உள்ளூர் செய்திகள்

அன்புடன் அந்தரங்கம்

அன்பு சகோதரிக்கு —நான், கிராமத்து பெண்; வயது, 55. எழுதப் படிக்க தெரியும்; இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். நானும், என் கணவரும் விவசாய கூலிகள்; அதனால், குழந்தைகளை ஆரம்ப பள்ளி வரை மட்டுமே படிக்க வைக்க முடிந்தது. 19 வயதான மூத்த மகளை சென்னையில், வசதியான வீட்டுக்கு வேலைக்கு அனுப்ப முடியுமா என, கேட்டு வந்தார், துாரத்து உறவினர் ஒருவர்.ஏழ்மை காரணமாக, அவளாவது மூன்று வேளையும் சாப்பிடட்டும் என நினைத்து, அவளை வேலைக்கு செல்ல வற்புறுத்தினோம். மறுத்தாள்; பலதையும் கூறி, வலுக்கட்டாயமாக அவளை சென்னைக்கு அனுப்பி வைத்தோம்.மாதா மாதம் சம்பள பணம் வீடு தேடி வந்தது; மற்ற இரண்டு குழந்தைகளை, பசி தெரியாமல் வளர்க்க முடிந்தது.அவள், வேலைக்கு சென்ற ஏழு ஆண்டுகளில், நடுவில், ஒரே ஒரு முறை மட்டுமே ஊருக்கு வந்தாள். தம்பி, தங்கையிடம் மட்டும் பேசி விட்டு, உடனே கிளம்பி விட்டாள்; என்னிடமோ, தன் அப்பாவிடமோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை.திடீரென ஒரு நாள், மகள் வேலை செய்த பணக்கார வீட்டு பெண்மணியிடமிருந்து கடிதம் வந்தது. அதில், எங்களது மகள், இரண்டு நாட்களாக காணவில்லை என்றும், ஊருக்கு வந்திருந்தால், தகவல் தெரிவிக்கும்படியும், அப்படியே, அவள் ஊருக்கு வந்திருந்தால், திரும்பவும் வேலைக்கு அனுப்ப வேண்டாம்; வயது பிள்ளையை வைத்து, எப்போதும் கண்காணித்துக் கொண்டிருக்க முடியாது என, எழுதியிருந்தார்.பதறியடித்து, சென்னைக்கு சென்று, பல இடங்களில் தேடியும், அவள் கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்திலேயே இறந்து போனார், கணவர்.அரசு அளித்த ஆடு மற்றும் மாடு வளர்த்து, ஓரளவுக்கு குடும்பம் தலை நிமிர துவங்கியது. மகனும், மகளும் பக்கத்து ஊரில் உள்ள கம்பெனியில் வேலைக்கு செல்ல ஆரம்பித்தனர்.நீண்ட இடைவெளிக்கு பின், சென்னை வந்த போது, எதிர்பாராத விதமாக, என் மகளை சந்திக்க நேர்ந்தது. அவளது தோற்றத்தில் இருந்து திருமணமாகியுள்ளதை தெரிந்து கொண்டேன். ஆசையாக பேச போனேன்; அவள் முகத்தை திருப்பிக் கொண்டதோடு, எடுத்தெறிந்து பேசினாள். என் மீது கொண்ட கோபம் இன்னும் குறையவில்லை என தெரிந்து, அழுதபடியே திரும்பி விட்டேன்.அவளை மீண்டும் பார்க்க வேண்டும்; ஒரு அம்மாவாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவும், அவளிடம் மன்னிப்பு கேட்கவும் தயாராக உள்ளேன். எங்கு, எப்படி என்று தான் தெரியவில்லை. மனம் முழுக்க அவள் நினைப்பு தான்; இந்த ஏழை தாய்க்கு ஆறுதல் தருவீர்களா...— இப்படிக்கு,உங்கள் சகோதரி.