உள்ளூர் செய்திகள்

திண்ணை!

கோவையில், 'யுனைடெட் மோட்டார் சர்வீஸ்' என்ற பெயரில், பஸ் சர்வீஸ் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார், மேதை ஜி.டி.நாயுடு. பல்வேறு வழித்தடங்களில் நுாற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கிக் கொண்டிருந்தன.ஒருநாள், நாயுடுவை தேடி வந்து, ஏதேனும் வேலை தருமாறு கேட்டான், இளைஞன் ஒருவன். 'உனக்கு என்ன வேலை தெரியும்...' என்றார்.'தாங்கள் எந்த வேலை கொடுத்தாலும் அதை சரியாக செய்கிறேன்...' என்றான்.யோசித்த நாயுடு, அவனுக்கு ஒரு வினோதமான வேலையை கொடுத்தார்.தன் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்துகளில் பயணம் செய்ய அவருக்கு பாஸ் வழங்கப்பட்டது. தினமும் காலை அந்த இளைஞன் ஏதேனும் ஒரு பேருந்தில் ஏறி பயணம் செய்ய வேண்டும். அடுத்த ஊரில் இறங்கி அந்த நிறுவனத்திற்கு சொந்தமான மற்றொரு பேருந்தில் பயணிக்க வேண்டும். காலை முதல் மாலை வரை அவன் இப்படியே ஒவ்வொரு பேருந்தாக ஏறி, இறங்க வேண்டும். ஆனால், நடத்துனருடனோ, ஓட்டுனருடனோ எதுவும் பேசக் கூடாது. தினமும் இரவு, 8:00 மணிக்கு தன் முதலாளி நாயுடுவை சந்தித்து அன்று முழுவதும் எந்தெந்த பேருந்தில் பயணித்து எந்தெந்த ஊருக்கு சென்றான் என்ற விபரத்தை மட்டும் அவரிடம் கூற வேண்டும். நாயுடுவும் அவனிடம் ஏதும் பேச மாட்டார்.இதனால், நிறுவனத்திற்கு நன்மை நடந்தது. இதன் பின்னர் தினமும் அந்த பஸ் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துக் கொண்டே சென்றது. பேருந்துகளின் நடத்துனரும், ஓட்டுனரும் அந்த இளைஞனை, 'செக்கிங் இன்ஸ்பெக்டர்' என்று, தாங்களாகவே நினைத்துக் கொண்டனர். இதனால், வழியில் நிற்கும் பயணியரை விடாமல் ஏற்றத் துவங்கினர். அந்த இளைஞன் தினமும் தவறாமல் முதலாளியை சந்திப்பதையும் அவர்கள் அறிந்தனர். தங்களை பற்றி ஏதேனும் புகார் கூறினால் வேலை பறிபோய் விடும் என்பதை நினைத்து அவர்கள் பயந்ததன் விளைவே, அதிக வருமானத்திற்கு வழி தேடித் தந்தது.முழுமையான படம் என்று சொல்லக் கூடிய அளவில், முதன் முதலாக தயாரான படம், அரிச்சந்திரா. அகில இந்திய அளவிலும், தென்னக மொழிகளிலும் அதிக முறை படமாக்கப்பட்ட கதை, அரிச்சந்திரா.மவுனப்பட அளவிலும், பேசும் படங்களாகவும், மொழி மாற்று முறையிலும், பல ரூபங்களில், அரிச்சந்திரா வெளி வந்துள்ளது. இதே மாதிரி அதிக முறை அனைத்திந்திய மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட கதை, பக்த பிரகலாதா.இவை அனைத்தையும் விட, அதிக அளவில் அனைத்திந்திய மொழிகளில், 40 முறை படமாக்கப்பட்ட கதை, ராமாயணம். சீதா கல்யாணம் மட்டும் அனைத்திந்திய மொழிகளில், 10 முறை படமாக்கப்பட்டன.தினம் தினம் எதையாவது புதிது புதிதாக கண்டுபிடித்துக் கொண்டிருந்த அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன், தன் தொழிற்சாலையில் பெரிய கடிகாரம் ஒன்றை நிறுவினார். தொழிலாளர்கள் அனைவரும் வேலை நேரத்தில் அந்த கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தனர். இதனால், அவர்களுடைய வேலை திறன் குறைந்தது.இதை அறிந்த எடிசன், உடனே ஒரு தந்திரம் செய்தார். அந்த தொழிற்சாலையில் பல இடங்களில், பல கடிகாரங்களை பொருத்தினார். ஆனால், ஒவ்வொரு கடிகாரத்தையும் வெவ்வேறு மணியை காண்பிக்கும்படி செய்தார். இதனால், குழப்பமடைந்த தொழிலாளர்கள், மணி பார்க்கும் வழக்கத்தை விட்டு விட்டனர். அவர்களுடைய வேலை திறனும் அதிகரித்தது. நடுத்தெரு நாராயணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !