பதவி
''என்னய்யா தட்சிணாமூர்த்தி சொல்ற... நீ சொல்ற மாதிரி எல்லாம் நடக்குமாய்யா...'' தன்னுடைய தோளில் கிடந்த துண்டை எடுத்து, வழுக்கை தலையை ஒற்றியபடியே கேட்டார் கே.எம்.,அவர் நம்பாமல் கேட்பதை அறிந்த தட்சிணாமூர்த்தி, தான் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலியை, அவர் பக்கமாய் நெருக்கமாய் இழுத்துப்போட்டு அமர்ந்து,''என்னன்ணே இப்படி கேட்குறீங்க... இந்த உலகம் நாம என்ன சொன்னாலும் நம்பும்ன்ணே... ஒருத்தன் கட்சி விட்டு கட்சி போறது எதுக்கு... தான் இருக்கிற கட்சியில நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது செய்ய முடியலன்னா அந்தக் கட்சியில இருந்து என்ன பிரயோசனம்... கட்சிக்குள்ள என்ன நடக்குதுன்னு சாதாரண மக்களுக்கும் புரியும்ணே,'' குரல் தாழ்த்திச் சொன்னார்.''அப்படியா சொல்ற... ஆனா, பத்து வருஷத்துல இது ஆறாவது முறைய்யா... எனக்கே கூச்சமா இருக்கு,'' என்றார் கே.எம்.,''எதுக்குண்ணே கூச்சப்படறீங்க? ஒரு பிரஸ்மீட் ஏற்பாடு செய்யுங்க; தாய் கட்சிக்கே திரும்பிட்டோம்ன்னு உருக்கமா பேட்டி குடுங்க. அதுக்கு பின்னால ஒரு பய கேள்வி கேட்பானா...''தட்சிணாமூர்த்தி சொன்ன யோசனை சரியாக வருமென்று தோன்றியது. கொஞ்சம் யோசனையாய் தலை அசைத்தார்.அடுத்த நாள், கட்சித்தலைமை அதர்ச்சியுறும் வண்ணம், கே.எம்., என்ற கலியமூர்த்தி, மாவட்ட தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.''கட்சியில ஜனநாயகம் இல்லய்யா. நேர்மையா அரசியல் செய்றவங்களுக்கு நம்பகட்சியில இடமில்ல; பணநாயகம் தான் அங்க தலைவிரிச்சு ஆடுது,'' கழுத்து நரம்பு புடைக்க, 'டிவி'யில் பேசினார்.''சிவகாமி... சாயந்திரம், நம்ப கட்சித்தலைவரோட பேத்தி கல்யாணத்திற்கு போகணும். நீ என்ன செய்ற... நம்ம புது கட்சி கொடியோட கலர்ல பட்டுப்புடவ கட்டிக்க; அப்பத்தான், 'ஹைலைட்'டா இருக்கும்,'' மீசையை முறுக்கியபடி சொன்னார் கே.எம்.,''எந்த கட்சி புடவைங்க? அதுசரி... இப்ப நீங்க எந்தக் கட்சியில இருக்கீங்க? உங்களுக்காவது அது ஞாபகம் இருக்கா?'' கணவனிடம் கோபமாய் கேட்டாள் சிவகாமி. அடுத்த நொடி, 'பொளிச்' என்று கே.எம்.,மின் கைகள் சிவகாமியின் கன்னத்தை பதம் பார்த்தது.''மூதேவி... கட்சித்துண்டை மாத்துற மாதிரி, உனக்கு பின்னாடி மூணுபேரை வீட்டுக்குள்ளே கொண்டாந்திருக்கேன்; அப்புறமும் நீ பயப்படல. பின்னாடி வந்தவங்க ஆயிரம் பேரா இருந்தாலும், முன்னாடி வந்தவ கூட போனாத்தான் சபையில மரியாதைன்னு உன்னை கூட்டிட்டுப் போறேன்... ஒழுங்கு மரியாதையா ரெடியா இரு,'' அவளுடைய பதிலுக்கு காத்திராமல் கே.எம்., எழுந்து போனார். கண்களில் வழிந்த கண்ணீரை துடைக்க திராணியற்று, அப்படியே நின்றாள் சிவகாமி.மனசு பழைய நினைவுகளை அசை போட்டது. பள்ளிக்கூடத் தலைமையாசிரியராய் இருந்த சிவகாமியின் அப்பாவின் நண்பர் வழியாக, பெண் பார்க்க வந்தவர் தான் கலிய மூர்த்தி.'பையன் கவர்மென்ட் ஆபீஸ்ல நல்ல வேலையில இருக்கான்; ரொம்ப சூட்டிகையானவன். தன்னோட திறமையால இதுக்குள்ள மூணு பிரமோஷன் பாத்துட்டான்; நீங்க நம்பி பொண்ண தரலாம்...'அப்பிராணியான சிவகாமியின் அப்பாவிற்கு, மாப்பிள்ளையின் திறமைக்கு மற்றவர்கள் தந்த நற்சான்று, ரொம்பவும் பிடித்தமானதாய் இருந்தது; ரொம்ப சந்தோஷமாகவே மகளை கட்டித் தந்தார்.மூன்று ஆண்டுகள் மிதமாய் ஓடியது. அலுவலகம் வந்த ஒரு அரசியல்வாதியின் மூலமாய், கலியமூர்த்தியின் அரசியல் பிரவேசம் நடந்தது. அதன்பின், இந்த 30 ஆண்டில், அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாய், ஜாதி அரசியல் செய்வதில் எம்டனாய் மாறிப் போனார்.மது, சூது, கபடம், பெண்பித்து என்ற பக்கதுணையான வியாதிகளும் ஒட்டிக்கொண்டது. இயல்பிலேயே வினயகாரரான கலியமூர்த்தி, தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாய் பயன்படுத்தி, கே.எம்., என்று புகழ்பெற்றார்.அவருடைய லட்சியம், ஆசை எல்லாம் எப்போதும் கழுத்தளவு பணமும், தலைக்கு மேல் பதவியும் என்பதாகவே இருந்தது.''என்ன கே.எம்., உங்கள கட்சியோட தேசிய குழுத்தலைவர்கள்ல ஒருத்தரா தலைவர் நியமிச்சிருக்காராமே... இப்பத்தான் பொருளாளர் சொன்னார். நீங்க எத்தன கட்சியில சுத்திட்டு வந்தாலும், தலைவருக்கு உங்கமேல தனிப்பிரியம் தான்,'' கே.எம்.,மின் முதுகை தட்டி வாழ்த்துச் சொன்னார் கட்சி பிரமுகர் ஒருவர்.சுரத்தில்லாமல் மெதுவாய் புன்னகைத்தார் கே.எம்.,''என்னமோய்யா நான் போட்ட கணக்கு வேற, நடந்தது வேற. நம்ம ஜாதிக்காரங்க ஓட்டு கணிசமா நம்ப கையில இருக்கு; அந்த பலத்த காட்டித்தான் நான் கட்சிக்கு திரும்பி வந்தேன். எனக்கு ஜாதியில இருக்கிற செல்வாக்கை பாத்துட்டு, தலைவர் இடைத்தேர்தல்ல சீட் தருவாரு, ஜெயிச்சு காபினெட்டுல போஸ்டிங் வந்துடும்ன்னு பாத்தா... ஏதோ உப்புக்கு பெறாத பதவிய தந்து என்னை உட்கார வச்சிட்டாருய்யா,'' என்றார்.கே.எம்.,மின் புதிய கணக்கு, அந்த நபரை வியப்பில் ஆழ்த்தியது.தலைவரிடம் நடத்திய மறைமுக பேரங்கள் படியாததால், உடனே கட்சியை விட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தார் கே.எம்., இம்முறை தட்சிணாமூர்த்திக்கே தர்மசங்கடமாய் இருந்தது.''என்னண்ணே... இங்கே வந்து இன்னும் மூணுமாசம் கூட ஆகலயே... மக்கள் நம்ப அறிக்கைய மறந்திருக்க கூட மாட்டாங்க; இப்போ என்ன சொல்லப் போறோம்,'' என்றான் குழப்பமாய்.''யோவ்... நீ எதுக்குய்யா அதப்பத்தி கவலைப்படற... இந்த நிமிஷம் நாம சமாதானப்படுத்த வேண்டியது நாட்டுல இருக்குற அஞ்சு கோடி மக்கள இல்லய்யா; நம்ப தொகுதியில இருக்குற நம்ப ஜாதிக்காரன் ஒரு லட்சம் பேரை மட்டும் தான். இப்போ நம்ப கையில இருக்கிற துருப்பு சீட்டே அவங்க தான். நம் தொகுதியில யார் ஜெயிக்கிறதா இருந்தாலும், அவங்க கட்சி ஓட்டோட, நம்ம ஜாதிக்காரங்க ஓட்டும் சேந்தாத்தான் ஜெயிக்க முடியும். அப்படியிருக்கயில என்னோட அந்தப் பவரை நான் ஏன்யா, எவனோ ஜெயிக்கறதுக்கு விட்டுத் தரணும்,'' என்றார்.கே.எம்.,மின் மனசுக்குள் மண்டிக்கிடக்கும் குறுக்கு புத்தியின் கணக்கை நினைத்து, மலைத்தார் தட்சிணாமூர்த்தி.அடுத்த நாள் நாளிதழ்களின் தலைப்பு செய்தியாய் கே.எம்., கட்சியை விட்டு வெளியேறிய செய்தியும், தன்னுடைய ஜாதி மக்களை, கட்சித்தலைவர் கீழ்த்தரமாய் விமர்சித்ததே அதற்கு காரணமென்றும் கே.எம்., தந்த பேட்டி பரபரப்பாய் இடம்பிடித்தன.சலசலப்பும், பரபரப்புமாய் மூன்று நாட்கள், இந்த செய்திகளே தலைப்பு செய்திகளில் இடம் பெற்றன. நான்காம் நாள் முடிவில் மாநிலத்தில் காலூன்ற முடியாமல் தவிக்கும் தேசியக் கட்சியில், தன்னை இணைத்துக் கொண்டதாய் மாலைநேர செய்தி தாள்களின் தலைப்பு செய்தியில், தன்னை நிறைத்துக் கொண்டார் கே.எம்.,''என்னண்ணே... அழுத்தியக்காரன் போய் புழுத்துப்போன காயை வாங்குன மாதிரி, அந்தக் கட்சியிலே சேர்ந்துட்டீங்க... அங்க உள்ளவன் எல்லாம் துண்டை உதறி தோள்ல போட்டுட்டு எப்படா புறப்படுவோம்ன்னு நிக்கறான்; இப்பபோய் நீங்க புதுக்கம்பளி விரிச்சு போர்த்தி படுக்க போறீங்க,'' நக்கலாய் கேட்டான் ஒருவன்.''டேய்... சிங்கமிருக்கிற காட்டுல, சிறுத்தை ராஜாவாக முடியாதுடா; உண்மையிலேயே நாம ஜெயிக்கணும்ன்னா, நம் பலத்தை விட நம்ம எதிரியோட பலவீனம் முழுசா தெரியணும். ஆலை இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ சர்க்கரை. ஏற்கனவே, அம்பது கோஷ்டி இருக்குற கட்சியில சேர்ந்து, எவனை அனுசரிக்கிறதுன்னு தெரியாம அல்லாடுறத விட, இப்படி ஆள் இல்லாத கட்சிக்கு போனாத்தான் நம்பளை பாத்து ஒரு பிரமிப்பு வரும்; தவிர, அது தேசிய கட்சியா இருக்கிறதால ஆட்சிக்கு வந்துட்டாங்கன்னு வை, நமக்கு அமைச்சர் போஸ்ட் கிடைச்சிடும்,'' என்று கூறி, பெருங்குரலெடுத்து, 'இடிஇடி'யென சிரித்தார். கே.எம்., அடிபொடிகள், அவரின் அறிவை எண்ணி அதிசயித்து நின்றனர்.''சதா எந்த நேரமும் பதவி பதவின்னு அலையுறீங்களே... உங்கள நம்பி வந்த என்னை பத்தி ஒரு நிமிஷமாவது யோசிச்சிருக்கீங்களா...'' கண்ணீர் மல்க கேட்கும் மனைவியை, பல்லிடுக்கில் சிக்கிய கறித்துண்டை குண்டூசியால் குத்தியபடியே ஏளனமாய் பார்த்தார் கே.எம்.,''என்னடி... என்ன கேடு உனக்கு இப்போ,'' துளியும் குறையாத போதையோடு கேட்டார்.''உங்களுடைய மனைவிங்கற பதவி, எனக்கு மட்டும் சொந்தமானது; அதை என்னோட அனுமதியில்லாம மூணுபேருக்கு பங்குபோட்டு தந்திருக்கீங்க. அது, எந்த வகையில நியாயம்... கட்சிகளுக்குள்ள தான் கோஷ்டி இருக்கும்; குடும்பத்துல கோஷ்டி அமைச்சு, சதா சண்டை போட்டுட்டு நிக்க முடியுமா? உங்களால என்னுடைய கண்ணியம்ங்கற பதவியே பறிபோயிடுச்சு,'' முந்திச்சேலையில் கண்ணீரை ஒற்றினாள் சிவகாமி.''ஏய்... வாயை மூடுடி. நீயெல்லாம் ஒரு ஆளு... நீ கேட்குற கேள்விக்கு நான் பதில் சொல்லணுமா...'' குடிபோதையில் வாய் குழற அகங்காரமாய் சொன்ன கணவனை வேதனையோடு பார்த்தாள் சிவகாமி.வயதுக்கு ஒவ்வாத குடியும், கொழுப்பு தீனியும் மவுனமாய் செய்த புரட்சியில், இரவோடு இரவாக கே.எம்.,மின் மூச்சு, தன் வேலையை நிறுத்திக் கொண்டது.தொண்டர்களுக்கு தகவல் பறந்தது; நொடிப்பொழுதில் தெருவே பரபரப்பானது.''அண்ணி... அண்ணனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைக்கணும்; அண்ணன் கடைசியா சேர்ந்த கட்சியோட துண்டு போட்ட படம் எதுவும் இருந்தா குடுங்க,'' என்று கேட்டு, மிகுந்த துக்கத்துடன் அருகில் வந்து நின்ற தட்சிணாமூர்த்தியின் கைகளை கவனித்தாள் சிவகாமி.'எங்கள் இதயதெய்வம் அண்ணன் கே.எம்., என்ற கலிய மூர்த்தி, இன்று அதிகாலை 3:00 மணியளவில் சிவலோக பதவி அடைந்தார்...' என்று எழுதப்பட்டு இருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டருக்கான மாதிரியுடன் நின்றிருந்தார்.அவர் கேட்ட போட்டோவை எடுப்பதற்கு உள்ளே நகர்ந்த சிவகாமியின் மனம், இனம்புரியாத வெறுமையில் ததும்பியது. காலம் முழுக்க பதவி பதவி என்று அலைந்து, கட்டிய மனைவியை மரக்கட்டையாய் கூட மதிக்காத மனிதன், இன்றும் கூட, சிவலோக பதவியை எந்த சிரமமும் இன்றி அடைந்துவிட்ட மிதப்புடன் கண்ணாடிப் பெட்டியில், அகங்காரமாய் படுத்திருப்பதாய் தோன்றியது.போட்டோவை கொண்டு வந்து நீட்டியவள், சட்டென்று தட்சிணாமூர்த்தியின் கைகளில் இருந்த காகிதத்தை பறித்து, 'சிவலோக பதவியை அடைந்தார்' என்ற வரியை அடித்து, 'மரணமடைந்தார்' என்று பேனாவில் திருத்தி எழுதினாள்.அவளை நிமிர்ந்து பார்த்த தட்சிணாமூர்த்தி, ''அண்ணி...'' என்றான்.''ஆமாம் தட்சிணம், அவர் எந்தப் பதவியையும் நேர்வழியில அடையல; குறுக்கு வழியில, யாருடைய உணர்வுகள பத்தியும் துளி கூட கவலைப்படாம அடைஞ்ச இந்த பதவிகளால, அவர் யாருக்கும் துளி கூட உபகாரம் செய்யல. அது கட்டின மனைவியா இருந்தாலும் சரி, தன்னுடைய காலையே சுத்தி கிடந்த தொண்டரா இருந்தாலும் சரி, இல்லை தன் சமூகத்தை, இவர் காபந்து செய்வார்ன்னு நம்பின அப்பாவி ஜாதிக்காரங்களுக்கும் அவர் உண்மையா இருந்தது இல்ல. அப்படிப்பட்ட மனுஷன், எப்படி அந்த சிவலோகப் பதவியை அடைவாரு... எந்த தகிடுதித்தத்தாலும், இறைவனை ஏமாத்தி அந்த பதவியை அடைய முடியாதுங்கறத, அவர் மவுனமா கிடக்கும் போதாவது நாம உணர்த்த வேண்டாமா... போகும் போதாவது அவருடைய ஆன்மா எந்த பதவி மோகமும் இல்லாம போகட்டும்; நான் திருத்தியபடியே அடிங்க,'' ஆதங்கத்துடன் சொல்ல, அவள் வார்த்தையை நிறைவேற்ற நடந்தான் தட்சிணாமூர்த்தி; நடையில் கிடந்த பிணத்தை திரும்பிக்கூட பாராமல்!எஸ்.பர்வின் பானு