உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்பு சகோதரிக்கு —நானும், என் தோழியும் மத்திய அரசு நிறுவனத்தில் பணிபுரிகிறோம். என் தோழி பார்ப்பதற்கு சுமாராக இருப்பாள்; வயது, 40. பெற்றோர் எதிர்ப்பை மீறி, காதல் திருமணம் புரிந்தவள். அன்பான கணவன், 10ம் வகுப்பு படிக்கும் அழகான ஒரு பெண் குழந்தை என, அமைதியான குடும்பம்.கடந்த சில ஆண்டுகளாகவே, அலுவலக உயர் மேலதிகாரியுடன் மிக நெருக்கமாக பழகி வருகிறாள், என் தோழி. நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவருடைய தனி அறையிலேயே இருக்கிறாள்.இதனால், அலுவலகத்தில் எல்லாரும் அவளது நடத்தை குறித்து கேவலமாக பேசுகின்றனர். இதனால், என்னை போன்ற தோழிகளுக்கும், தர்ம சங்கடம். தற்போது இவ்விஷயத்தை அலுவலக தொழிற்சங்கமும், தங்கள் கையில் எடுத்து, பிரச்னையை பெரிதாக்குகிறது.இவ்வளவு நடந்தும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், அந்த உயர் அதிகாரியை, தன் கைக்குள் வைத்துள்ளாள்.இத்தவறான தொடர்பை விட்டு விடும்படி, நானும், என் தோழிகளும் இலை மறைவு, காய் மறைவாக கேட்டுக் கொண்டாலும், அதை, அவள் கண்டு கொள்வதில்லை.அவள் கணவரிடம் சொல்லலாம் என்றால், அவர்களின் குடும்பத்தில், விரிசல் ஏற்பட்டு விடுமோ என, அச்சமாக உள்ளது.தற்போது, அந்த மேலதிகாரி, மருத்துவ விடுப்பில் உள்ளார். இந்த தற்காலிக பிரிவை, நிரந்தரமாக்க உங்கள் அறிவுரையை வேண்டுகிறேன். உங்கள் பதில் அவளை திருத்த வேண்டும்.— இப்படிக்கு,உங்கள் சகோதரிஅன்பு சகோதரிக்கு —நான்கு பெண்கள் நட்பாய் இருந்தால், ஒவ்வொரு பெண்ணும், தன்னைச் சுற்றி, 'பிரைவசி' வட்டம் போட்டிருப்பர். ஒரு பெண்ணின் வட்டத்துக்குள், மீதி மூன்று பெண்கள் அத்துமீறி பிரவேசிப்பது, பிரவேசிக்க நினைப்பது தவறு.அலுவலக தோழிகள் தாங்கள் கொண்டு வந்த உணவை பகிர்ந்து உண்ணலாம். தோழி, தன் வீட்டு விசேஷங்களுக்கு அழைத்தால், பரிசு பொருட்களுடன் போய், விருந்துண்ணலாம். தோழி, 'ஹலோ' சொன்னால், பதிலுக்கு, 'ஹலோ' சொல்லலாம். 'புதுப்புடவை எப்படி இருக்கிறது...' என கேட்டால், 'அம்சமாக இருக்கிறது...' எனலாம். மாறாக, தோழியின் நடத்தைக்கு, 'மாரல்' போலீசாக கூடாது.அலுவலக மேலதிகாரியை, அப்பா ஸ்தானத்திலோ, குரு ஸ்தானத்திலோ வைத்து கூட, உன் தோழி பார்க்கக் கூடும் அல்லது கிடைக்கும் சலுகைகளுக்காக, பதவி உயர்வுகளுக்காக, மேலதிகாரி மீது, விழுந்து விழுந்து பழகலாம். உன் தோழிக்கும், மேலதிகாரிக்கும் இடையே ஆன உறவின் லாப, நஷ்டங்களை அவள் தானே அனுபவிக்கப் போகிறாள்... அனுபவிக்க விட்டு விடு.உன் தோழியின் நடத்தை குறித்து, அவள் கணவனிடம் கூறினால், 'நீ யார் என் தர்மபத்தினியை பற்றி குறை சொல்ல...' என கேட்டு விட்டால், முகத்தை, எங்கே போய் வைத்துக் கொள்வாய்? அதனால், உன் குடும்பத்தை பற்றி மட்டுமே யோசி; அவர்கள் நலம் குறித்தே கவலைப்படு!அவரவர் செய்யும் நல்லது, கெட்டதுகளின் பலாபலத்தை, அவர்கள் அனுபவிக்க நேரும் காலகட்டத்தின் போது, அதற்கான பலனை அனுபவித்து, உணர்ந்து தெளிவார்கள்!- என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !