திண்ணை!
ஜன., 12 விவேகானந்தர் பிறந்த தினம்!ஆர்.பிரசன்னா எழுதிய, 'பிரபலங்கள் 10, சுவையான சம்பவங்கள் 100' நுாலிலிருந்து: இங்கிலாந்தில் இருந்தபோது, ஒரு பண்ணையை பார்க்கச் சென்றிருந்தார், விவேகானந்தர். அப்போது, அங்கிருந்த ஒரு காளை, கட்டை அவிழ்த்து ஆவேசமாக ஓடி வந்தது. அனைவரும் தலைதெறிக்க ஓடினர். ஆனால், விவேகானந்தர் மட்டும் அசையாமல் நின்று, காளையையே பார்த்துக் கொண்டிருந்தார். அந்த காளை அவருக்கு பக்கத்தில் வந்து சிறிது நேரம் அவரை ஏறிட்டு பார்த்து விட்டு, திரும்பி போய் விட்டது. பின்னர், அங்கிருந்த பணியாளர்கள் விவேகானந்தரிடம், 'சுவாமி, எந்த தைரியத்தில் அசையாமல் நின்று கொண்டிருந்தீர்கள்...' என்று கேட்டனர்.'அந்த காளை என்னைத் துாக்கி எறிந்தால் நான் எவ்வளவு உயரம் மேலே போயிருப்பேன் என்று கணக்கிட்டுக் கொண்டிருந்தேன்...' என்றாராம், விவேகானந்தர்.மன்னர் ஒருவர், விவேகானந்தரிடம், 'உருவ வழிபாட்டில் எனக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை...' என்று கூறினார். உடனே, அரண்மனையில் வைக்கப்பட்டிருந்த மன்னரது படத்தின் மீது கரியை பூசினார், விவேகானந்தர்.அதிர்ச்சியடைந்த மன்னர், 'சுவாமி, என்ன இது அநாகரிகமான செயலில் ஈடுபடுகிறீர்களே...' என்று கத்த ஆரம்பித்தார். உடனே, 'இது வெறும் காகிதத்தில் மையின் உதவியுடன் ஆன உருவப்படம் தானே... இதில், கரி பூசினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது...' என்று கேட்டார், விவேகானந்தர்.சுவாமிஜியின் இந்த கேள்வி, மன்னரை சிந்திக்க வைத்தது. இது போலதான், இறைவனின் திருவுருவங்கள் கல்லால் வடிக்கப்பட்டிருந்தாலும், அதில் இறைவனை காண்கின்றனர், பக்தர்கள் என்பதை உணர்ந்து, விவேகானந்தரிடம் மன்னிப்பு கேட்டார், மன்னர்.ஸ்ரீசித்பவானந்த சுவாமிகள் இயற்றிய, 1936ல் வந்த, 'ஸ்ரீவிவேகானந்த சரிதம்' நுாலிலிருந்து: சகலகலா வல்லவராக திகழ்ந்தார், விவேகானந்தர். பள்ளி, கல்லுாரி நாட்களில் அவரை, நரேன், நரேந்திரன் என்று அழைத்தனர்.இளமை காலத்தில், நாடகத்தில் நடிப்பதிலும், சங்கீத ஞானத்திலேயும், மேன்மை பெற்றிருந்தார், நரேன். இரண்டு சங்கீத வித்வான்களின் உதவியோடு வீணை, மிருதங்கம் வாசிக்க பயிற்சி பெற்றிருந்தார்.கல்லுாரி நாட்களில் தேகப் பயிற்சி மற்றும் கால் பந்து விளையாட்டுகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தது போலவே, சிலம்பக் கலை வித்தையிலும் சிறந்த வீரராக திகழ்ந்தார். ஒருசமயம், சிலம்பப் பந்தயத்தில் கலந்து கொண்டார், நரேந்திரன். வயது முதிர்ந்த, வித்தையில் வல்லவரானவரை எதிர்த்து சிலம்பு சண்டை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.வீரமும், விவேகமும் ததும்பும் இளைஞர் நரேந்திரனின் சிலம்ப வீச்சு, பலமாக இருந்தது. சிலம்ப வித்தையில் பேர் பெற்ற அம்மல்லனுடன் நெடுநேரம் எதிர்த்து நின்றதும் இல்லாமல், எதிரியின் சிலம்புத் தடி உடைந்து சின்னாபின்னமாக விழ செய்ததை பார்த்து திரண்டு நின்றவர்கள், பாராட்டி மகிழ்ந்தனர்.யோக சாஸ்திரம் கூறும் கலைகள், சமஸ்கிருத காவியங்கள், சூத்திரங்கள், சுலோகங்கள் போலவே ஷேக்ஸ்பியர், மில்டன் முதலிய ஆங்கில நாடகங்களும், காவியங்களும் நரேனுக்கு மனப்பாடமாக இருந்தன.நடுத்தெரு நாராயணன்