உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்!

அன்புள்ள அம்மாவிற்கு,நான், 11 ஆண்டுகளுக்கு முன், என் உறவினர் மகளை காதலித்து, மணந்தேன். திருமணத்திற்கு பின், மாமியாரின் வீட்டிலேயே, மனைவியை தங்க வைத்து, நான் பல இடங்களில் தொழில் செய்து, சம்பாதித்து கொடுத்தேன். இருந்தும், அவ்வீட்டினர் என்னை வெறுத்தனர். நாளடைவில், என்னை, வீட்டிலிருந்து வெளியேற்ற, மாமியாரின் குடும்பமே துடித்தது; அதற்கு என் மனைவியும் ஊமையாக இருந்தாள்.என் பெற்றோரிடம் சென்று, 'ஏதோ வயது கோளாரால் தவறு செய்து விட்டேன்...' என, என் நிலையை எடுத்துக் கூறினேன். 'உன் மனைவி மற்றும் குழந்தைகளை, நம் வீட்டிற்கு அழைத்து வா...' எனக் கூறினர் என் பெற்றோர்.என் மனைவி மற்றும் பிள்ளைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்தினேன். இந்நிலையில், தன் குடும்பத்தார் பேச்சைக் கேட்டு, வரதட்சணை கொடுமை செய்வதாக காவல்துறையில் புகார் செய்தாள், என் மனைவி. இதனால், நானும், என் தாயும் ஒரு மாதம் சிறையில் இருந்தோம்; பின், அவ்வழக்கில் வெற்றியும் பெற்றோம்.இதனால், வழக்கு நடைபெறும் போதே, விவாகரத்து கேட்டு, வழக்கு தொடர்ந்து, விவாகரத்து பெற்றேன். பின், சொந்த ஊரைக் காலி செய்து, தற்போது, வெளியூரில் வசித்து வருகிறேன். அவளும், என் இரு பிள்ளைகளும் அவளது அம்மா வீட்டிலேயே இருந்தனர்.இதன்பின், என் நிலையை கூறி, இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்தேன். தற்போது, கூலி வேலை செய்து பிழைத்து வருகிறேன். இரண்டாவது மனைவியின் மூலம், இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம், குழந்தைகளுடன், என்னைத் தேடி வந்த முதல் மனைவி, 'அறியாத வயதில் தெரியாமல் தவறு செய்து விட்டேன்; என் அம்மா, 'குழந்தைகளை அழைத்துக் கொண்டு எங்காவது போ...' எனக் கூறுகிறாள்...' என்று கூறி, அழுதாள்.என் மூத்த மகளோ, பள்ளியில் சிலர் தன்னை அப்பா இல்லாதவள் என்று கேலி செய்வதாக கூறி அழுதாள். இதைக் கேட்டதும், என் இதயமே வெடித்து விடும் போல் இருந்தது. முதல் மனைவியிடம், 'என் குழந்தைகளை என்னிடம் தந்து விட்டு, நீ வேறு திருமணம் செய்து கொள்...' என்று கூறியும், அவள் கேட்பதாக இல்லை. இருப்பினும், என் குழந்தைகளிடம், என் நிலைமையை எடுத்துக் கூறி, 'உங்களது வருங்காலத்திற்கு, என்னால் இயன்றதை செய்வேன்; அது என் கடமை...' என்று கூறி, அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தேன்.என் குடும்ப விவகாரத்தில், அவளது பெற்றோர் நுழைந்ததால் ஏற்பட்ட பிரச்னைகளையும், அதன்பின், நானே ஏற்படுத்திய சில சிக்கல்களையும், இதில் எழுதியுள்ளேன். என் இந்த அவலநிலைக்கு, தங்களிடமிருந்து தக்க பதிலை எதிர்பார்க்கிறேன்.இப்படிக்கு,உங்கள் மகன்.அன்பு மகனுக்கு,வீட்டு மாப்பிள்ளையாக இருப்பது, என்றைக்குமே மரியாதை குறைவான விஷயம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போனது? சரி விடுங்கள்... உங்கள் மாமியாரே, உங்களுக்கு வில்லியாக மாற, அவரை நீங்கள் சொல்லாலோ, செயலாலோ காயப்படுத்தி இருக்கலாம்.உங்களது முதல் திருமணம் தோற்று போக, உங்கள் மனைவி மட்டும் காரணமல்ல; நீங்களும் தான். நீங்கள், உங்கள் திருமண வாழ்வில் ஏற்படுத்திக் கொண்ட சிக்கல்களை, கடிதத்தில் முழுமையாக குறிப்பிடவில்லை.வரதட்சணை புகார் செய்து, உங்களையும், உங்களின் தாயையும், ஒரு மாதம் சிறையில் வைத்தது, பழி வாங்கல் என்பதில் சந்தேகமில்லை.முதலில், உங்கள் முதல் மனைவி இத்தனை நாட்களாக, என்ன செய்தாள், எக்காரணத்தால், தன் தாயே, மகளையும் பேரன், பேத்தியையும் விரட்டினார் என்பதை விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். உண்மையில், முதல் மனைவி திருந்தியிருந்தால், இரண்டாம் மனைவியின் அனுமதியோடு, அவர்களுக்கு வீடு எடுத்துக் கொடுத்து, பராமரியுங்கள்.அவள் வழி குழந்தைகளுக்கு மட்டும் தான், நீங்கள் தகப்பன்; அவளுக்கு கணவன் அல்ல! வெறும் பாதுகாவலன் என்கிற நிலையில், நின்று கொள்ளுங்கள்; காதலித்து மணந்த கணவனை, கம்பி எண்ண வைத்ததற்கு தண்டனையாக, இது அமையும்.ஒருவேளை, உங்கள் முதல் மனைவி, உங்களின் தற்சமய திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சித்தால், அவளை, அவளது தாய் வீட்டுக்கே, திருப்பி அனுப்புங்கள்; இரு தாரத்து குழந்தைகளும், ஒரே வீட்டில் வளரட்டும்.நீதிமன்றம், இருவருக்கும் விவாகரத்து வழங்கிய போது, முதல் மனைவிக்கு, ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டிருக்க கூடும். அந்த ஜீவனாம்சம், தற்சமயம், போதுமானதாய் இருந்தால், பராமரிப்பு செலவுகளை தவிர்த்து, குழந்தைகளின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள்.முதல் மனைவி விஷயமாக, நீங்கள் என்ன முடிவெடுத்தாலும், இரண்டாம் மனைவி, நல விரும்பிகள் மற்றும் குடும்ப வழக்கறிஞரை கலந்தாலோசியுங்கள். உணர்ச்சி பூர்வமான முடிவை விட, அறிவுப்பூர்வமான முடிவே விவேகமானது. தவறான எந்த முடிவும், உங்கள் மீதி வாழ்க்கையை நரகமாக்கி விடக் கூடாது. அதனால், எந்த முடிவெடுத்தாலும், உங்கள் இரண்டாம் மனைவி, அதிருப்தி அடையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.அபாயகரமான வளைவு இது; வாழ்க்கை வாகனத்தை, கவனமாக செலுத்துங்கள்!- என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !