கவிதை - மூடிய கைகளுக்குள் மூல மந்திரம் - 1,250 ரூபாய் சன்மானம்!
மூடிய கைகளுக்குள் மூல மந்திரம்
* மனமுடைந்து போகையில் துக்கங்களைப் பகிர துணையில்லையே என துடித்துப் போகலாம்!
* எல்லாருக்குமா உடன்பிறப்புகள் ஓடிவந்து உதவுகின்றனர்?
* பல பேரின் பாதையில் குடும்பத்தின் நிழலே குழி பறிக்கலாம்!
* வறுமை- வழி மறிப்பதும், வசதி வாய்ப்புகள் கதவடைப்பதும் காலங்காலமாய் நிகழ்பவைதானே?
* உறவுகள் நம்பாத போதும், நட்பு பரிகசிக்கும் போதும் பாதுகாக்கத் துணை வருவது எது?
* கலங்குகிற போதெல்லாம் கண்ணுக்குத் தெரியாது - கை கொடுத்துத் தூக்கும் அந்தக் கை யாருடையது?
* நமக்குள் நாற்றாய் இறங்கி நங்கூரமாய் ஆட்டம் தடுக்கிறதே அது எது?
* ஆண்டவன் யாரையும் தனிமரமாய்ப் படைத்துத் தவிக்க வைப்பதில்லை!
* தடைகளை வெல்லும் தகுதியாக, போராடும் உறுதியைத் தான், ஜனிக்கிற குழந்தையின் இறுக மூடிய இரண்டு கைகளுக்குள் துணையாகத் திணித்து வைத்து அனுப்புகிறது வாழ்க்கை! - ஆர்.அம்பிகா, நெல்லை.