திண்ணை!
இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், 'தசாவதாரம்' என்றொரு படம் எடுத்தார். அதில், எம்.ஆர்.ராதாவுக்கு, இரணியன் வேஷம்.இரணியன், அசுரன் என்பதால், ராதாவுக்கு பயங்கரமான பெரிய மீசை வைத்து, மேக்-அப் போடச் சொல்லி, கிரீடம், கவசம் எல்லாம் வைக்கப்பட்டு, ராட்சத தோற்றம் உண்டாக்கி விட் டனர்.கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்த ராதா, 'கூப்பிடுய்யா டைரக்டரை...' என்று கத்தினார்.கே.எஸ்.ஜி., வந்தார். அவரிடம் ராதா, 'நான் அசுரன்கிறதாலே இப்படி பயங்கர மீசை வைச்சுட்டீங்க; சரி... என் மனைவியா நடிக்கிற சவுகார் ஜானகியை மட்டும் அழகா காட்டறீங்களே... அசுரன் பெண்டாட்டி எப்படி இருக்கணும்? கோரமா, இரண்டு பல்லு வெளியே துருத்திக்கிட்டு இருக்க, தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு தானே நிக்கணும்?' என்று கேட்டார்.குழம்பினார் கே.எஸ்.ஜி.,ராதா அவரிடம், 'நான் இப்படிப் பயங்கர உருவத்தோட இருந்தால், கதையிலே என் பெண்டாட்டி, என் மேலே பிரியமா இருப்பாளா? இருக்க மாட்டாள். அதனாலே, இந்த மேக்-அப் தப்பு. லால் பகதூர் சாஸ்திரி, நாலரை அடி உயரம் தான் இருக்கிறார். ஆனால், பிரதமரா, எவ்வளவு பெரிய அதிகாரத்திலே இருக்கார். அதை போல நானும், கதையிலே சாதாரண உருவத்தோட இருக்கேன். நான் செய்ற காரியங்கள் தான் அசுரத்தனமா இருக்கணும்...' என்றார்.கே.எஸ்.ஜி.,க்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ராதா, 'எனக்கு வில்லன் கெட்-அப் வரணும்ன்னா ஒண்ணு செய்யுங்க... படத்துல என் ஏவல் ஆட்களா ஆஜானுபாகுவா ரெண்டொரு நடிகர்களைப் போடுங்க...' என்றார்.அப்படியே செய்தார் கே.எஸ்.ஜி., ராதா, பெரிய மீசையைப் பிடுங்கி எறிந்து விட்டார். கே.எஸ்.ஜி., தான், வசனம் எழுதுவதில், பெரிய புலி ஆயிற்றே. அவர் எழுதிய வசனத்தை படித்த ராதா, மீண்டும், கே.எஸ்.ஜி.,யைக் கூப்பிட்டார்.'படத்திலே நான், 'சிவாய நம' அப்படீன்னு சொன்னா, என் நெத்தியிலே விபூதி பட்டை போட்டுக்கணும்; 'நமோ நாராயணா' அப்படீன்னு சொன்னா, நாமம் போட்டுக்கணும். இரண்டும் இல்லாம, நான், 'இரண்யாய நம' அப்படீன்னு சொல்றதா வசனம் வருது. அப்போ, நான் பட்டை போடறதா, நாமம் போடறதா; இரண்டுமே தவறாச்சே...' என்றார் ராதா.கே.எஸ்.ஜி., தலையைச் சொறிந்தார். 'பட்டை யும் வேணாம், நாமமும் வேணாம்; சந்திரப் பிறை மாதிரி, ஒரு பொட்டு மட்டும் வைச்சுக்குங்க...' என்றார் சலிப்புடன்.அப்படியே பொட்டு வைக்கப்பட்டது. பின்னர், அவர் உடம்பு முழுக்க, நகைகள் அணிவிக்கப் பட்டன. 'என்ன இது... என் உடம்பிலே எதை எதையோ மூட்டை, மூட்டையா கட்டறீங்க?' என்று முணுமுணுத்தார்.ஒத்திகையின் போது ராதா, ஈடுபாடு இல்லாத வராகவே வசனம் பேசி நடித்தார். அதைக் கண்ட கே.எஸ்.ஜி.,க்கு வருத்தம். 'என்ன இவர், இன்ட்ரஸ்ட் டாகவே நடிக்கவில்லை; புராணப் படம் என்பதால், இவருக்கு நடிக்கப் பிடிக்க வில்லையா?' என்று அருகில் இருந்தவர்களிடம் வருத்தப் பட்டார்.பிறகு, 'டேக்' ரெடியானது; கேமரா ஓடத் தொடங்கியது. டைரக்டர் ஆக்ஷன் சொன்னதும், ராதா வசனத்தை பிச்சு உதறினார். கையிலே வாளேந்தி அபாரமாக நடித்தார். சுற்றி நின்றவர்கள் பிரமித்துப் போயினர். 'ஷாட்' முடிந்ததும், கே.எஸ்.ஜி., 'கட்' சொல்லி விட்டு, ஓடி வந்து ராதாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்.'அண்ணே... அசத்திட்டீங்க அண்ணே...' என்று உணர்ச்சி வசப்பட்டு பாராட்டினார்.— நடிகவேள் எம்.ஆர்.ராதா (அனுராகம் வெளியீடு.)நடுத்தெரு நாராயணன்