அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மா —நான், பெற்றோருக்கு ஒரே மகள்; வயது, 26; மிகவும் அழகாக இருப்பேன். எனக்கு தாய் மாமன்கள் மூன்று பேர்; அத்தை மகன்கள் இருவர். அனைவரும் என்னை திருமணம் செய்ய ஆசைப்பட்டனர். பிளஸ் 2வில் நல்ல மதிப்பெண் பெற்றதால், கல்லுாரியில் படிக்க அனுப்பினர்.நானும், ஆரம்பத்தில் நன்றாகவே படித்தேன். அதன்பின் வகுப்பு தோழன் ஒருவனுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது; நட்பு, காதலாக மலர்ந்தது.தாய் மாமன்கள் மற்றும் அத்தை மகன்களை அலட்சியப்படுத்தி, வீட்டினரையும் எதிர்த்து, காதலனை திருமணம் செய்தேன்.என்னை மேற்கொண்டு படிக்க வைத்தார், கணவர். டிகிரி வாங்கினேன்; வேலைக்கு செல்லவில்லை. இரண்டு ஆண்டுகள் சந்தோஷமாக இருந்தோம். குழந்தை இல்லை. மாமனார் - மாமியார் என் மீது அன்பாக இருந்தனர். திடீரென்று விபத்தொன்றில் இறந்து விட்டார், கணவர்.அதிலிருந்து, ராசியில்லாதவள் என்ற பட்டம் கட்டி, என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் மாமியார்.என் நிலை அறிந்து, பெற்றோர் அரை மனதாக ஏற்றுக் கொண்டனர். சிறிது காலத்துக்கு பின், அத்தை மகன் ஒருவன், என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பி, பெண் கேட்டு வந்தான். நானும், பெற்றோரும் சம்மதிக்க, திரும்பி செல்லும் போது, விபத்து ஒன்றில் சிக்கியதில் கை ஒடிந்தது. இதனால், என்னை துரதிருஷ்டசாலி என்று கூறி, திருமணத்திற்கு சம்மதிக்க மறுத்து விட்டார், அத்தை.தற்போது, பெற்றோரும் என்னை வெறுக்கின்றனர்.நான் என்ன செய்ய வேண்டும். யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல், எதிர்காலத்தை எப்படி அமைத்துக் கொள்வது. ஆலோசனை தாருங்கள்.— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —நாட்டுக்கு நாடு, மொழிக்கு மொழி, மதத்திற்கு மதம், எது நல்ல சகுனம், எது கெட்ட சகுனம் என்பதில் மாறுபட்ட கருத்துகள் உலவுகின்றன. சகுனம் பார்த்துதான் வாழ்க்கையை நகர்த்த வேண்டும் என்றால், வாழ்க்கை ஒரு இஞ்ச் கூட நகராது. வாழ்க்கை எனும் சாலையில், வேகத்தடை எனும் சகுனம் இருந்தால், வேகத்தடையை கவனமாய் கடந்து போக வேண்டும்; வேகத்தடையில் ஸ்தம்பித்து நின்றால், இலக்கை அடைய முடியாது.திருமணத்திற்கு தகுதியான ஆண் - பெண் போதும்.சாலை விபத்தில் உயிர் போகாமல், சொற்ப காயங்களுடன் உன் அத்தை மகன் உயிர் தப்பித்தது, ஒரு வழியில் பார்த்தால் சுப சகுனம் தானே...நீ காதலித்து, உனக்கு பிடித்தவனை திருமணம் செய்தபோது, 'அய்யோ... நம் அத்தை மகன்கள் பாவம்...' என்றா நினைத்தாய்... இல்லையல்லவா... நீ துரதிஷ்டசாலி என்று, உன் அத்தை மகன், உன்னை மறுமணம் செய்ய மறுப்பதையும் அதைப் போன்று, எளிதாக எடுத்துக் கொள். உனக்கு, 26 வயதுதான் ஆகிறது. பெரும்பாலும், படித்து, வேலைக்கு போகும் பெண்கள் இந்த வயதில் தான் திருமணம் செய்கின்றனர். தமிழகத்தில், திருமண வயதுள்ள ஆண்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். உனக்கு குழந்தைகள் இல்லாதது பிளஸ் பாயின்ட். மேட்ரிமோனியல் மூலம் தகுதியான வரன் தேடு.இளங்கலை பட்டப்படிப்பு படித்திருப்பாய் என நம்புகிறேன்; முழுவதும் பெற்றோரை சார்ந்து இருக்காதே. ஏதாவது வேலைக்கு சென்று, சொந்த காலில் நில்; மணமான ஆண்களையோ, தகுதி இல்லாதவர்களையோ காதலித்து விடாதே. மேட்ரிமோனியலில், இந்திரன் - சந்திரன் என, வரும், 'பயோடேட்டா'க்களை நம்பி விடாதே. நீ துரதிஷ்டசாலி இல்லை, மங்களகரமானவள். சிறப்பாக இரண்டாவது வாழ்க்கை வாழ காத்திருப்பவள் என முழமையாக நம்பு. அந்த நம்பிக்கை உன் முகத்தில் புது தேஜஸை கொண்டு வரும்; உன் செயல்களில் தெளிவை சேர்க்கும். உன்னை துரதிஷ்டசாலி என பழிப்போர் கூட, உன் திடமான நம்பிக்கையை கண்டு தங்களது அபிப்பிராயத்தை மாற்றிக் கொள்வர்.ஆடம்பரமாக, கவர்ச்சியாக ஆடை அணியாதே... ஆனால், 'பளிச்'சென நேர்த்தியாக உடை அணி; மொத்தத்தில் புதிதாக பூத்த மலர் போல காட்சியளி.விவாகரத்து ஆனவனை மணக்காதே... மனைவியை இழந்த, குழந்தை இல்லாத, 30 வயது விதவனாக இருந்தால் பரிசீலனை செய்.'ஓடும் மீன் ஓட, உறுமீன் வருமளவு காத்திருக்குமாம் கொக்கு' என்பது போல காத்திரு; உனக்கேற்ற ஆண் மகன் வந்து, உன் பாலைவன வாழ்க்கையை சோலைவனமாக்குவான்.வாழ்த்துகள்!— என்றென்றும் தாய்மையுடன் சகுந்தலா கோபிநாத்.