அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 37; திருமணமாகி, 18 ஆண்டுகள் ஆகின்றன. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படிக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.என் கணவர் கூலி வேலை செய்து, சம்பாதிக்கிறார்; ஆனால், எனக்கோ, என் குடும்பத்துக்கோ அல்ல; ஊராருக்கு! அதாவது, யாருக்காவது கடன் வாங்கி கொடுக்கிறார். அவர்கள் ஓட, இவர், என் நகையை விற்று கடனை அடைப்பது என, இப்படியே, 18 ஆண்டுகள் ஓடி விட்டன.இதுவரை, எனக்கென்று ஒரு புடவையோ, நகையோ வாங்கித் தந்ததில்லை. கேட்டால் பிள்ளைகளை வளர்ப்பதாக கூறுவார். அதுமட்டும் போதுமா... அரிசி, பருப்பு, துணிமணிகள் வேண்டாமா... பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டாமா?நான், டெயிலர் வேலைக்கு சென்று, வாரம், 4,000 ரூபாய் சம்பாதித்து, அதில் தான் குடும்பம் நடத்துகிறேன். அவரோ, வாரம், 200 ரூபாய் தருவார்; இந்நிலையில், 'இனி, எந்த பிரச்னைக்கும் போக மாட்டேன்...' என்று உறுதி அளித்ததால், நான் சீட்டு போட்டிருந்த பணத்தையும், நகைகளையும் விற்று, சில ஆண்டுகளுக்கு முன், வீடு கட்டினோம். இருவரும், வேலைக்கு சென்று, கடனை கட்டி இருந்தால், மூன்று ஆண்டுகளில் கடனை அடைத்திருப்போம். இப்போது, வீட்டின் மேல் ஐந்து லட்சம் ரூபாய் கடன் உள்ளது. இந்நிலையில், 'என்னால் வாரம், 1,000 ரூபாய் தான் தர முடியும்; கடனை நீயே கட்டு; பிள்ளைகளையும் பாத்துக்கோ...' என்றார் என் கணவர்.'என்னால் மட்டும் முடியாது...' என்று கூறினேன். உடனே, 'இருப்பதாய் இருந்தா இரு; இல்லாவிட்டால், பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே போ...' என்றார்.வீடு கட்டும் முன்பே, எனக்கு தெரியாமல், ஒருவரிடம், ஒரு லட்சம் ரூபாயும், வீடு கட்டும் போது, மற்றொருவரிடம் ஒரு லட்சம் ரூபாயும் வாங்கியுள்ளார். அது தெரிய வந்து கேட்ட போது, 'வீட்டுக்குத் தான் கடன் வாங்கினேன்...' என்று சத்தியம் செய்தார். வீட்டுக்கு எவ்வளவு செலவு, யாரிடம் வாங்கியுள்ளோம் என்று, என்னிடம் கணக்கு உள்ளது; ஆனால், இதை அவரது வீட்டினர் நம்ப தயாராக இல்லை.நான் அதிக செலவு செய்பவளோ, ஆடம்பரத்துக்கு ஆசைப்படுபவளோ இல்லை; தகுதி அறிந்தே நடப்பவள். அவரிடம் இந்த கடன் வாங்கும் திருட்டுத்தனம், திருமணத்துக்கு முன்பிருந்தே இருந்துள்ளது.எங்கள் திருமணத்திற்கு வாங்கிய, 30 ஆயிரம் ரூபாய் கடனையே இன்னும் அவர் வீட்டினர் அடைக்கவில்லை.வாங்கிய கடனை சுயமாக அடைக்காமல், இங்கு வாங்கி, அங்கு கொடுப்பது, அங்கு வாங்கி இங்கு கொடுப்பதுமாக இருந்து, குடும்பத்தை கவனிக்கவில்லை. இதுபற்றி, அவரது இரண்டு அக்காக்களிடம் கூறிய போது, 'நீ வெளியே போய் தொலை... அவன் அப்படித்தான் கடன் வாங்குவான்; குடிப்பான்; அதை நீ ஏன் கேட்கிறாய்...' என்று உறவினர் முன்னிலையில் என்னை அசிங்கப்படுத்தியதுடன், 'குடும்பத்த கெடுத்தவ' என்று என்னைப் பற்றி தவறாக பேசுகின்றனர்.குடும்பத்தில் நடப்பதை எல்லாம் எல்லாரிடமும் கூற முடியுமா... தற்போது, 'கடனை அடைக்க மாட்டேன்; என் பிள்ளைகளை, நானே பார்த்துக்கிறேன்; உன்னுடன் வாழ மாட்டேன்...' என்று கூறி, நாங்கள் கட்டிய வீட்டில் ஒரு பகுதியில், பிள்ளைகளுடன் தங்கி உள்ளேன். இதுவரை, எனக்கென்று எதுவும் சேர்த்துக் கொள்ளாமல், இவர் வாங்கிய கடனுக்கும், இவர் வீட்டுனருக்குமே போட்டு விட்டேன்.என் கணவருடன் பேசி, மூன்று ஆண்டுகளாகிறது. என்னை நம்ப வைத்து, துரோகம் செய்த அவரை, ஏற்கவே முடியவில்லை. அவர்கள் வீட்டினருக்கும், அவருக்கும் உண்மையாய் இருந்ததற்கு, எனக்கு கிடைத்த பரிசு இது!நான், 8ம் வகுப்பு தான் படித்துள்ளேன்; ஆனால், நேர்மையாய் வாழ வேண்டும் என்பதில், உறுதியாய் உள்ளேன். ஒரு பெண் திருமணமாகி, புகுந்த வீட்டுக்கு வந்தால், எப்போது பார்த்தாலும், 'இடம் என்னோடது; வீடு என்னோடது... வெளியே போ'ன்னு மாமியார் சொன்னால், புகுந்த வீட்டிற்கு வந்தவள் எங்கு போவாள்... இந்த வார்த்தையை கேட்ட அன்றே, மனதளவில் இறந்து விட்டேன்.இன்று, என் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும்; நல்ல வேலைக்கு அனுப்பி, அவர்களை சொந்தக் காலில் நிற்க வைக்கும் வரை, என் போராட்டம் தொடரும். என் பிள்ளைகளுக்கு, நான் நல்ல அம்மாவாக இருக்க விரும்புகிறேன். ஆனாலும், தனிமையில், அனாதையைப் போல் உணருகிறேன். சில சமயம், பைத்தியம் போன்று நடந்து கொள்கிறேன்.ஆறுதல் தேட, ஒரு தோள் இல்லை; அழ, ஒரு மடி இல்லை. தெருவில் யாராவது கணவன், மனைவி ஒன்றாக சென்றால், சிரித்து பேசினால், என் மனம் ஏங்குகிறது.'நமக்கென்று யாரும் இல்லையே...' என்று என்னுள் எழும் ஏக்கங்களை எழுத முடியவில்லை.எனக்கு தாங்கள் ஒரு நல்ல பதிலை தரவும்; தங்கள் பதிலில் தான் என் மகள்களின் எதிர்காலம் உள்ளது.— இப்படிக்கு,தங்கள் சகோதரி.அன்புள்ள சகோதரிக்கு —தற்கால கணவன் - மனைவி உறவு, நூற்றுக்கணக்கான பாம்புகள் நிறைந்த கண்ணாடி கூண்டுக்குள் வசிப்பதற்கு சமமாய் இருக்கிறது. திருமண உறவில், ஏமாற்றமும், வெறுமையும் பீறிட, இரு பாலரின் உச்ச பட்ச எதிர்பார்ப்புகளே காரணமாய் அமைகின்றன. பங்கு மார்க்கெட்டில், 10 ரூபாய் பங்கு ஒன்றை வாங்கி, அது, அடுத்த சில நாட்களில், ஒரு லட்சமாக மதிப்பு கூடும் என எதிர்பார்ப்பது, எவ்வளவு மடமையோ, அவ்வளவு மடமை, திருமண பந்தத்தில் பல அற்புதங்களை எதிர்பார்ப்பது!உன் கணவன், தகுதிக்கு அதிகமாய் கடன் வாங்குபவன்; குடிகாரன்; வீட்டு பொறுப்பை, சுமக்க விரும்பாத சோம்பேறி; மனைவியை பற்றி, தவறான செய்திகளை, தன் வீட்டாரிடம் பரப்பும் பொய்யன். இருந்தும், அவனிடம், 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தி, இரு பெண் பிள்ளைகள் பெற்று விட்டாய். உன் கணவனை போன்ற ஆயிரக்கணக்கான ஆண்களை, கண் கூடாய் பார்த்திருக்கிறேன்.'ஆறுதல் தேட, ஒரு தோள் இல்லை; அழ ஒரு மடி இல்லை...' என சுயபச்சாதாபம் கொள்ளாதே. இது ஆபத்தான நிலை; உனக்கு, 37 வயது தான் ஆகிறது. திருமண பந்தம் மீறிய உறவில் ஈடுபட, இந்த சுயபச்சாதாபம் தூண்டி விடும். அதனால், ஜாக்கிரதையாக இரு; பூராணிடமிருந்து தப்பித்து, நட்டுவாக்காலியிடம் போய் சிக்கி விடாதே. அது, உன் மகள்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆகிவிடும்.டெய்லரிங் வேலை செய்தபடியே, வீட்டிலும், லேடீஸ் டெய்லரிங் ஆரம்பி. கணவனுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என வம்பு பிடிக்காதே. அவனை, சாம, தான, பேத, தண்ட முறையில் திருத்து. 'புதிதாய் யாரிடமும் கடன் வாங்கக் கூடாது...' என கண்டி. 'நான் திருந்தவே மாட்டேன்...' என, உன் கணவன் அடம் பிடித்தால், அவனை துரத்தி அடி; மகள்களை சிறப்பாக வளர்க்கப் பார்.தொலைதூர கல்வி இயக்கம் மூலம், மேற்படிப்பு படி; புலம்பிக் கொண்டு நின்றால், லட்சியத்தை அடைய முடியாது.சவால்கள் இல்லாத வாழ்க்கை, உப்பு சப்பில்லாத பத்திய சாப்பாடு; வாழ்க்கை என்பது, பாம்புகளும், ஏணிகளும் கலந்த பரமபத விளையாட்டு. ஒரு பாம்பு கடித்து கீழே வந்தால், மீண்டும் மீண்டும் முயற்சித்து, ஏணியில் ஏறி, உச்சம் தொட வேண்டும். விழுவது எழுவதற்கே! வாழ்க்கை, ஆயிரக் கணக்கான தடைகள் நிறைந்த தடை ஓட்டம்; தடைகளை தாண்டி ஓடு. ௧௧ வீரர்களை வென்றால் தான், புட்பாலில், கோல் போட முடியும். உன் இரு மகள்களுக்கு, மிக சிறப்பான எதிர்காலம் அமைத்துக் கொடுத்து, உன்னை போன்ற அல்லலுறும் பெண்களுக்கு முன் மாதிரியாக இரு.ஆறுதல் தேட, உன் தாயின் மடியையோ அல்லது உன் மகள்களின் மடியையோ நாடு; பெண்ணுக்கு பெண்ணே, சிறந்த ஆறுதல். எதிர்நீச்சல் போடு, வாழ்த்துகள் பெண்ணே!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.