உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 24; முதுகலை பட்டதாரி. தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடுத்தர விவசாய குடும்பத்தைச் சார்ந்தவள். அன்புமிகுந்த பொற்றோர், பாசமான அக்கா என்று சந்தோஷமான குடும்பத்தை கடவுள் எனக்கு தந்துள்ளார். என் அக்காவிற்கு திருமணம் ஆகி, மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்கிறாள். எங்கள் குடும்பத்தில் பணத்திற்கு குறைவிருந்தாலும், பாசத்திற்கு குறைவில்லை. ஆனால், இப்போது எனக்கு நானே எமனாக இருக்கிறேன்.சிறு வயதிலிருந்து எனக்கு இதய கோளாறு உள்ளது; அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறேன். இதயத் துடிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மூச்சுத் திணறல் ஏற்படும். இதய வால்வில், சிறு பிளவு இருப்பதாகவும், இதய துடிப்பு, 60 மட்டும் இருப்பதாகவும், சில சமயம், இதயத் துடிப்பு அதிகரிக்க மன அழுத்தமே காரணம் எனக் கூறி, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம் என்று கூறினார், உள்ளுர் இருதய மருத்துவர்.இந்நிலையில், நான், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவரை காதலித்தேன்; இருவரும் தூரத்து சொந்தம். யாரிடமும் பேசாத என் குணத்தை அறிந்தே, அவர், என்னை காதலிப்பதாக கூறினார். ஆரம்பத்தில் மறுத்தாலும், வயதிற்கேற்ற சபலத்தால், நானும் காதலித்தேன். அவர், என்னை விட ஆறு மாதம் மூத்தவர். நான் காதலிப்பது, என் அம்மா மற்றும் அக்காவுக்கு மட்டும் தெரியும். ஆரம்பத்தில் இதை ஏற்க சங்கடப்பட்டாலும், பின், இருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், ஜாதக நம்பிக்கையுள்ள என் அம்மா. எனக்கும், என் காதலருக்கும் பொருத்தம் பார்த்தார். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டால், திருமணமான மூன்று ஆண்டுகளில் கணவனை இழக்க நேரிடும். மேலும், என் ஜாதகத்தில், எனக்கு இரண்டாவது மாங்கல்யமே நிலைக்கும் என்றும் கூறியுள்ளனர்.எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால், ஜாதகத்தில் நம்பிக்கையில்லை என்றாலும், போகப் போக பயம் வந்துவிட்டது. அவ்வாறு நடந்து விடுமோ என்ற பயத்தில், தினமும் சாகிறேன்; கோவிலுக்கு சென்று, பரிகாரம் செய்கிறேன்.எனக்குள்ள பிரச்னை, என் காதலருக்கும் தெரியும். ஜாதக விஷயத்தைப் பற்றி அவரிடம் கூறிய போது, 'இதை ஏன் நம்புகிறாய், கடவுளை நம்பு; நாம் நன்றாக வாழ்வோம்...' என்று கூறி, என்னை தேற்றினார். தற்போது, என் வீட்டில், உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க, முடிவு செய்து உள்ளனர்.'என்னால், என் காதலரை தவிர்த்து, வேறு ஒருவரை மணப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது...' என்று என் அம்மா மற்றும் சகோதரியிடம் கூறினேன். அதற்கு அவர்கள், 'ஜாதகம் ஒத்து வரவில்லை; உன்னால், அந்த பையனின் வாழ்க்கை அழியும்...' என்றனர். நான் அழுத போது, 'ஏன் அழுகிறாய்... விதிப்படி நடப்பது நடக்கட்டும். உனக்கு, அவ்வாறு தான் வாழ்க்கை அமையும் என்றால், அவ்வாறே அமையட்டும்...' என்று என்னை தேற்றினர்.ஆனால், என் காதலருக்கு திருமண வயதில் ஒரு தங்கை இருப்பதால், மூன்று ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருந்தாலும், என் பெற்றோர் விடமாட்டார்கள்.மேலும், என் காதலர் வீட்டில் என் இதயக் கோளாறு மற்றும் ஜாதக விஷயம் தெரிந்தால், என்னை மறுத்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுகிறது. இதை அவரிடம் கூறிய போது, 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வோம்...' என்கிறார். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. இரு வீட்டின் சம்மதத்தோடு, பெற்றோரின் ஆசியோடு, மணம் புரிந்து நன்றாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.இதற்கிடையில், இதுவரை உள்ளூரில் சிகிச்சை பெற்ற வந்த நான், தற்போது, நகரத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன். அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யக் கூறியுள்ளனர்.அம்மா... நான் அவருக்காக காத்திருப்பதைப் பற்றி ஊர் என்ன பேசும் என்று வருத்தப்படும் என் அம்மாவுக்கும், ஜாதகத்தை நம்பலாமா, ஜாதகத்தால் உயிர் வாழ்வதை நிர்ணயிக்க முடியுமா என்ற என் குழப்பத்தையும், என் அன்பான வாழ்க்கை எனக்கு நீடிக்க வேண்டும் என்று ஏங்கி, வேதனையில் சாகும் எனக்கு, உங்களின் ஆசீர்வாதத்தோடு பதில் தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.அன்புள்ள மகளுக்கு — எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி, பிறவியிலேயே இதய கோளாறு உடையவள்; அவளது பிரச்னை தெரிந்தும், அவளை மணந்தார் ஒருவர். அவர்களுக்கு இரு பையன்கள்; அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்து விட்டாள். இப்போது, 60 வயதை தாண்டி, கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறாள்.இறைவன் அருள் இருந்தால், எந்த மருத்துவ பிரச்னையையும் வெல்லலாம். நம்பிக்கையுடன், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிடு. இதுவரை, 'அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம்...' என்றும், 'அறுவை சிகிச்சை கட்டாயம்...' என்றும் இரு மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், மூன்றாவதாக, இன்னொரு இதய மருத்துவரிடம் ஆலோசனை கேள். இதய நோயும், ஜாதக குறைபாடும், உன் காதலை சீர்குலைத்து விடுமோ என்ற மனப் பதற்றத்தை, ஒதுக்கு.'நான் ஜாதகத்தை நம்பவில்லை; இதய நோயும் குணமாகிவிடும். நான், என் காதலனையே மணந்து கொள்வேன். என்னை, என் போக்கில் வாழ விடுங்கள்...' என்று உன் வீட்டில் ஆணித்தரமாக தெரிவித்து விடு.நீ, உன் வீட்டில் பேசுவதை போல, உன் காதலனை அவனது வீட்டில் பேசச் சொல்.உங்களின் அன்பான திருமண வாழ்க்கையைப் பார்த்து, ஊரே வியக்க வேண்டும். அந்த சந்தோஷமே, உன்னை நூறு ஆண்டுகள் வாழ வைக்கும்; உன்னுடைய மனக்குழப்பங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.உன்னை சுற்றியுள்ள உறவுகள் யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்காத நல்ல மனம் உனக்கு இருக்கிறது. நீ தொட்டதெல்லாம் துலங்கும்; இறக்கைகள் இல்லாத தேவதை நீ! உங்களிருவரின் திருமணம் வெற்றி பெற, இதயப்பூர்வமான வாழ்த்துகள்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !