உள்ளூர் செய்திகள்

மழை; முன்னெச்சரிக்கை நடவடிக்கை!

பெரு வெள்ளம் சூழ்கிறபோது, முதல் வேலையாக, முக்கிய பொருட்களை, உயரமான இடத்தில் வைக்க வேண்டும். இதற்காக எப்போதும், பரண் மற்றும் 'சிலாப்'களில், பாதி இடத்தை காலியாக வைத்திருங்கள்.அவசர காலத்தில், 'டூ - வீலர்' மற்றும் கார்களை, மேடான இடத்தில் நிறுத்தி வைப்பதற்கு, ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து வைத்திருங்கள்.காற்றடித்தால் பெரிதாகும், 'இன்பிளாட்டபிள் போட்' கடைகளில் கிடைக்கிறது. வீட்டில் குழந்தைகளை குளிப்பாட்ட வாங்கும், 'டப்' போன்றது இது. இதையும், காற்றடிக்கும் பம்பையும், வெள்ளம் சூழும் பகுதியில் வசிப்போர் வாங்கி கொள்வது பாதுகாப்பு.மழை காலத்தில், வீட்டில், அவசியம், 'டார்ச் லைட்' இருக்க வேண்டும். சுரங்கத்தில் பணிபுரிபவர்கள் வைத்திருக்கும் நெற்றியில் பொருத்திக் கொள்ளும்படியான, 'டார்ச் லைட்' இருந்தால், இருட்டில் தடுமாறாமல், இரு கைகளிலும், பை மற்றும் குழந்தையை சுமந்து செல்ல வசதியாக இருக்கும்.வெள்ளம் வரும் காலங்களில், வீட்டில் உள்ளோர் தனித்தனியாக சிக்குவதுடன், 'சிக்னல்' கிடைக்காமல், மொபைல் போன் முடங்கி, உங்கள் குடும்பத்தாருடன் தகவல் பரிமாற முடியாமல் போகலாம். அச்சமயத்தில் ஏற்படும் பதற்றத்தை தவிர்க்க, வெளியூரில் உள்ள, பொறுப்பான ஒரு நபரிடம், அனைவரும் தொடர்பு கொள்வதை வழக்கமாக்கி கொள்ளலாம். அவர் மூலம், உங்களுக்கு தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளலாம்.தண்ணீரும், மின்சாரமும் ஒன்றுக்கொன்று, எமன். தண்ணீர் சூழ்ந்த பின், 'ஆப்' செய்ய முயற்சித்தால், 'ஷாக்' அடிக்கும். எனவே, அதற்கு முன், மின் சாதனங்களை 'ஆப்' செய்து விடுவது தான் புத்திசாலித்தனம். பிளாஸ்டிக், மரக்கட்டை உள்ளிட்ட மின்சாரம் கடத்தாத பொருட்களை கையில் பிடித்து, 'ஆப்' செய்யலாம்.மழை காலங்களில், பணம் எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; ஏ.டி.எம்.,மை நம்பி இருக்காதீர்.மழையின் போது, திடீர், 'பவர் கட்' ஏற்பட்டால், மெழுகுவர்த்தி, எண்ணெய், அகல் விளக்கு, 'பேட்டரி'கள் மற்றும் தரமான, 'எமர்ஜென்சி லைட்' கைவசம் இருக்கட்டும். மழை அதிகமாக இருக்கும் சமயத்தில், ரவை, சேமியா, அரிசி நொய் உள்ளிட்டவற்றை வைத்து, உப்புமா மாதிரியான, 'லைட் டிபன்'களை செய்து கொள்ளலாம்.மழை பெய்ய ஆரம்பித்த உடனேயே, மோட்டார் போட்டு, 'டேங்கில்' தண்ணீரை நிரப்புவதுடன், அனைத்து பக்கெட்டிலும் தண்ணீர் பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தண்ணீர் பிரச்னையை ஓரளவு சமாளிக்க முடியும்.மழையின் போது, வெளியில் கிளம்புகிற நேரத்தில், முதுகில் மாட்டும், 'ரெக்சின் பை' ஒன்றை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். அதில், கீழே உள்ள பொருட்களை சேகரித்து வைத்தால், சமயத்தில் உதவும்.நனைந்தாலும், சீக்கிரம் உலரும்படியான அடர் நிற, ஒரு செட் துணிமணி எந்த தடையும் இன்றி, செய்திகளை தெரிந்து கொள்ள, பேட்டரியில் இயங்கும் சின்ன ரேடியோ பேட்டரிகள் மற்றும் மொபைல் போனுக்கான, 'பவர் பேங்க்!' பிஸ்கட், பிரெட் பாக்கெட்கள், வெந்நீரில் போட்டாலே தயாராகும், 'ரெடிமேட் ' உணவு வகைகள்.பேரீச்சை, பாதாம், முந்திரி, அத்தி மாதிரியான, 'டிரை புரூட்ஸ்' கைவசம் இருந்தால், உணவு பிரச்னையை ஓரளவு சமாளிக்கலாம்பூஜை மணி அல்லது விசில். தண்ணீர் சத்தத்தில் உதவி கேட்க, நம் குரல் எடுபடாது. பூஜை மணி அல்லது விசில் அடித்தால், மீட்க வருவோரின் கவனம், நம் பக்கம் திரும்பும்பையில் வைக்க வேண்டாம். எனினும், கையில் ஒரு நீளமான குடை வைத்திருத்தல் அவசியம். சாலையில் தேங்கியுள்ள தண்ணீரில் நடக்கும்போது, மேடு, பள்ளம் இருப்பதை, இந்த குடை காம்பால் தட்டிப் பார்த்து தெரிந்து கொள்ள முடியும்.மழைக்கால டிப்ஸ்!மழைக்காலம் வரும் முன்பே, குழந்தைகளின், 'ரெயின் கோட்'டை சுத்தம் செய்து, தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்; குடையில் ஓட்டைகள் சிறிதாக இருப்பின், வட்ட வடிவ, 'பாண்ட் எய்டை' ஒட்டி, சிறிது காலம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்* தண்ணீரில் நீண்ட நேரம் வேலை செய்வதால், கால்கள் அதிக ஈரமாக இருக்கும். அதனால், வெடிப்பு வரலாம். வேப்பிலை, மஞ்சள், சிறிது சுண்ணாம்பு சேர்த்து அரைத்து, விளக்கெண்ணை விட்டு குழைத்து, வெடிப்பின் மீது பூசினால், நல்ல பலன் கிடைக்கும்* கதவு தாழ்பாள்கள் துருப்பிடித்து, 'ஸ்டக்' ஆகிவிடும். உப்பு காகிதத்தை வைத்து தேய்த்து, எண்ணெய் அல்லது 'கிரீஸ்' தடவலாம்* மழை காலத்தில், எந்த உணவை உண்டாலும், சற்று மிதமான சூட்டில் சாப்பிடுவது நல்லது. மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவதை தவிர்க்கவும். சமைத்த உடனே சாப்பிடுவது, மிக நல்லது* குழந்தைகளின் ஷூவிலுள்ள ஈரத்தை போக்க, பழைய செய்தி தாளை சுருட்டி வைத்தால், உறிஞ்சி விடும்.* தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் விட்டு சூடாக்கி, பூங்கற்பூரத்தை அதில் போட்டு, கை பொறுக்கும் சூட்டில், குழந்தையின் நெஞ்சில் தடவினால், கபம் போகும்; மூச்சு விடுவது சீராகும்* மழை காலத்தில், தீப்பெட்டி நமத்து போகாமலிருக்க, 'ப்ரிஜ் ஸ்டெபிலைசர்' மீது வைத்திருந்து உபயோகிக்கலாம்* அடிக்கடி, சூப் அருந்துவது நல்லது. சூப்பில் மிளகு அதிகம் சேர்த்துக் கொண்டால், சளி தொல்லையிலிருந்து விடுபடலாம்* பாலில் பனங்கற்கண்டு, மஞ்சள் துாள், குங்குமப்பூ கலந்து குடிக்கலாம். இது, நோய் தொற்றை தடுக்கும்* மரச்சாமான்கள் மீது, சிறிதளவு மண்ணெண்ணையை, 'ஸ்பிரே' செய்து, பின்னர், காய்ந்த துணியால் துடைக்கவும். இதனால், பூஞ்சை படிவது தடுக்கப்படும்* வீட்டை காற்றோட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரம் இருமுறை, வீட்டை நன்றாக துடைத்து, சாம்பிராணி போட வேண்டும். இது, பூச்சிகள் வந்து தங்காமல் இருக்க உதவும்* வாஷிங்மிஷின் வைத்திருப்போர், ஈரமான துணிகளை டிரையரில் போட்டு எடுத்து, காற்றோட்டமான இடங்களில் அல்லது மின்விசிறி காற்றில் காய போடலாம்* பூண்டும், மிளகும், 'ஆன்டிபயாட்டிக்' என்பதால், முடிந்த வரை எல்லா உணவுகளிலும் சேர்த்துக் கொள்ளலாம். சுக்கு, இஞ்சி, துளசி, மிளகு தட்டி போட்டு, டீ குடிக்கலாம். மிளகு ரசம், மிளகு, பூண்டு சேர்த்த உணவுகளை சாப்பிடலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !