அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவிற்கு —நான் ஆசிரியையாக பணியாற்றுகிறேன். எனக்கு ஒரு அக்கா இருக்கிறார். என் வீட்டிலேயே நன்றாக படித்து, அதிக மதிப்பெண் வாங்கி, தோல்வியே சந்திக்காத ஒரே பெண் நான் தான் என்பதால், என் பெற்றோருக்கு என் மீது மிகுந்த நம்பிக்கை. நான், பிளஸ் ஒன் படிக்கும் போது, ஐ.டி., முடித்திருந்த என் மாமா பையன், என்னை காதலிப்பதாக கூறினான். இருவரும் ஒரே வயது என்பதால், அதுவரை, தோழனாக நினைத்திருந்த நான், மெல்ல, என் மனதில், அவனுக்கு இடம் கொடுத்தேன்.என்னைத் தவிர, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என, அவனது பெற்றோர் மற்றும் எல்லாரிடமும் கூறினான். யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை; வாரத்திற்கு ஒருமுறை என்னை பார்க்க வருவான். இவ்விஷயம் என் வீட்டிற்கு தெரிந்து, கண்டித்தார், என் அம்மா; பின், எதுவும் கூறவில்லை. காரணம், எல்லாரிடமும் நல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். எங்கள் காதல் மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. திடீரென்று, எனக்கு அவன் போன் செய்வதை நிறுத்தினான். காரணம் தெரியாமல், குழம்பிய போது, அவன் வெளியூரில் பணிபுரிவது தெரிந்தது. அவன் மொபைல் போன் எண்ணை தெரிந்து, நானே அவனுக்கு போன் செய்தேன்.'உனக்கும், எனக்கும் ஒரே வயது; அதனால், உங்க வீட்டில் உன்னை, எனக்கு தர மாட்டார்கள்...' என்று கூறி, விலகினான். ஆறு மாதங்களாக பேசிக் கொண்டு இருந்தவன், தற்போது பேசுவதும் இல்லை.அவன் தங்கை மூலமாக, அவன் வேறொரு பெண்ணை காதலிக்கும் விஷயம் தெரிய வந்தது. நான், அவன் மீது வைத்திருக்கும் அன்பை விட, பன்மடங்கு அவன் குடும்பம் மீது வைத்துள்ளேன். அதை புரிந்து கொள்ளாமல், அந்த பெண்ணை, பெண் கேட்டு செல்லுமாறு, என் மாமாவிடம் கூறியுள்ளான். ஆனால், அவர் மறுத்துள்ளார். நான், இதுபற்றி அவனிடம் கேட்ட போது, 'அவள் தான் என் மனைவி; அவளை திருமணம் செய்ய முடியவில்லை என்றால், இறந்து விடுவேன்...' என்கிறான்.இதற்கிடையில், அவனுடைய பெற்றோர், என் அம்மாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பெண் கேட்டுள்ளனர்; என் அம்மாவும் சம்மதம் தெரிவித்து விட்டார். என் காதல் உண்மையானால், அவன் திருந்தி வருவான் என நம்புகிறேன். அத்துடன், நான் சில முடிவுகளை எடுத்துள்ளேன். அது சரியா என்று தாங்கள் தான் கூற வேண்டும்.* காலம் முழுவதும் அவனை நினைத்தபடி தனியாக வாழ்வது. * வரும் வரன்களில் எனக்கு பொருத்தமானவரை தேர்ந்தெடுத்து, அவரை திருமணம் செய்து கொள்வது.* இந்த உலகை விட்டுச் செல்வது.அம்மா... உங்கள் மகளாகிய நான் பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன். விரைவில், எனக்கு விடை தாருங்கள். உங்கள் பதிலை எதிர்நோக்கி, காத்திருப்பேன்.அன்பு மகளுக்கு —குழலூதும் கண்ணனின் மீது, மாளா காதல் கொண்ட ஆயர்பாடி பெண்களில் ஒருத்தியா நீ, ரங்கநாதனை உருகி உருகி பாடி, இறுதியில், அவனுடன் கலந்த ஆண்டாளா நீ, ரங்கநாதனை கண்மூடித்தனமாக காதலித்த, டில்லி இளவரசி துலுக்கநாச்சியாரா நீ? இல்லவே இல்லை; விலகி ஓடும் மாமன் மகனை, துரத்தித் துரத்தி காதல் பிச்சை கேட்கும் படு சாதாரண மனுஷி.உன்னை, சிறுவயதில் இருந்து பார்த்து, பேசி, பழகியதால், உன் மாமன் மகனுக்கு, நீ அலுத்து விட்டாய். இன்னொரு கவர்ச்சியான பெண்ணின் அறிமுகம் கிடைத்ததும், அங்கு தாவி விட்டான். காதல் பிச்சை கேட்டு, திருவோட்டை தூக்கி, அவன் போகுமிடமெல்லாம் போய் கேவலப்படுகிறாய். தான் காதலிக்கும் பெண்ணை விட, பெட்டர் பெண் கிடைத்தால், அவளுக்கு தாவுவானே தவிர, ஒருக்காலும், உன்னிடம் திரும்பி வர மாட்டான்.மூன்று தீர்வுகள் கூறியிருக்கிறாய். முதல் தீர்வின்படி, நீ, காலம் முழுவதும் கன்னியாக இருந்தால், 40 வயதுக்கு மேல், மகா வெறுமையை உணர்வாய். தனிமை, உன்னை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கும். உன் முட்டாள்தனமான முடிவுக்காக நீயே வருந்துவாய். மூன்றாவது தீர்வின் படி, நீ தற்கொலை செய்ய துடிப்பது, உலக அபத்தம். நீ வேண்டாம் என்றாலும், இரண்டாவது தீர்வு தான், உனக்கு பொருத்தமானது.கண்மூடித்தனமான காதலால், எதனாலும் வீழ்த்தப்படும் பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாய். மகளே... உனக்கென்று சுய கவுரவம் இல்லையா... உலகில், உன் மாமன் மகனை தவிர, காதல் கொள்ள ஆயிரம் அற்புதமான விஷயங்கள் இருக்கின்றன. நிராகரிப்பவனின் காலில், அடிமையாக விழுந்து கிடக்காதே! உன் மாமன் மகன், தன் தவறுகளிலிருந்து எதற்காக திரும்பி வர வேண்டும்... அவன், அவனது வழியில் செல்லட்டும்; நீ, உன் வழியில் செல்.அவனுக்கு ஒருத்தி கிடைத்தது போல, உனக்கும் ஒருவன் கிடைப்பான்; அவன், உன்னை நேசிப்பவனாக இருப்பான். உன் சிறப்பான திருமண வாழ்க்கை கண்டு, பிற்காலத்தில், 'இவளை முட்டாள்தனமாக ஒதுக்கி தள்ளினோமே...' என, வருந்தி, கண்ணீர் சிந்த வேண்டும், உன் மாமன் மகன்.ஒரு தலைக்காதல் எனும் சிலந்தி வலையை அறுத்து, வெளியே வா. நீ திருமணம் செய்து, குழந்தை பெற்ற பின், இதெல்லாம் சிறுபிள்ளைத்தனமாக படும்.உன் திருமண அழைப்பிதழை அனுப்பு; விருந்துண்ண வருகிறேன். வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன்,சகுந்தலா கோபிநாத்.