உள்ளூர் செய்திகள்

வேர்க்கடலை திருவிழா!

சிவாலயங்களில், நுழைவு வாயிலிலும், கருவறை முன்பும் காட்சியளிப்பார், நந்தீஸ்வரர். இவரை, சிவனின் காவலர் என்பர். இவரிடம் அனுமதி பெற்றே கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்பது, விதி. இதனால் தான், பக்தர்கள், நந்தியை வணங்கிய பின், கோவிலுக்குள் செல்வர்.இந்த நந்திக்கு சிறப்பு சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவருக்கு, பெங்களூரு நகரில், தனி கோவில் எழுப்பப்பட்டது.இதை, 'புல் (காளை) டெம்பிள்' என்று ஆங்கிலத்திலும், 'தொட்ட பசவன குடி' என, கன்னடத்திலும் அழைப்பர், பெங்களூரு மக்கள். 'பசவன்' என்றால், காளை. இங்கு, வேர்க்கடலை திருவிழா விசேஷம்.ஒரு காலத்தில் இந்த கோவில் இருந்த பகுதியில், நெல், வேர்க்கடலை பயிர் செய்யப்பட்டது. அறுவடை சமயத்தில், வயல்களுக்கு வரும் ஒரு காளை, பயிர்களை சேதப்படுத்தி விட்டது. ஒருமுறை, அதைப்பிடிக்க விவசாயிகள் ஒன்று கூடினர்.கம்பால் அதன் தலையில் அடித்தார், ஒருவர். மிக ஆச்சரியமாக, அந்தக் காளை சிலையாக மாறி அமர்ந்து விட்டது. நாளுக்கு நாள் அது வளரவே, உலோக சிவலிங்கத்தை அதன் தலையில் வைத்தனர், மக்கள். அத்துடன், அதன் வளர்ச்சி நின்று விட்டது.இந்தக் கோவிலை, 16ம் நுாற்றாண்டின் துவக்கத்தில், சிற்றரசர், கெம்பே கவுடா கட்டினார். கட்டட அமைப்பு, தமிழகக் கோவில்களை ஒத்திருக்கும். ராஜகோபுரம் உள்ளது. குன்றின் மீது அமைந்துள்ள கோவிலுக்கு, படியேறி செல்ல வேண்டும்.ஒரே கல்லால் ஆன, நந்தி, 4.5 மீட்டர் உயரமும், 6.5 அடி நீளமும் உடையது. தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், வெண்ணெய் அபிஷேகம் தினமும் செய்யப்படும். தொல்பொருள் துறை, இந்தக் கோவிலை பராமரிக்கிறது. கோவில் வளாகத்தில் வெண்ணெய் விநாயகர் இருக்கிறார். இவரை, 110 கிலோ வெண்ணெயால் செய்வர். நான்கு ஆண்டுகள் இந்த சிலை வழிபாட்டில் இருக்கும். பிறகு, புதிய சிலை செய்யப்படும்.இதில் விசேஷம் என்னவென்றால், இந்தச் சிலை நான்கு ஆண்டுகளுக்கு உருகவோ, உருமாறவோ செய்யாது. இந்த வெண்ணெய், பக்தர்களுக்கு பிரசாதமாகத் தரப்படும்.இங்கு வேர்க்கடலை திருவிழா, மற்றொரு விசேஷம். கார்த்திகை மாத கடைசி திங்கள் (சோமவாரம்) மற்றும் செவ்வாய் கிழமைகளில், 'கடலைக்காய் பர்ஷிகே' எனப்படும், விழா நடக்கும்.கோவில் இருக்கும் சாலையில், ஒரு லட்சம் விளக்குகள் ஏற்றப்படும். பயிர்களை அழித்த காளைக்கு, அறுவடை செய்த முதல் பயிரைத் தருவதாக விவசாயிகள் வேண்டிக் கொண்டனர். அதன்படி, கோவிலுக்கு கடலையைக் எடுத்து வருவர். இந்த சாலையில், அன்றைய தினம், கடலை விற்பனை அமோகமாக நடக்கும்.பெங்களூரு - பசவன்குடியில் அமைந்துள்ள இந்தக் கோவில், காலை 6:00 முதல், -இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும்.தி. செல்லப்பா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !