி மன்னர்களும், அடுத்தடுத்து கொல்லப்பட்டனர்.பகதுார்ஷாவின் மற்றொரு பேரன் முகம்மது ஷா, 1719ல், அரியாசனம் ஏறினான். இவன், சதித் திட்டம் தீட்டி, சையத் சகோதரர்கள் இருவரையும் கொன்றான்.இத்தோடு, முகலாயர் வம்சம் அழிந்தது. பாரசீக மன்னன் படையெடுத்து வந்து, கொள்ளையடித்துச் சென்றான். அவன் போன கையோடு, கிழக்கிந்திய கம்பெனியார், இங்கிலாந்திலிருந்து வந்து, இந்தியாவைப் பிடித்துக் கொண்டனர்.சென்னை மாநகரின் மீது, எப்போதும் ஒரு கண் வைத்திருந்தனர், புதுச்சேரியை ஆண்ட, பிரெஞ்சுக்காரர்கள். டூப்லேக்சின் ஆட்சி காலத்தில், மாஹே தெ லா பெர்தொன்னே என்ற தளபதியின் தலைமையில், செப்., 15, 1746ல், படை ஒன்று, சென்னையை நோக்கி புறப்பட்டது.பிரெஞ்சு படையை எதிர்க்க முயன்ற, பிரிட்டிஷ் படையினர், தோல்வியுற்று பின்வாங்கினர். சென்னை, கவர்னர் மாளிகையை கைப்பற்றியது, பிரெஞ்சு படை. மாளிகையின் அரண்மனையை பலப்படுத்திய பின், செப்., 18ம் தேதி, மீண்டும் அங்கிருந்து தாக்குதலை தொடர்ந்தனர்.செப்., 21 அன்று, செயின்ட் ஜார்ஜ் கோட்டையும், சென்னை நகரமும், புதுச்சேரி வசமாகியது.'இன்டர்போல்' என்பது, சர்வதேச புலனாய்வு காவல் துறையை குறிக்கும் சொல். 'இன்டர்நேஷனல் போலீஸ்' என்பதன் சுருக்கம் இது. இந்த அமைப்பில், 300க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு கொண்டுள்ளன.ஒரு நாட்டு குற்றவாளி, இன்னொரு நாட்டுக்கு தப்பி ஓடி விட்டாலும், அவனை கைது செய்து, உரிய நாட்டிடம் ஒப்படைக்கும், காவல் துறை. இதன் மூலம், ஒரு நாடு, இன்னொரு நாட்டிற்கு பரஸ்பர உதவி செய்து கொள்ள முடிகிறது.ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர், பாரீசில் உள்ளது, 'இன்டர்போல்' அமைப்பின் தலைமையகம். சட்டப்படி, ஒரு நாட்டு போலீஸ், இன்னொரு நாட்டுக்குள் நுழைய முடியாது. எனவே, இந்த, 'இன்டர்போல்' அமைப்பு, பொது போலீசாக இருந்து கடமையாற்றுகிறது.ஆஸ்திரிய நாட்டு காவல் துறை தலைவர், ஜோஹான் ஸ்கோபர் என்பவர், 1923ல், பல நாட்டு காவல்துறை அதிகாரிகளை கலந்து பேசி, 'இன்டர்போல்' அமைப்பை உருவாக்கினார். 193௯ல், இரண்டாம் உலகப் போர் துவங்கியபோது, 'இன்டர்போல்' செயலிழந்தது. போர் முடிவடைந்ததும், மீண்டும், 'இன்டர்போல்' துவங்கப்பட்டது.நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !