அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —நான், பி.லிட்., பி.எட்., படித்துள்ளேன். சைக்கிளில் கோல மாவு விற்கும் சிறு வியாபாரி, என் அப்பா. அவரது வருவாயை கொண்டு, சிக்கனமாக குடும்பம் நடத்தி, என்னை இந்தளவுக்கு படிக்க வைத்துள்ளார்; எனக்கு, தம்பி மற்றும் தங்கை உள்ளனர்.நான் கறுப்பாக, குள்ளமாக இருப்பேன்; கலகலவென்று யாரிடமும் பேச மாட்டேன்; தாழ்வு மனப்பான்மையால், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கூட போக மாட்டேன்.ஆனால், எங்கள் கிராமத்தில், நான் தான் படிப்பில் முதல் மாணவி. ஒன்பதாம் வகுப்பிலிருந்து நகரத்து பள்ளியில் படித்தேன். பத்து ரேங்க்குக்குள் எடுத்து விடுவேன். பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின், மேற்கொண்டு படிக்க வைக்க வசதியில்லை என்று கூறிவிட்டார், அப்பா. வீட்டு நிலைமை தெரிந்து, நானும் அடம் பிடிக்கவில்லை; ஆனாலும், டிகிரி படிக்கும் ஆசையை, என் டியூஷன் ஆசிரியையிடம் கூறினேன். அவர், 'நான் பத்து பிள்ளைகளை உன்னிடம் அனுப்புறேன்; அவர்களுக்கு, டியூஷன் நடத்தி, அதில் வரும் பணத்தை வைத்து, அஞ்சல் வழியில் படி...' என்று, வழிகாட்டினார்.அதன்படி, டியூஷன் எடுத்தேன். பத்து, ஐம்பது ஆயிற்று. அந்த வருமானத்தை வைத்து, பி.லிட்., முடித்தேன். அச்சமயம், சில வரன்கள் வரவே, திருமணம் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும், கால் ஊனமுற்ற மாற்றுத் திறனாளிக்கு, என்னை இரண்டாம் தாரமாக திருமணம் செய்து வைத்தனர், என் பெற்றோர். அவர், திருமணமான ஆறு மாதத்தில், நெஞ்சு வலி வந்து இறந்து விட்டார். என்னை, பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து விட்டனர்.எங்கள் ஊர் நடுநிலைப் பள்ளியில், சில மாதங்கள், ஆசிரியர் வேலைக்கு சென்றேன். பின், குறைந்த சம்பளத்திற்கு இரண்டு மூன்று இடங்களுக்கு வேலைக்கு சென்று, பின், அதுவும் பிடிக்காமல் நின்று விட்டேன்.பின், எப்படியாவது, பி.எட்., படித்தே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, தந்தையிடம் பிடிவாதம் பிடித்து, படித்து முடித்தேன்.எனக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க, முடிவு செய்தனர், பெற்றோர். அதன்படி, முதல் கணவன் இறந்து, நான்கு ஆண்டுகளுக்கு பின், என்னை விட இரண்டு வயது இளையவருக்கு மறுமணம் செய்து வைத்தனர். அவர் கொத்தனார் வேலை செய்கிறார்.இரு வீட்டார் சம்மதத்துடன், திருப்பதியில் திருமணம் நடந்தது. கணவன், மனைவிக்குள் எந்த வித ஒளிவு மறைவும் இருக்க கூடாது; இருவரும் ஒருவர் பேச்சை ஒருவர் கேட்டு, அன்னியோன்யமாக, சந்தோஷமாக, இல்லறம் நடத்த வேண்டும் என்று ஆயிரம் கனவு கண்டேன்; அதில், ஒன்று கூட நிறைவேறவில்லை. கணவன் என்ற முறையில், இதுவரை, அவர் எனக்காக எதையுமே செய்ததில்லை. அத்துடன், திருமணத்திற்கு முன், நான், அவரிடம் போனில் பேசியதில் இருந்து, இந்த நிமிடம் வரை, நான் என்ன பேசினாலும், அதை, அவரது அக்கா, மாமா, பாட்டி எல்லாரிடமும் கூறி விடுகிறார்.எனக்கு, மாமியார், மாமனார் கிடையாது; ஒரே ஒரு நாத்தனார். அவருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன், நன்றாக வாழ்கிறார். புகுந்த வீட்டு உறவுகளிடம், கலகலப்பாக, வெகுளியாக பழகினேன். அதையே தப்புக் கணக்காக்கி, 'உன் பொண்டாட்டி படித்தவள்; உன்னை மதிக்க மாட்டாள். அவள் சொல்லைக் கேட்காதே...' என்று, என் கணவருக்கு சொல்ல, அதை, அப்படியே நம்புகிறார், என் கணவர். அத்துடன், என் முதல் கணவனை பற்றியும், என் நடத்தையை பற்றியும், ஆபாசமாக பேசி, வெறுப்பேற்றுவார்.இந்நிலையில், தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர் வேலை கிடைத்தது. வேலைக்கு சென்ற ஒரு மாதத்திலேயே உடம்புக்கு முடியாமல் போனது. மருத்துவரிடம் அழைத்துச் செல்ல கூறிய போது மறுத்து விட்டார். உடல் வேதனை தாங்காமல், நானே லேடி டாக்டரிடம் சென்றேன்.என்னை சோதித்து பார்த்து, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று சொன்னார், மருத்துவர். இதை, என் கணவரிடம் சொன்னேன்; அவர் சந்தோஷப்படவில்லை.தனியார் மருத்துவமனையில், 'செக் அப்'பிற்கு சென்றதற்கு, அவரது உறவினர்கள், 'இப்படி செலவு செய்தால், எப்படி முன்னுக்கு வருவே...' என்று சொல்ல, அன்றிலிருந்து அரசு மருத்துவமனையில் தான் பார்க்க வேண்டும் என்று கூறி விட்டார். இப்படி எந்த விஷயம் என்றாலும் அவரது உறவினர்கள் பேச்சைத்தான் கேட்கிறார். அத்துடன், தினமும் குடித்து, பத்து மணிக்கு மேல் வீட்டுக்கு வருவது, 'என்னை பிடிச்சிருக்கா; பிடிக்கலையா... இது, என் பிள்ளை தானா சத்தியம் செய்...' என்றெல்லாம் கேட்டு, என் மனதை காயப்படுத்திய பின், நிம்மதியாக உறங்குவார்; நான் விடியும் வரை அழுதபடியே இருப்பேன். இதனால், கர்ப்பிணி என்றும் நினையாமல், தற்கொலைக்கு முயன்று, காப்பாற்றப்பட்டேன். பொறுக்க முடியாமல், ஒருநாள் என் பெற்றோர் மற்றும் தங்கையிடம், 'இப்படியெல்லாம் பேசுகிறார்...' என்று, அவர் முன்னிலையிலே கூறினேன்; அவர் மறுக்கவில்லை. 'பேசினது தப்பு; இனிமேல் அப்படி பேச மாட்டேன்...' என்றார். ஆனாலும், மாறவில்லை. வாழ்க்கை கொடுத்தேன் என்ற பெயரில் என் வாழ்க்கையை சூன்யமாக்கிவிட்டார்.ஆனாலும், என் மனம், அவரை வெறுக்கவில்லை. அவரை பார்க்காமல், பேசாமல் ஒருநாள் கூட என்னால் இருக்க முடியாது. அவ்ளோ இஷ்டம் அவர் மேல். ஆனால், அவரோ, என் உடலுக்கும், சம்பளத்திற்கும் மட்டுமே ஆசைப்பட்டுள்ளார் என்பது இப்போது தான் புரிகிறது. என் கேள்வி எல்லாம் இது தான்...* குழந்தை பிறந்து, நான் அவர் வீட்டுக்கு செல்லும் முன், அவர் உறவினர்களை வரவழைத்து, இவர் என்னை சந்தேகப்பட்டு பேசிய வார்த்தைகளை கூறவா?* நான் பி.லிட்., பி.எட்., தமிழ் பாடம் படித்ததால், எனக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இல்லை என்கின்றனர்; இது உண்மையா?* நான், தற்கொலைக்கு முயன்ற போது மருந்து சாப்பிட்டதால், என் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு வந்திருக்குமா... கருத்தரித்த நாள் முதலே, அழுதபடியே இருக்கிறேன். இது, என் குழந்தையை பாதிக்குமா?* இனிமேல், நான் எப்படி புத்திசாலியாக நடந்து கொள்வது?* நான் சாதிக்க என்ன வழி, என் சிந்தனையை எதன் மீது செலுத்தினால், மனம் அமைதியடையும்.* 'இது என் பிள்ளையா சத்தியம் செய்...' என்று கேட்ட என் கணவருக்கு, இது, அவர் பிள்ளை தான் என்று நிரூபிக்கும் வழியை சொல்லுங்கள்.* கொலை, கொள்ளை மற்றும் குடிப்பழக்கம் கொண்டவருடன் கூட வாழ்ந்து விடலாம்; சந்தேக குணம் கொண்டவரிடம், எப்படி வாழ்வது! என் குழப்பத்தையெல்லாம் போக்கி, என் மனம் அமைதியடைய நல்ல பதில் தாருங்கள்!— இப்படிக்கு,அன்பு மகள்.அன்பு மகளுக்கு — முதலில், உன் சுயபச்சாதாபத்தை தூக்கி எறி; அப்போது தான் உன்னால் சாதிக்க முடியும். மாற்றுத்திறனாளியை, இரண்டாம் தாரமாக மணக்க நீ சம்மதித்திருக்க கூடாது. பெற்றோரின் முயற்சியை, முளையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். முதல் கோணல் முற்றும் கோணல் என்பது, உன் வாழ்க்கையில், நிரூபணம் ஆகிவிட்டது.தமிழ் இலக்கியம் படித்ததால் ஒன்றும் கெட்டு விடவில்லை. 'டெட்' எனப்படும், ஆசிரியர்களுக்கான, தகுதித் தேர்வு எழுது; தேர்வானால், நல்ல சம்பளத்துடன் கூடிய பணி கிடைக்கும்.திருமணமான ஆண்கள், மனைவி மீது, அளவான சந்தேகம் கொள்வது இயற்கை. அது, மனைவி மீதான காதலால் வருவது. சந்தேக குணம், ஒரு கட்டுக்குள் இருக்கும் வரை, பெரிய பிரச்னைகள் வராது; ஆனால், உன் கணவன், அதன் எல்லையை மீறுகிறான் என்றே நினைக்கிறேன். மரபியல் சோதனை செய்து, உன் வயிற்றில் இருப்பது, உன் கணவனின் குழந்தை தான் என்றாலும், அறிக்கை மாறி விட்டது என, வாதிடுவான்.கர்ப்பிணியான நீ தற்கொலைக்கு முயன்றது பைத்தியக்காரத்தனம். முதலில், வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு ஏதாவது ஆகியுள்ளதா என்பதை, மகப்பேறு மருத்துவரிடம் கேட்டறி. ஊனத்துக்கு வாய்ப்பிருந்தால், கரு ஆரம்ப நிலையில் இருந்தால், தயங்காமல் கருச்சிதைவு செய்; குழந்தைக்கு ஏதும் பிரச்னை இல்லை என்றால், சந்தோஷமாக குழந்தையை பெற்றுக்கொள்.கொத்தனார் பணி செய்யும் உன் கணவனுக்கு, மாதத்தில், பதினைந்து நாள் பணி கிடைக்கலாம். சம்பளத்தின் பெரும் பகுதியை குடிக்க செலவிடுவதால், அவனுக்கு, எப்போதுமே, பணத்தேவை இருக்கும். அதனாலேயே, உன் சம்பாத்தியத்தையும் எதிர்பார்க்கிறான்.கொடுமைக்கார, 'சாடிஸ்ட் சைக்கோ' கணவனுடன் குடும்பம் நடத்துவது நல்லதல்ல; நீயும், உன் குழந்தையும் தனியே போய் விடுங்கள். கணவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெறு.உன் கல்வித்தகுதியை உயர்த்தி, நல்ல பணிக்கு செல்வது பற்றி திட்டமிடு. மொத்தத்தில், நீயும், உன் குழந்தையும் பொருளாதார தன்னிறைவு பெறுங்கள். உன் பெற்றோரிடமும், தம்பி, தங்கையுடனும் எப்போதும் நல்லுறவு பேணு.உலகில் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு விதமான பிரச்னை. அதனால் பிரச்னைகளை நினைத்து புலம்பாமல், வாழ்க்கையின் வெளிச்ச பக்கத்தை பார்; வெற்றி உனதே!— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்