அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 25; என் கணவரின் வயது, 33. என் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில், நான் காதலித்தவரையே மணமுடித்தேன். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன; மூன்று வயதில் மகன் உள்ளான்.திருமணத்திற்கு முன் எங்கள் காதலை ஆதரித்த என் மாமியார், அதன் பின், என்னை திட்டியபடியே இருந்தார். நான் கர்ப்பமான போது கூட, 'உனக்கு சீமந்தம் செய்ய யார் இருக்கா... மாத்திரையை போட்டு கலைத்து விடு...' என்றார்.அதனால், என்னை தனிக்குடித்தனம் அழைத்து சென்ற என் கணவர், என்னை அன்பாக பார்த்துக் கொண்டார்.தனியார் பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணிபுரிந்தார், என் கணவர். நானும், தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்தேன். டி.ஆர்.பி., தேர்வு எழுத வேண்டும் என்பதை லட்சியமாக வைத்திருந்த என் கணவர், ஏனோ திடீரென்று அதைக் கைவிட்டார்.குழந்தை பிறந்ததும், நானும் வேலைக்கு செல்லவில்லை. பகுதி நேர வேலை செய்து, எங்களை கவனித்துக் கொண்டார், என் கணவர். இந் நிலையில், எங்கள் வீட்டிற்கு வந்த என் கணவரின் நண்பர், 'நீ, உன் மனைவிக்கு அதிக இடம் கொடுக்கிறாய்; உன் கட்டுப்பாட்டிற்குள் வை...' என்று கூறியுள்ளார்; இதை, என்னிடம் கூறிய என் கணவர், அந்த நபர் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பதையும் சொன்னார்.அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில், திடீரென என் கணவரின் நடவடிக்கைகள் மாறின. அடிக்கடி, அவருக்கு 'மெசேஜ்' வந்தது. அதுபற்றி கேட்டதற்கு ஏதேதோ சொல்லி சமாளித்தார். ஒரு கட்டத்தில், அவர் வீட்டினரிடம், 'இவள், என் மீது வீணாக சந்தேகப்படுகிறாள்...' என்று பொய் கூறினார்; அவர்களும் இவருக்கே ஆதரவாகப் பேசினர்.இதற்கிடையில், மீண்டும் கர்ப்பமானேன்; எனக்கு தெரியாமல், அவரின் போன் அழைப்புகள் தொடர்ந்ததால், அபார்ஷன் செய்து, காப்பர் டி பொருத்திக் கொண்டேன்.அடுத்ததாக வந்த டி.ஆர்.பி., தேர்வு நேரத்தில், 'படிக்கப் போறேன்... நீ தான் எனக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்...' என்றார். நானும் அவ்வாறே செய்தேன். ஆனால், படிப்பதாக கூறி, ஒரு பெண்ணுடன் ஆபாச வசனங்களை, 'மெசேஜில்' பரிமாறியபடி இருந்தார். அதைப் பற்றி கேட்ட போது, போனை கீழே போட்டு உடைத்து, 'இல்லை...' என்று மறுத்தார்.ஆனால், தேர்வு முடிந்து, என் கணவருக்கு வேலை கிடைக்கவில்லை என்றவுடன், 'உன்னால் தான் எனக்கு வேலை கிடைக்கவில்லை; ஐந்து ஆண்டுகள் என் வாழ்க்கையே வீணாகிப் போனது...' என்றார். இதற்கிடையில், நள்ளிரவிலும், அதிகாலையிலும் மொபைல் அழைப்புகள் வந்தன. அதுபற்றி கேட்டால், 'நண்பரின் வீட்டில் தகராறு; அதனால் தான், அவர் மனைவி ஆலோசனை கேட்டு போன் செய்கிறாள்...' என்றார். நான், 'மெசேஜ்' காட்டி கேட்டதற்கு, 'நீயும் தான் பணிக்கு செல்கிறாய்; அங்கு எப்படியோ...' என்று விதண்டாவாதம் செய்தார்.அவரின் நண்பர் ஒருவரிடம் விபரத்தைக் கூறினேன். அவர் எங்களை அழைத்து பேசினார். இவர், என் தலை மீது சத்தியம் செய்து, 'இனி இப்படி நடக்காது...' என்றும், 'இதுபற்றி என் குடும்பத்தினருக்கு சொல்லாதே...' என்று கூறினார்.ஆனால், அவர் மாறவில்லை; கடந்த நான்கு மாதங்களுக்கு முன், 'கோச்சிங்' வகுப்பிற்கு வெளியூருக்கு செல்வதாக கூறினார். நானும், நம் வாழ்க்கைக்கு அந்த பணி தான் அஸ்திவாரம் என்று எண்ணி, 'சிம் கார்டை' மாற்றி கொடுத்தனுப்பினேன். அங்கு சென்ற பின், ஒரு போன் கூட அவராக செய்யவில்லை. நானாக போன் செய்தாலும், எரிந்து விழுவார்.என் குழந்தையை காப்பகத்தில் விட்டு தான், அலுவலகம் செல்கிறேன். வீட்டிற்கு வர தாமதமானாலும், வேறு வழியில்லாமல், அழுதபடியே குழந்தையை தூக்கி வருவேன்.அந்நிலையிலும், அங்கு எப்படி கஷ்டப்படுகிறாரோ, என்ன சாப்பிடுகிறாரோ என்று நான் கவலைப்பட, அவரோ, எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று எந்த விபரத்தையும் என்னிடம் கூறுவதில்லை. மாறாக, 'எனக்கு நீ முக்கியமில்லை; என் குடும்பத்தினர் தான் முக்கியம்...' என்று கூறி, கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்.இடையில் ஒரு நாள் வீட்டிற்கு வந்தார். அப்பெண்ணிடமிருந்து, 'மிஸ்டு கால்' வந்தது. என் தலையில் இடியை போட்டது போல் இருந்தது. கேட்டதற்கு, 'நீ இத்தனை ஆண்டுகள் என் குடும்பத்தினரை கவனிக்கவில்லை; உன்னால் தான் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை...' என்று சம்பந்தமில்லாமல் பேசினார்.'அந்த தொடர்பை விட முடியுமா, முடியாதா?' என்று கேட்டதற்கு, 'நீ செய்ததற்கு பதில் சொல்...' என்றார். நான், 'நீங்கள் சொல்வதையெல்லாம் கேட்கிறேன்...' என்றதற்கு, 'என் பெற்றோர், தம்பிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேள்; என் ஊரில் ஒருநாள் முழுவதும் முட்டி போடு...' என்று சொல்லி, மீண்டும் ஊருக்கு சென்று விட்டார்.என்னால் தூங்க முடியவில்லை; இவரைப் பிரிந்து சென்று விடலாம் என்றாலும், என்னை, என் வீட்டினர் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். என் குழந்தையின் எதிர்காலம் என்னாகுமோ... இவரை எப்படி திருத்துவது என்றும் எனக்கு தெரிய வில்லை.என் வாழ்வும், சாவும் உங்கள் பதிலில் தான் உள்ளது. என் வாழ்க்கைக்கு வழிகாட்டுங்கள் அம்மா.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்புள்ள மகளுக்கு —உன் கணவரின் விஷயத்தில், கூடா நட்பு கேடாய் முடிந்திருக்கிறது. உன் கணவரின் நண்பன், நீ அவனிடம் சிரித்து சிரித்து பேச வேண்டும் என எதிர்பார்த்துள்ளான். நீ அவனது ஆசையை நிறைவேற்றாததால், உன்னைப் பற்றி கோள் மூட்டி, உன் கணவர் மனதை கெடுத்திருக்கிறான். அவன் வழியாக தான், திருமண பந்தம் மீறிய உறவுகளை தேடும் கலையை கற்றுள்ளார், உன் கணவர்.புத்திசாலி ஆண்கள், தங்களது நண்பர்களை திருமணத்திற்கு பின், வீட்டுக்குள் அனுமதிப்பதில்லை. மனைவியை பற்றிய எந்த தகவலையும், நண்பர்களிடம் கூறுவதும் கிடையாது. முட்டாள் ஆண்கள் தான், வேலியில் போகும் ஓணானை, மடியில் எடுத்து விட்டு கொள்வது போல, நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிக்கின்றனர். கெட்ட நண்பர்கள், ஒரு குடம் பாலில், ஒரு துளி விஷம் கலந்ததற்கு ஒப்பாவர்.கணவரின் காதல் லீலையை, நீ கண்டு கொள்ளாமல் இருந்தால், அவர் உன்னை பற்றிய அதிருப்தியை ஒலிபரப்பி இருக்க மாட்டார். தாம்பத்யம் பற்றி நீ சில கட்டுபாடுகள் விதித்ததும், அவர் எல்லை மீற ஒரு காரணம். அவரது குடும்பத்தினர் காலில் உன்னை விழச் சொல்வதும், முட்டிக்கால் போடக் கூறுவதும், உன்னை பழி வாங்க, உன் கணவர் கையாளும் யுக்தி.பணப் பிரச்னை மற்றும் வேலை வாய்ப்பின்மை ஏற்படுத்துகிற வெறுமைகளுக்கு வடிகாலாக, திருமண பந்தம் மீறிய தொடர்புகளில் ஈடுபடுகிறார், உன் கணவர்.அதனால், கணவருக்கு வஞ்சனை இல்லாமல், தாம்பத்யத்தை பரிசளி. வீட்டில் பசியாறிய ஆடு, வெளியில் பச்சை புல் தேடி அலையாது.புலம்புவதை குறை; சுய இரக்கம் உன்னையும், உன் குடும்பத்தையும் நாசப்படுத்திவிடும். கருத்து வேற்றுமை இருந்தாலும், கணவரின் குடும்பத்தோடு நல்லுறவு பேணு. தொலைதூர இயக்கம் மூலம் உன் கல்வி தகுதியை உயர்த்து. அதிக சம்பளம் தரும் வேலைக்கு தாவு. கணவரை எதாவது, 'கோச்சிங் சென்டரில்' சேர்ந்து டி.ஆர்.பி., தேர்வு எழுதச் சொல்.உன் கணவர் திருமண பந்தத்தை அறுத்து விட்டு ஓடும் பொலி காளை அல்ல; ஒருநாள் உறவு வைத்துக் கொள்ள விரும்பும் சபலக்கேஸ். ஆகையால், தினம் தினம், சி.பி.ஐ., அதிகாரி போல விசாரணை நடத்தாமல், விட்டு பிடி. அதற்கு முன், உன் கணவரிடம், 'உன் நண்பர்களை எக்காரணத்தை முன்னிட்டும், வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டேன்...' என கூறி விடு. அத்துடன், அவரின் கள்ளக் காதலிக்கு எச்சரிக்கை வாசகங்கள் அடங்கிய, குறுஞ்செய்தியை அனுப்பு.விவாகரத்து செய்வது எளிதான காரியம்; ஆனால், கூடியமட்டும் திருமண உறவை தக்க வைத்துக்கொள்ள என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும், பொறுமையாக செய். அதே நேரத்தில் சட்ட ரீதியாக கணவரை பிரிந்தால், பொருளாதார ரீதியாக சொந்த காலில் நிற்க தேவைப்படும் ஆயத்தங்களை செய்து கொண்டே இரு. வீட்டு பெரியவர்களை வைத்து, பிரச்னையை பேசி, சுமூக தீர்வு ஏற்படுத்து. மதி நுட்பமாக, ஆக்கப்பூர்வமாக செயல்பட்டால், மலை போல் வந்த பிரச்னையும், கால் தூசாகும்.— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.