அன்பு சகோதரிக்கு —என்னதான் காரணங்களை அடுக்கினாலும், மகள் விஷயத்தில் நீ நடந்து கொண்ட விதம் மன்னிக்க முடியாத குற்றம். உன் குடும்பம் பசியில்லாமல் வாழ, 19 வயது மகளின் எதிர்காலத்தை காவு கொடுத்து விட்டாய். அவள் என்னென்ன கனவுகளில் மிதந்தாளோ அத்தனையையும் நாசப்படுத்தி விட்டாய்.ஒரு நாளின், 24 மணி நேரமும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர், வேலைக்கார பெண்கள். மற்றவர்கள் சாப்பிட்ட பின், மிச்ச மீதியை உண்டு வாழும் பரிதாப ஜீவன்களாக, வீட்டு மூலைகளில் பம்மிக் கிடக்கின்றனர். கை விரல்களுக்கு நடுவிலும், குதிகால்களிலும் பித்த வெடிப்பும், சேற்றுப் புண்ணும் வந்து அவதிப்படுகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கு கிடைக்கும் மரியாதையில், 10 சதவீதம் கூட வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு கிடைப்பதில்லை. வீட்டில் ஏதேனும் திருட்டு போனால், அந்தப்பழி, இவர்கள் மீது தான் விழுகிறது. சில பணக்கார பெண்மணிகள் தங்கள் வீட்டு வேலைக்கார பெண்களை, தோழியர் வீட்டில் வேலை செய்ய இரவல் தருகின்றனர்.இருபத்தியாறு வயது வரை, வீட்டு வேலை பார்த்து பார்த்து, ஒரு கட்டத்தில் அலுத்து சலித்து, வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறாள், உன் மகள். ஆனால், யாரோ ஒரு வாலிபனை முறைப்படி திருமணம் செய்து, கண்ணியமாக வாழ்கிறாள்.இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா... முதலில், உன் மகளின் முகவரியை தேடி கண்டுபிடி. நாளிதழில், மகளின் புகைப்படத்துடன் ஒரு விளம்பரம் கொடு அல்லது சமூக வலைதளத்தின் மூலமாக உன் மகளை தேடி கண்டுபிடி. பின், உன் குடும்பத்து பெரியவர்களுடன், நீயும், உன் மகனும், இளைய மகளையும் அழைத்துக்கொண்டு, புத்தாடை, இனிப்பு, நகைகள் வாங்கிப் போய் மூத்த மகளுக்கு பரிசளியுங்கள். எல்லார் முன்னிலையிலும் மகளிடம் மன்னிப்பு கேள். அவளின் கோபம் தணிய, அவள் கால்களில் கூட விழலாம்; தப்பில்லை. மருமகனிடம் அன்பு பாராட்டி, கவுரவப்படுத்து.'ஏழு ஆண்டாக வீட்டு வேலை செய்து, குடும்பத்தை கவனித்துக் கொண்டாய். மீதி வாழ்நாள் முழுக்க உனக்கும், உன் குழந்தைகளுக்கும் ஊழியம் செய்கிறேன். நான் கிராமத்துக்காரி; அறியாமையில் உன்னை வற்புறுத்தி வேலைக்கு அனுப்பி விட்டேன். தவறு செய்தல் மனித இயல்பு; மன்னித்தல் தெய்வ குணம். உன்னைக் காணாத பிரிவில் உன் அப்பா இறந்து போனார். அவரே உனக்கு மகனாய் பிறந்து, உன் பாச மழையில் நனைவார்...' என, உருக்கமாக மகளிடம் கூறு.நீரடித்து நீர் விலகாது சகோதரி... குஞ்சு மிதித்து கோழி சாகுமா... உலகின் உன்னதமானது, தாய் - மகள் உறவு தான். நீங்கள் இருவரும் உறவு பாராட்டி, அந்த உன்னத உறவை மகிமைப்படுத்துங்கள்.— என்றென்றும் தாய்மையுடன்சகுந்தலா கோபிநாத்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !