அன்புடன் அந்தரங்கம்!
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு, 26 வயது ஆகிறது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே, அழகான மாப்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது, என் கனவாக இருந்தது. நானும் அழகாக இருப்பேன். பெற்றோருக்கு, ஒரே பெண்.என் மனம் போலவே மாப்பிள்ளை பார்த்தனர், பெற்றோர். என் கனவு நாயகனாகவே இருந்தார், அவர். எங்கள் ஜோடி பொருத்தத்தை பார்த்து, ஊரே மலைத்தது. என்னவர் அழகானவர் மட்டுமல்ல, அன்பானவராகவும் இருந்தார்.திருமணமான அடுத்த மாதமே கருவுற்றேன்; சந்தோஷத்தில் திக்குமுக்காடி போனேன்.வளைகாப்பு நடந்த அன்று, என் தலையில் பெரிய இடி விழுந்தது. விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றபோது, ஏற்பட்ட விபத்தில், என்னவர் பலியானார்.மீளா துயரில் ஆழ்ந்தேன்.இந்நிலையில், அச்சு அசலாக அப்பா போலவே வந்து பிறந்தான், மகன். அவனை பார்க்கும் போதெல்லாம், என்னவர் நினைவு வந்து விடுகிறது.'நான் ராசியில்லாதவள்...' என்று கூறி, என்னையும், மகனையும் தள்ளி வைத்து விட்டனர், புகுந்த வீட்டினர்.இப்போது, பெற்றோருடன் வசிக்கும் எனக்கு, ஒரே ஒரு ஆசை தான் உள்ளது... கணவருடன் வாழ்ந்த அந்த வீட்டில், நான் தொடர்ந்து வாழ வேண்டும். அந்த வீட்டின் ஒவ்வொரு சதுர அடியிலும், என்னவர் நிறைந்துள்ளார். அங்கு இருந்தால், என் மனதுக்கு சற்று ஆறுதல் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், இதற்கு மாமியார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார். 'உன்னை மதிக்காத வீட்டுக்கு நீ போக வேண்டாம். உன்னை கண்கலங்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்...' என்கின்றனர், பெற்றோர். கணவரோடு தான் வாழ முடியவில்லை. கணவரின் நினைவுகளுடன், அவர் வீட்டில் வாழ உரிமையாவது கிடைக்குமா?— இப்படிக்கு,உங்கள் மகள்.அன்பு மகளுக்கு —பூமியில், நுாறாயிரம் கோடி வகை, ஜீவராசிகள் உள்ளன. அவை அனைத்தும், பிறக்கும்போதே மரண தேதியுடன் பிறக்கின்றன. நகர ஆண்களின் சராசரி ஆயுள், 70 வயது. பெண்களின் ஆயுள், 73. ஆண்களும் - பெண்களும் சராசரி வயது வரை வாழ்கின்றனரா... இல்லையே...நாளை என்பது யாருக்கும் நிச்சயமில்லை. பிறக்கும்போது, நாம் எதையும் எடுத்து வரவில்லை. மரணத்தின் போது, எதையும் எடுத்து போகப் போவதில்லை. எல்லா உறவுகளும் இடையிடையே வந்து போகும். நாம் நேசிக்கும் உயிர், எதிர்பாரா தருணத்தில் நம்மை பிரியும் அல்லது மிகவும் நேசிக்கும் உயிரை விட்டு, நாம் பிரிவோம்.உன் கணவர், அவரது பெற்றோரின், வீட்டின் ஒவ்வொரு சதுர அடியில் மட்டுமா நிறைந்திருக்கிறார், உன் இதயம் முழுக்க நிறைந்திருக்கிறார்.எங்கு சென்றாலும், உன்னவரின் ஆன்மா, உன்னை தொடரும். நீ விரும்பினால், இறந்த கணவரின் சொத்துகளுக்கு உரிமை கோரலாம். ஆனால், உன் கணவரின் பெற்றோர், உன்னை உதாசீனப்படுத்தும்போது, அந்த வீட்டிலிருந்து அவரின் நினைவுகளை போற்றுவேன் என, பிடிவாதம் பிடிப்பது, மடமை. உன் ஆர்வ கொள்கை, யதார்த்த வாழ்க்கைக்கு சிறிதும் உதவாது.உனக்கு, அன்பான பெற்றோர் கிடைத்திருக்கின்றனர். அவர்களின் பராமரிப்பில் நீயும், மகனும் இருப்பது நல்லது. கணவர் உடுத்திய ஆடைகள், உபயோகித்த பொருட்கள் இருந்தால், அவைகளை பாதுகாத்து வை. மறதி என்பது, உலகின் எல்லா துக்கங்களுக்கும் அருமருந்து. கணவரின் மரணத்தால் ரணமான உன் இதயம், ஒருநாள் பூரண குணமடையும். என்ன படித்திருக்கிறாய், ஏதாவது பணியில் இருக்கிறாயா என்பதை, கடிதத்தில் குறிப்பிடவில்லை. இளங்கலை பட்டமோ, முதுகலை பட்டமோ பெற்றிருப்பாய் என நினைக்கிறேன்.ஏற்கனவே வேலைக்கு சென்று கொண்டிருந்தால், அது, உன் துக்கங்களுக்கு சிறந்த வடிகால். வேலைக்கு போகவில்லை என்றால், புதிதாக ஏதாவது ஒரு வேலையில் சேர். தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், உயர் கல்வி படி.பெற்றோர் வீட்டில் இடம் இருந்தால், தோட்டம் போடு. இசை கேள். புத்தகம் படி. உபயோகமான, 'டிவி' நிகழ்ச்சிகளை பார். கணவருக்கு பாக்கி வைத்திருந்த அன்பை, உன் மகன் மீது இரட்டிப்பாய் கொட்டு. அம்மாவிடம் மனம் விட்டு பேசி, மன பாரத்தை இறக்கு.உன் வயது, 26. நகர பெண்களின் சராசரி ஆயுள்படி பார்த்தால், இன்னும், 47 ஆண்டு வாழலாம். ஆண் துணையின்றி வாழ்வது கடினம். மனதுக்கும், உடலுக்கும் போட்டி வந்தால், பெரும்பாலும் உடலே ஜெயிக்கும். காதல் கணவர், நீ தன்னந்தனியாக உழல்வதை விரும்ப மாட்டார். நீ மறுமணம் செய்து, மகிழ்ச்சியாய் வாழ்வதே, உன் கணவருக்கு உவப்பான விஷயம். கணவரின் நினைவுகளை போற்றியபடியே, மறு வாழ்க்கை வாழலாம்.உடனே மறுமணம் செய்து கொள்ள, உன்னை கட்டாயப்படுத்தவில்லை. நல்ல குணமுள்ள வரனாக பார் அல்லது உன் பெற்றோரை பார்க்க சொல். மறுமணம் மூலம் கிடைக்கும் கணவரின் அன்பாலும், தாம்பத்யத்தாலும், உன் இழப்பு ஈடுகட்டப்படும். சோகத்திலிருந்து மீளும் மனோதிடத்தை, இன்றைய இளைய தலைமுறை பெண்கள் வரமாக பெற்றிருக்கின்றனர். உனக்கும், அந்த மனோதிடம் இருக்கும் என, நம்புகிறேன். கை கால்களை சங்கிலியால் பிணைத்து, பூட்டி கடலுக்குள் குதித்து, சில நொடிகளில் பூட்டை திறந்து, சங்கிலியை அகற்றி, கடலின் மேல் மட்டத்திற்கு வரும் மந்திரவாதியின் மனோபாவத்தை கைகழுவி, யதார்த்த கடலில், டால்பின் மீனாக நீந்து. வாழ்த்துக்கள்!- என்றென்றும் தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.